பெங்களூர் IT ஊழியர் தற்கொலை: முதலாளித்துவ நுகர்வுவெறியின் வகைமாதிரி!

பேராசான் மார்க்ஸ், “முதலாளித்துவம் குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிநய முகத்திரையைக் கிழித்தெறிந்து, குடும்ப உறவுகளை வெறும் காசு பண உறவாகச் சிறுமையுறச் செய்துவிட்டது” என்று கூறினார்.

1
தற்கொலை செய்து கொண்ட மென்பொறியாளர் அதுல் சுபாஷ்

மீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் அதுல் சுபாஷ் என்ற 34 வயதுடைய IT ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். தனது பிரிந்துபோன மனைவியும், அவரது குடும்பத்தினரும் தன்மீது வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக சுமார் 40 வழக்குகள் பதிந்துள்ளதாகவும், ஜீவனாம்சமாக மாதம் ரூ.40,000/- கேட்பதாகவும், தனது 4-வயது மகனைப் பார்ப்பதற்கும் ஒவ்வொருமுறையும் ரூ.30,000/- பணம் கேட்பதாகவும், மணமுறிவு செய்துகொண்டு வழக்குகளை முடித்துவைக்க மொத்தமாக 3 கோடி கேட்டு தொந்தரவு செய்துவருவதால் பெரும் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இந்தியாவில் திருமண விவகாரங்கள் தொடர்பான சட்டங்கள் முழுக்கவும் பெண்களுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக இருப்பதாகவும், பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு உரிய நீதி கிடைக்கப்பெறும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட அல்லது புதிதாக இயற்றப்பட வேண்டும் எனவும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் அதுதான் தீர்வா?

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவி-யில் நடந்த நீயா? நானா? நிகழ்ச்சியில் திருமணம் செய்துகொள்ள தற்கால ஆண்கள், பெண்கள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் என்ற தலைப்பில் பேசிய இளம் பெண்களும் அவர்களின் பெற்றோர்கள் அனைவரும் மாப்பிள்ளை சொந்தமாக எந்தவிதமான கடனும் இல்லாமல் வீடு வைத்திருக்க வேண்டும், ஆடம்பர கார், 2 கோடி வங்கியில் இருப்புத் தொகை, மாதம் 1 லட்சத்துக்கும் மேல் சம்பளம், தங்க நகைகள், வெளிநாட்டில் குறிப்பாக அமெரிக்காவில் அல்லது ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்யவேண்டும், தன்னையும் அங்கு கூட்டிச்சென்று அங்கேயே செட்டில் ஆகவேண்டும் என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். அதில் மருந்துக்குக்கூட மாப்பிள்ளை ஒரு நல்ல குணவானாக, எந்த கெட்ட பழக்கங்கள், நோய்நொடி இல்லாதவனாக, பெண்களை சமமாக மதிப்பவனாக, சமூகத்தின்மேல் அக்கறை உள்ளவனாக இருக்கவேண்டும் என்று கேட்கவில்லை. அதேபோன்ற வேறொரு நிகழ்ச்சியில் பேசிய ஒரு இளைஞர் தன்னுடைய காதலி வாடகை வீட்டில் வசிப்பதால் காதலைக் கைவிட்டதை எந்தவித சலனமோ குற்ற உணர்ச்சியோ இல்லாமல் சொன்னார்.

இவையெல்லாம் வெளிப்படுத்துவது என்ன? தங்களுக்கு ஏற்ற துணையை ஒரு ஆணும் பெண்ணும் தேடிக்கொள்வதும் தங்களது உறவின் அடையாளமாக குழந்தைகளை பெற்றுக்கொள்வதும், தனது குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காக உழைப்பில் ஈடுபடுவதும் என்ற ஒரு ஜனநாயகமான சமுதாய ஓட்டம் இந்தியாவில் இல்லை. இங்கு திருமணம் என்பதே தங்களது சொத்தை, சாதியை, மதத்தை பாதுகாத்துக்கொள்வதற்கும், தங்களது கௌரவத்தை, பகட்டை வெளிப்படுத்திக்கொள்வதற்கும் பெற்றோரால் தீர்மானிக்கப்படும் இந்தியத் திருமணங்களில் அப்பட்டமாக வெளிப்படுவது பரஸ்பர அக்கறையோ, காதலோ இல்லாத வலுக்கட்டாயமான இணைவுதான்.

ஆண்கள் மட்டுமே படித்து பொருளீட்டிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்பது முதல் பெண்ணிற்கு பாடத் தெரியுமா, கோலம் போடத் தெரியுமா, ஆடத் தெரியுமா என்று பல்வேறு நிபந்தனைகள் விதித்து பெண்களை வாட்டிவதைத்து வடிகட்டிக்கொண்டிருந்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பெண்களும் படித்து பொருளீட்டத் தொடங்கியதும் அவர்களின் வீட்டாரும் தற்போது மேற்சொன்னபடி பல நிபந்தனைகளை விதிக்கின்றனர். ஆகமொத்தம் அன்றிலிருந்து இன்றுவரை இந்தியத் திருமணங்கள் இயற்கையான உந்துதலில் அல்லது காதலின் அடிப்படையில் நிகழாமல் சொந்தம், சாதி, மதம், ஜாதகம், பொருளாதாரம் உள்ளிட்ட புறக்காரணிகளுக்காகவே  நடந்துவருகிறது. திருமணம் என்பதே ஒரு வியாபார நடவடிக்கையாக அதில் மணமக்களே விற்பனைச் சரக்குகளாக நிறுத்தப்பட்டனர். முடிந்தளவு சம்பந்தி வீட்டாரிடமிருந்து கறந்து வியாபாரத்தை படியவைப்பதே ஒரு நல்ல மண ஒப்பந்தம் என்றாகிட்டது.


படிக்க: 9 வயது குழந்தை தற்கொலை! டாக்டர் பரூக் அப்துல்லாவின் ஆலோசனை!


இந்தநிலையில்தான் 1990-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் பொருளாதாரக் கொள்கைகளாலும் தரகு முதலாளித்துவதாலும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் அது தொடர்புடைய துறைகளில் மிகப்பெரும் வளர்ச்சியடைந்தது அத்துறையில் வழங்கப்பட்ட தேவைக்கு அதிகமான சம்பளம் ஒரு புதிய நடுத்தர மேட்டுக்குடி கும்பலை உருவாக்கியது. ஏற்கனவே நன்றாகப்படி, நல்ல வேலைதேடு, நல்ல சம்பளம் வாங்கு,  வெளிநாட்டில் செட்டில் ஆகு, பணக்கார ஜோடியைப்பிடி,  சொந்த வீட்டைக்கட்டு/வாங்கு, விலையுயர்ந்த காரை வாங்கு, ஆடம்பரமாக வாழ், சகமனிதனைப் பற்றி கவலைப்படாதே, சமூகத்தில் என்ன நடந்தாலும் திரும்பிப் பார்க்காதே என்று குழந்தைப்பருவத்திலிருந்தே தனியார் கல்விக்கூடங்களிலும், வீட்டிலும், சமுதாயத்திலும் சுயநலத்தையே போதித்து வளர்க்கப்பட்ட அக்கும்பல் பணத்தால் எதையும் வாங்கிவிடலாம் என்று பொருளாதாரரீதியிலேயே அனைத்தையும் பார்த்தது. இப்படி சுயநலன் என்ற வட்டத்துக்குள் வாழும் மனிதர்கள் ஒருகட்டத்தில் தங்களை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரைக்கூட தேவையற்ற சுமையாகக் கருதுகின்றனர். சகோதர சகோதரிகளையும், உறவினர்களையும் எதிரியாகப் பார்க்கின்றனர். இதைத்தான் பேராசான் மார்க்ஸ், “முதலாளித்துவம் குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிநய முகத்திரையைக் கிழித்தெறிந்து, குடும்ப உறவுகளை வெறும் காசு பண உறவாகச் சிறுமையுறச் செய்துவிட்டது” என்று கூறினார்.

ஒரு மனிதனை அவனுடைய குணநலன்கள், சமுதாயத்தின் மீது அவன் செலுத்தும் அக்கறை, பிறரை மதிக்கும் பண்பு, பிறர்மேல் காட்டும் இரக்கம், பரிவு போன்றவற்றைக் கருதாமல் அவன் என்ன சாதி, எவ்வளவு சொத்து தேறும், என்ன வேலை, எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பவற்றின் அடிப்படையில்தான் இந்திய சமூகம் எடைபோடுகிறது. உண்மையான காதலோ, அன்போ, பாசமோ, பரஸ்பர கடமையுணர்வோ இல்லாமல் வெறும் வெட்டி பந்தாவுக்காகவும், பொருளாதார நலனுக்காகவும் செய்யப்படும் திருமணங்களில் இணையும் ஆண்/பெண்ணின் திருமண வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்கும்?


படிக்க: Online Rummy தொடரும் தற்கொலைகள்! யார் குற்றவாளி?


மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் மேற்சொன்ன நிகழ்ச்சிகளில் பேசியவர்கள் திருமணம் செய்துகொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு மாதிரிதான் அதுல் சுபாஷின் தற்கொலை.

ஒருநாட்டில் நிலவும் பொருளுற்பத்தி முறையின் அடிப்படையில்தான் சமுதாயமும் இயங்கும் என்ற மார்க்சிய அறிவியல் விதியின்படி இந்தியாவில் தனிச்சொத்துடைமையை அடிநாதமாகக் கொண்டியங்கும் நிலப்பிரபுத்துவ/முதலாளித்துவ சமுதாயத்தில் உண்மையான காதலுக்கோ, மனித மாண்பிற்கோ மதிப்பிருக்காது. ஆதலால்தான் இந்தியாவிலும் தனிச்சொத்துடைமையைத் தகர்த்தெறிந்து அடிப்படை மனித இயல்புகள், மாண்புகளை செழிக்கச் செய்யும் சோசலிச சமுதாயத்தை நிறுவும் பாட்டாளி வர்க்கப்புரட்சி தேவைப்படுகிறது.

  • ஜூலியஸ்

1 COMMENT

  1. இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது தான் இந்தியாவில் திருமணங்கள் எதன் அடிப்படையில் நடைபெறுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
    ஆசான் மேற்கோளை சுட்டிக்காட்டி விளக்கியது எளிமையாக புரிந்து கொள்ள முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here