ரவாரம் நிறைந்த பெருநகர் ஒன்றில் சனிக்கிழமை மாலை திடீரென்று ஒரு கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டு ஓடியது. “நாங்கள் தான் ஒரிஜினல்! நாங்கள்தான் ஒரிஜினல்” என்ற அலப்பறைக் கூச்சல் கேட்டு எட்டிப் பார்த்தேன். ஒரு சிறிய கும்பல் என்பதால் அதற்குள் கண்ணிலிருந்து மறைந்து விட்டது.

பிறகு இன்றைய செய்திகளை தேடிக்கொண்டிருந்த போது சமூக வலைதளங்களில் ஒரு பெரிய , கும்பல் “நாங்கள்தான் ஒரிஜினல்” “நாங்கள்தான் ஒரிஜினல்” என்று பல கோணங்களில் கூச்சல் போட்டுக் கொண்டிருப்பதை காண முடிந்தது.

“கள்ளர், மறவர், அகமுடையார் மெல்ல மெல்ல தேவராயினர்” என்று ஒரு சொலவாடை தென் மாவட்டங்களில் உலா வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

சமீபத்தில் மென் பொறியாளரான கவின் செல்வகணேஷ், சுர்ஜித் என்பவரால் கொலை செய்யப்பட்ட பிறகு தனது ஆதிக்க சாதித் திமிரையும், வெறித்தனத்தையும் சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டுள்ளது ஒரு கும்பல் இவர்களும், “ஒரிஜினல் மேல் சாதி நாங்கள் தான்” என்று கூச்சல் போட்டுக் கொண்டுள்ளனர்.

“முக்குலத்தோர் வம்சமடா நாம செத்தாலும் நம்ம சாதி சாகக்கூடாது” என்பது தொடங்கி திரைப்படங்களில் வருகின்ற ஆதிக்க சாதி வெறியாட்டங்களை நியாயப்படுத்துகின்ற பாடல்களை தீம்களாக வைத்து பல முகநூல் குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை திரைப்படமாக வெற்றி மாறனும், மாரி செல்வராஜூம் எடுத்தால் இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ஒதுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள், பிதுக்கப்பட்டவர்கள் என்று பேசிக் கொண்டிருப்பீர்கள் என்று நக்கலடிக்கிறார்கள்.

கொலை செய்யப்பட்ட மென்பொறியாளரான கவின் செல்வகணேஷ் நம்ப வைத்து அழைத்துச் செல்லப்பட்டு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலையை செய்த பெண்ணின் அண்ணனான சுர்ஜித் இந்த கொலைக்கு முன்னரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் புகைப்படங்கள் போட்டு ரீல்ஸ் வெளியிட்டிருந்தார் என்பதெல்லாம் செய்தியாக வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக நெல்லை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’கடந்த 27ம் தேதி கவின் செல்வகணேஷ் (27) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த சுர்ஜித்(23) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பிறகு குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

படிக்க: சாதிவெறி கொலைகாரனை கொண்டாடுவதற்கு வெட்கமாக இல்லையா?  

கவின் காதலித்த பெண்ணின் தந்தையும், தாயும் போலீசு இன்ஸ்பெக்டர்கள் என்பதால் முதலில் தயக்கம் காட்டிய போலீஸ் தொடர் போராட்டங்களின் விளைவாக பெண்ணின் தந்தையை கைது செய்துள்ளது.

பட்டியல் சமூக மக்களின் மீது தனது சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டுகின்ற வகையில் நடத்தப்பட்ட இந்த ஆணவக் கொலை நடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் ஆதிக்க சாதி வெறியர்கள் நடத்தி வருகின்ற கருத்துரிமை கொலைகள் மற்றும் சாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்துகின்ற வகையிலான கருத்து பிரச்சாரங்கள், சாதி சங்கங்களின் பெயரால் வெளியிடப்படும் அறிக்கைகள், சாதி சங்கங்களை நடத்துகின்ற பல கிரிமினல் குற்றங்கள் புரிந்த, கொலைகள் செய்த தலைவர்கள் வெளியிடுகின்ற அறிக்கைகள் ஆகியவற்றினால் சமூகத்தின் இழிந்த நிலை பளிச்சென்று வெளியில் தெரிகிறது.

இத்தகைய அறிக்கைகள் அனைத்தும் அருவருப்பானதாகவும், மனிதத் தன்மையற்ற கொடூரமான வக்கிர உரையாடல்களாகவும் செப்டிக் டேங்கைப் போல் நிரம்பி வழிகிறது.

“பார்ப்பனியமே இந்து மதம். சாதியமே அதன் உயிர் நாடி” என்ற கொள்கையை மீண்டும் வலுவாக அமல்படுத்த துடிக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட சங் பரிவார கும்பல், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வட மாவட்டங்களில் வன்னியர், மேற்கு மாவட்டங்களில் கவுண்டர், மத்திய மாவட்டங்களில் முத்தரையர் உள்ளிட்ட சாதிகளையும், ஏற்கனவே இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளில் பொறுப்புகளில் உள்ள நாடார்கள் போன்ற இடைநிலை சாதிகளை முனைவாக்கம் செய்வதன் மூலமாக பார்ப்பன மேலாதிக்கத்தையும் பல நூற்றாண்டுகளாக கடைபிடித்து வருகின்ற சனாதன மரபுகளையும் சாதி தீண்டாமை கொடுமைகளையும் கட்டிக் காப்பதற்கு பல கோடிகளை செலவு செய்கிறது.

படிக்க: நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை! என்றுதான்டா அடங்கும் உங்கள் ஆதிக்க சாதிவெறி? மிருகங்களா!

கடந்த பத்தாண்டுகளாக இந்தியா முழுவதும் ஆதிக்க சாதி வெறியர்கள் மீண்டும் ஒரு புத்துணர்வு பெற்று ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அது சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களின் புனித கால்நடையான பசுமாடுகள் முதல் பழக்கவழக்கங்கள் நீண்ட கால மரபுகள் சடங்குகள் ஆச்சாரங்கள் போன்ற பல்வேறு பெயர்களில் ஆதிக்க சாதியினரின் வெறியாட்டங்கள் பார்ப்பனியத்தை நிலை நாட்டுகின்ற வகையில் படிநிலையில் கீழே உள்ள பட்டியலின சமூக மக்களின் மீதான தாக்குதல்களாக அதிகரித்துள்ளது.

தமிழகம் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகாது ‘ பெரியார் பிறந்த மண்’ என்று பெருமை மட்டுமே பேசிக் கொண்டிருப்பது ஆர்எஸ்எஸ் பாஜக உருவாக்குகின்ற ஆதிக்க சாதி முனைவாக்கத்தை எதிர்த்தாக்குதல் தொடுக்கின்ற துணிவை கைவிட்டு பெரியாரின் போராட்டங்கள் உருவாக்கிய, ‘ சமத்துவ உணர்விற்கு’ பின்னால் ஒளிந்து கொள்கின்ற கோழைத்தனமே ஆகும்.

திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் தேர்தலின் போது மாவட்டத்திற்கு வேட்பாளர்களை தேர்வு செய்கின்ற காலம் துவங்கி அதன் பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்ற சாதி அமைப்புகள், சாதி வெறியர்கள் முன்வைக்கின்ற வழிபாடுகள் ஆகியவற்றுக்கு பின்னால் செல்வதன் மூலம் இத்தகைய இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தை நியாயப்படுத்தியே வருகின்றனர்.

இதனால்தான் வேங்கை வயலில் குடிநீரில் மலம் கலந்த ஆதிக்க சாதி வெறியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இரண்டு சமூகத்தினர் மீதும் நடவடிக்கை எடுப்பது ஆதிக்க சாதி வெறியாட்டங்களை நடத்துகின்ற பிற்படுத்தப்பட்ட மேல் சாதியினரின் ஓட்டு வங்கிக்காக அவர்களுடன் சமரசமாக நடந்து கொள்வது என்ற சமூக நீதிக்கு விரோதமான செயல்களில் துணிச்சலுடன் ஈடுபடுகின்றனர்.

படிக்க: வேங்கைவயல் வழக்கு: திமுக அரசும் காவல்துறையும் அணுகும் விதமே விசாரணையின் நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது!

இத்தகைய சூழல் நிறைந்துள்ள போது ஆர்எஸ்எஸ் பாஜகவின் சாதிய முனைவாக்கம் ஆதிக்க சாதி அமைப்புகள் மற்றும் சங்கங்களுக்கு மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்து மீண்டும் ஒரு புத்துணர்வுடன் சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகின்றனர்.

சாதி ஆணவத்தை நிலைநாட்டுகின்ற படுகொலைகள் நிகழ்கின்ற போது ஒரு சில நாட்கள் அதைப் பற்றி எதிர் கருத்துக்கள் கோபாவேசத்துடன் பேசப்படுவதும், சாதியை ஒழிப்பது குறித்து விவாதங்கள் நடப்பதும் அதன் பின்னர் இது செய்தியாக மாறி கடந்து போவதும் என்ற நிலை மாற்றப்பட வேண்டும்.

கூலி விவசாயிகளாகவும், வேலை உத்திரவாதமற்ற தொழிலாளர்களாகவும், இன்ன பிற உழைப்பாளி வர்க்கங்களாகவும் பிரிந்து கிடக்கின்ற பெரும்பான்மை மக்கள், அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை; வர்க்கரீதியான ஒற்றுமை உருவாகாத வகையில் மிகப் பெரும் தடையாக உள்ள இந்த சாதிய சிந்தனை முறை மற்றும் சாதிய உணர்வுகள் ஆகியவற்றை தகர்த்தெரிகின்ற வகையில் நேருக்கு நேர் நின்று மோதுகின்ற வகையில் போராட்டங்களை நடத்த வேண்டும்.

சாதியத்தைக் கட்டிக் காக்கின்ற நிலப்பிரப்புத்துவ உறவுகளை தகர்த்தெறிகின்ற வகையில் விவசாயிகளை ஒன்று திரட்டிய ஒரு எழுச்சியை உருவாக்க வேண்டும். ஆனால் இத்தகைய முயற்சிகளுக்கு மிகப்பெரும் தடையாக சாதி சங்கங்கள் குறிப்பாக ஆதிக்க சாதி வெறி சங்கங்கள், மக்களை பிளவு படுத்திக் கொண்டும், தனது சாதிய பண்பாடுகளை உயர்ந்தது என்று கூச்சல் போடுவதும், தாங்கள்தான் ஒரிஜினல் மேல் சாதிகள் என்று கூப்பாடு போடுவதும் அதிகரித்துள்ள சூழலில் பாட்டாளி வர்க்கத்தின் வேலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 40 ஆண்டுகளாக பிளவுபடாமல் நக்சல்பாரி அரசியலைக் கொண்டு சென்ற புரட்சிகர அமைப்புகளை தனது பதவி வெறிக்காக, ‘ பார்ப்பான் கட்சியை உடைத்து விட்டான் ‘ ‘ தலைமையை கைப்பற்ற சதி செய்து விட்டார்கள்’ என்றெல்லாம் முன்வைத்து சாதியை முன்னிறுத்தி அமைப்பை பிளவுபடுத்துவதற்கே இத்தகைய சாதி பயன்பட்டது என்கிற போது பெரும்பான்மை உழைக்கும் மக்களை அவர்களின் உழைப்பின் பெயரால் ஒன்றுபடுத்துவது, வர்க்க ரீதியாக அணி திரட்டுவது மிகப்பெரும் சவாலான, ஆனால் கடுமையான போராட்டத்துடன் நிறைவேற்ற வேண்டிய பணியாகும்.

ஆதிக்க சாதி வெறி சங்கங்களை தடை செய்யக் கோரி போராடுவதுடன், இத்தகைய சங்கங்களை ஆதரித்து பெருமளவில் பொருளாதார உதவிகளை செய்து பாதுகாக்கின்ற ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளையும் தடை செய்யக்கோரி போராட வேண்டும்.

  • சீராளன்.

3 COMMENTS

  1. சிறப்பான முறையில் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது; அம்பலப்படுத்தல்களையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுரையாளர் அல்லது வேறு எவரேனும், எனக்கு ஏற்பட்ட ஒரு அய்யத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

    அதாவது கட்டுரையில் கீழிருந்து மேல் இரண்டாவது பத்தியின் முழுமையான சாரத்தை புரிந்து கொள்ள இயலவில்லை.
    சற்று விளக்கினால் நன்று என கருதுகிறேன்.

    • புரட்சிகர அமைப்பை பிளவுப்படுத்தவே சாதியை பயன்படுத்தும் பொழுது பெரும்பான்மை உழைக்கும் மக்களிடமிருந்து சாதியை அகற்றுவது சாதாரண காரியமல்ல என்கிறார் கட்டுரையாளர். நான் புரிந்துக் கொண்ட வரையில்… இதுதான்.

  2. ஆசிரியர் தோழர் சீராளன் அவர்களுடைய கட்டுரை மிக சிறப்பாக உள்ளது தோழருக்கு வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here