பெண்ணை காதலித்ததற்காக 21 வயது இளைஞன் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான அழகேந்திரன் என்ற இளைஞர் அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் 19 வயது மகளும் காதலித்து வந்துள்ளனர்.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாத பெண்ணின் குடும்பத்தினர் பெண்ணின் தாய் மாமன் பிரபாகரன் மூலம் கடந்த திங்கட்கிழமை இரவு தொலைபேசியில் அழகேந்திரனை அழைத்து வீட்டை  விட்டு வெளியே வர கூறியுள்ளார். வெளியே வந்த அழகேந்திரனை வாகனத்தில் கள்ளிக்குடி அழைத்துச் சென்று கொலை செய்ததாக உறவினர்கள் கூறுகிறார்கள்.

பெரும்பாலும் காதலுக்காக நடக்கும் ஆணவக் கொலைகள் ஆதிக்க சாதியை சேர்ந்த பெண்ணை ‘கீழ் சாதி’ இளைஞன்  காதலித்தால் சாதி வெறி பிடித்த மிருகங்கள் கொலை செய்ய துணிவார்கள். ஆனால் அழகேந்திரன் கொலை அப்படியானது அல்ல. கொல்லப்பட்ட இளைஞன் அருந்ததியினர் சாதியை சேர்ந்தவராகவும், அவர் காதலித்த பெண் பள்ளர் சாதியை சேர்ந்தவராகவும் உள்ளனர்.

இருவருமே பார்ப்பனிய சாதி அடுக்கு முறையில் இந்த சமூகத்தால் தாழ்த்தப்பட்டவர்களாகவே கருதப்படுகிறார்கள். அப்படி இருந்தும் பள்ளர் சாதியை சேர்ந்தவர்கள் தனக்கு கீழான சாதியாக அருந்ததி சாதியை கருதுகிறார்கள். தானும் சாதிய  அடுக்கு முறையில் கீழாக பார்க்கப்படுகிறோம் என கருதாமல் தனக்கு கீழே ஒரு சாதி உள்ளதே என்ற எண்ணமே அல்லது உருவாக்கமோ அவர்களை கொலை செய்ய தூண்டி உள்ளது.

கொலை செய்யப்பட்ட அழகேந்திரனும்  அந்த பெண்ணும்  மனப்பூர்வமாக காதலித்து வந்துள்ளார்கள். அழகேந்திரன் காதலிக்க கட்டாயப்படுத்தவில்லை. அந்தப் பெண்ணை தொந்தரவு செய்யவும் இல்லை. பிறகு ஏன் இந்த கொலை நடந்தது?

தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த காலகட்டம் இது. சமூகமும் அதற்கேற்றார் போல் மக்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். காதலும் அதற்கேற்றார் போல் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் அறிமுகமாகி அது காதலாகி பலர் திருமணம் செய்து கொள்கிறார்கள். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆன்லைன் கேம் விளையாடும் போது அதில் அறிமுகமாகி திருமணம் செய்தவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதை பார்க்க முடிந்தது. வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் சாதி, மதம், இனங்கடந்து அங்குள்ள பெண்களை ஆண்களை விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இப்படிப்பட்டதொரு கால வளர்ச்சியில் ஆயிர ஆண்டுகளுக்கு முந்தைய மனநிலையை இவர்களிடம் புகுத்தியவர்கள் யார்? நம்மை  ஆதிக்க சாதிகள் அடிமையாக, கீழானவர்களாக கருதும்போது நாம் இன்னொருவரை கீழானவர்களாக பார்க்கும் கேடான மன நிலைக்கு தள்ளியவர்கள் யார்? என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது.

படிக்க:சாதி ஒடுக்குமுறை : உங்கள் முன்னே சில கேள்விகள்!

அழகேந்திரனின் ஆணவ படுகொலை சம்பவத்தில் இருந்து பரிசீலிப்போம். கொலையான அழகேந்திரன் அருந்ததியினர் சமூகத்தைச் சார்ந்தவர். அவர் காதலித்த பெண் பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். இருவருமே இந்த சமூகத்தால் பார்ப்பனிய அடுக்கு முறையால் சூத்திரர்கள். ஆனால் பள்ளர் சமூகத்தை சார்ந்தவர்கள் தனக்கு கீழான சமூகம் என்று அருந்ததியர் மக்களை பார்க்க தூண்டப்பட்டுள்ளார்கள்.

தாங்கள் தாழ்த்தப்பட்ட பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள் இல்லை என்றும் முற்காலத்தில் பிற்பட்ட வகுப்பை  சார்ந்த எங்களை தாழ்த்தப்பட்ட எஸ்சி வகுப்பில் சேர்த்தார்கள் என்றும் அதிலிருந்து எங்களை வெளியேற்ற வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளை கோரினார் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கிருஷ்ணசாமி.

அதுமட்டுமல்லாமல் 2015 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை அழைத்து தேவேந்திர குல வேளாளர்கள் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் தான் பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையையும் முன்மொழிந்தார் கிருஷ்ணசாமி. அமித்ஷாவும் பசு வணங்கும் தேவேந்திர குல வேளாளர்கள் எங்கள் சகோதரர்கள் எனப் பேசினார்.

அதன் பின் 2019 தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி வந்த பொழுது இது குறித்து பேசியதாவது, “தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் என்னை வந்து பார்த்தார்கள். அந்த மக்களின் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சிகளை என்னிடம் எடுத்துக் கூறினார்கள். அவர்களுக்கு நியாயம் வேண்டுமென்று என்னிடம் கேட்டார்கள். அவர்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு எஸ்சி எஸ்டி ஆணையத்திடமும், மாநில அரசிடமும் கேட்டுக் கொண்டேன். செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிற ஏற்றத்தாழ்வுகள் நீங்க வேண்டும்” என்று பேசினார்.

வெறும் வாயோடு வந்தவனுக்கு அவல் பொரி கிடைத்தது போல் ஆயிற்று தேவேந்திர குல வேளாளர் பிரச்சினை. தமிழ்நாட்டில் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த வாய்ப்பில்லாமல் போன பாஜக கும்பல் சாதி பிரச்சினைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயாராய் இருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளது.

அதனாலேயே அழகேந்திரன் படுகொலை விவகாரத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினை என பெரிதுப்படுத்தாமல் நைச்சியமாக கடந்துப் போகிறது பிண அரசியல் செய்யும் தமிழக பாஜக. அதே நேரத்தில் காதல் திருமணம் செய்து வைத்ததற்காக திருநெல்வேலியில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பாஜக ரவுடி கும்பல் சூறையாடியுள்ளனர்.

ஆதிக்க சாதிகளுக்கான சங்கங்களையும், கட்சிகளையும் உருவாக்கியது போல் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான கட்சி, அமைப்புகளை உருவாக்கி பாதுகாத்து அதனை வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்துவதோடு சாதிகளுக்குள் மோதல்களையும் உருவாக்குகிறது சங்பரிவார் கும்பல். ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்றோர்களை தனக்கு ஏற்றார்போல் பயன்படுத்திக் கொள்கிறது.

படிக்க: சாதி இந்திய சமூகத்தின் கொடிய நோய். அதுவே பாசிச பாஜகவின் அடித்தளம்!        

கல்வி, வேலை என தனக்கான அடையாளத்தை உருவாக்கி கொள்ள இயலாத இளைஞர்களிடையே சுய சாதி பெருமைகளை பேசி சாதி வெறியை உருவாக்குவது. சாதி மாறி திருமணம் செய்து கொண்டால் கொலைக் குற்றம் என்ற அளவுக்கு அவரகளின் மனநிலையை மாற்றியுள்ளது. அதனாலேயே ஆணவக் கொலை செய்பவர்கள் தன் சாதிக்கு பெருமை சேர்த்ததாக எண்ணிக் கொண்டு அதனை வீரம் எனக் கருதிக் கொண்டு கைதாகும் நிகழ்வுகளும் நடக்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜை ஹூரோ ரேஞ்சுக்கு உயர்த்திப் பிடிக்கிறார்கள் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சாதி வெறியர்கள்.

இந்த அபாயமான போக்கு ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவுகளுக்குள்ளும் உருவாகியுள்ளது. அழகேந்திரன் கொலையை அதற்கு தொடக்கமாக பார்க்கலாம். அழகேந்திரன் கொலையில் 2 சிறுவர்களையும் பயன்படுத்தியுள்ளது தெரியவருகிறது.

நாம் பல காலமாக சாதிசங்கங்களையும், கட்சிகளையும் தடை செய்ய வலியுறுத்துவதை அரசு கண்டுக் கொள்வதில்லை. ஆணவக்கொலைகளும், சாதிவெறி நச்சு கருத்துக்களும் இளைஞர்களிடம் பரவ விடாமல் தடுக்கப்பட வேண்டும். சாதி சங்கங்களையும், கட்சிகளையும் அதனை வழி நடத்தும் தலைவர்களையும் மக்கள் புறக்கணித்தால் மட்டுமே  சாதி ஆணவப் படுகொலைகளுக்குத் தீர்வு காண முடியும்.

  • நலன்

 

1 COMMENT

  1. கொலையான அழகேந்திரன் அருந்ததியினர் சமூகத்தைச் சார்ந்தவர். அவர் காதலித்த பெண் பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். இருவருமே இந்த சமூகத்தால் பார்ப்பனிய அடுக்கு முறையால் சூத்திரர்கள்”

    சூத்திரர்கள் இல்லை பஞ்சமர்கள்.

    “புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கிருஷ்ணசாமி.”

    கட்சி நிர்வாகி இல்லை. அவர்தான் கட்சியின் தலைவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here