சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் பாலியல் வன்கொடுமை? முடிவு கட்டுவது எப்படி?

0
சமூக பொறுப்பு மற்றும் ஜனநாயக உணர்வு ஆகியவற்றை உருவாக்குவதன் மூலமே பெண்களை சமத்துவமாக கருதுகின்ற கண்ணோட்டத்தை உருவாக்க முடியும்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நபருடன் திங்கள்கிழமை இரவு கல்லூரி வளாகத்தில் தனியாக பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு அடையாளம் தெரியாத இருவர் வந்து, மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக ஞானசேகரன்(33) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் தலைநகரான சென்னையில் மையமான பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இது போன்ற கிரிமினல்கள் உள்ளே நுழைந்து மாணவிகள் மீது பாலியல் வன்கொடுமை ஏவி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

பெண்கள் மீதான ஆணாதிக்க சமூகத்தின் வக்கிர கண்ணோட்டம் இது போன்ற நிகழ்வுகளின் மூலம் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே உள்ளது.

வீட்டிற்கு வெளியில் சென்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலைமை தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் உருவாகியுள்ளது.

எங்கேயோ ஓரிடத்தில் நடக்கிறது, எப்போதோ நடக்கிறது. குறிப்பான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுத்து விட்டால் இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் என்று திருப்தியடைய முடியாது.

பெண்களுக்கு கடந்த ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகளாக தான் கல்வி கற்றுக் கொள்ளும் உரிமை வழங்கப்படுகிறது. அந்த உரிமையையும் ஒடுக்குமுறையை ஏவிய ஆணாதிக்க சமூகமோ, ஆதிக்க சாதியினரோ அல்லது பார்ப்பன கும்பலோ மனமுவந்து கொடுக்கவில்லை.

ஆண்களுக்கு பெண்களை சமமாக மதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் போராடிய சமூக சீர்திருத்த இயக்கங்களும், பெண்ணுரிமை இயக்கங்களும், கம்யூனிச இயக்கங்களும் இந்த பணியில் முன்னணியாக நின்று தொடர்ச்சியாக போராடியதன் விளைவாகவே இவை சாதிக்கப்பட்டுள்ளன.

ஒன்று, இரண்டு தலைமுறைக்குள்ளாகவே பெண்கள் மீண்டும் இது போன்ற கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதன் மூலம் பெண்கள் தலை நிமிர்வதை ஆணாதிக்க வக்கிர சமூகம் விரும்பவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. இன்னொரு புறம் பார்ப்பன (இந்து) மதம் பெண்களை இது போன்ற அடிமைகளாக வைத்துக் கொள்வதில் முன்னணியில் நிற்கிறது என்பது மட்டுமின்றி, ‘அடிமைத்தனம் தான் பெண்களின் கடமை’ என்பதை முன்வைக்கிறது.


படிக்க: பாலியல் குற்றவாளிகளை மக்கள் மத்தியில் தண்டிக்கவேண்டும்!


இந்த பாலியல் வன்கொடுமை குற்றத்தை நடத்திய கிரிமினல் பேர்வழியான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றாலும், உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதை உத்திரவாதப்படுத்துகின்ற வகையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது ஒரு அம்சம் தான்.

பள்ளி, கல்லூரி, மாணவர்கள் மற்றும் உயர்கல்வியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஆணாதிக்க வக்கிர சமூகத்திற்கு எதிரான, பெண்களை போகப் பொருளாகவும் அடிமையாகவும் கருதுகின்ற மனநிலையை உடைக்கின்ற ஜனநாயகப் பண்பை உருவாக்குகின்ற இயக்கத்தை துவக்கி நடத்த வேண்டும்.

பெண்களைப் பாதுகாப்பதற்கு ஆண்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்ற சூழலை சட்டத்தின் மூலமாக மட்டுமே சாதித்து விட முடியாது. சமூக பொறுப்பு மற்றும் ஜனநாயக உணர்வு ஆகியவற்றை உருவாக்குவதன் மூலமே பெண்களை சமத்துவமாக கருதுகின்ற கண்ணோட்டத்தை உருவாக்க முடியும்.

ஆனால் அதுவரை பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுகின்ற கிரிமினல் கும்பலை சட்டத்தின் மூலம் தண்டிப்பது அவசியம்.


படிக்க: பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் ஐஐடி நிர்வாகம்!


அதே சமயத்தில் காஷ்மீரில் சிறுமி ஆசிபா முதல் மணிப்பூர் மற்றும் பாசிச பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் பெண்களின் மீது நடத்தப்படுகின்ற ஆணாதிக்க வெறியாட்டங்கள் பாலியல் வன்கொடுமைகள் கொலை வெறி தாக்குதல்கள் போன்றவற்றுக்கு காரணமாக விளங்குகின்ற பாசிச பாஜக இதனை பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதன் உச்சகட்டமாக பாசிச கோமாளியான அண்ணாமலை சமீபத்தில் அறிவித்துள்ள போராட்டம் நமக்கு தெனாலிராமன் படத்தில் காவலனுக்கு கசையடி கொடுக்கின்ற வீரனின் பம்மாத்து அதன் பிறகு கசையடி கொடுக்க வடிவேல் கொடுத்த பாடம் ஆகியவை நினைவுக்கு வருகிறது.

அண்ணாமலை, “திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருந்து, அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன். நாளை காலை 10 மணிக்கு என் வீட்டுக்கு வெளியே நின்று, என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்வேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்..

இத்தகைய பாசிச கோமாளிகளின் போராட்ட முறையை வன்மையாக கண்டிப்பது மட்டுமின்றி பெண்களின் சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதும், ஜனநாயகப் பண்பை சமூகத்தில் உருவாக்குவதற்கு பொருத்தமான சமூக மாற்றத்தை உருவாக்குவதை நோக்கி முன்னேறுவோம்.

  • பா.மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here