
கார்ப்பரேட் ஊடகங்களால் பொழுதுபோக்கு என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு நடத்திவரப்படும் பல்வேறு சங்கிலித் தொடர் நிகழ்ச்சிகள் மக்களது வாழ்க்கையை எந்த அளவிற்கு சீரழித்து வருகிறது என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் கொண்டு நாம் புரிந்துக் கொள்ள முடியும்.
ஜி தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் சரிகமப லிட்டில் சாம்பியன் என்ற நிகழ்ச்சி ஜூனியர் 4 என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 என்ற பெயரில் சிறுமிகள், சிறுவர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
குரல் இசை தேர்வு என்ற பெயரிலும், செல்ல குரல் தேடல் என்ற பெயரிலும் ஒளிபரப்பப்படும் இத்தகைய ரியாலிட்டி ஷோக்களில் பாடல் பாடி தேர்வாவது, பின்பு படிப்படியாக சாம்பியனாக மாறுவதற்கு பழைய, புதிய பாடல்கள், பக்திப் பாடல்கள், குத்துப் பாடல்கள், காமாந்தக பாடல்கள் போட்டியிடுவது என்று நடந்து கொண்டுள்ளது.
ஏறக்குறைய இரண்டு நிகழ்ச்சிகளும் 2006-07 காலகட்டங்களில் இருந்து துவங்கி இன்று வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் இல்லத்தரசிகளின் விருப்பமான தொடராக மாறியுள்ளது. ஆண்களில் பலரும் இதில் விதிவிலக்கு அல்ல.
“இந்த வயசுல என்னமா பாடுறது, தெய்வத்தோட அனுக்கிரகம் இந்த குழந்தைக்கு வாச்சிருக்கு, கிராமத்தில் இருந்து வந்து அசத்திக் கொண்டிருக்கிறார், ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த இவருக்கு நல்ல குரல் வளம் இருக்கு” என்று பல்வேறு விதமான கமெண்ட்களில் இந்த நிகழ்ச்சிகள் ஊக்குவிக்கப்படுகிறது.
பொழுதுபோக்கு இல்லாமல் மனித வாழ்க்கை இருக்கிறதா எதை எடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு சில செய்திகளை நாம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்த இரண்டு ஜூனியர் நிகழ்ச்சியிலும் 6 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் சிறுவர்களை தேர்வு செய்கிறார்கள். இந்த சிறுவர்கள் குடும்பத்தினர் மூலமாகவோ அல்லது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்ற நிறுவனத்தின் மூலமாகவோ படிப்படியாக பாடல் பயிற்சியை பெற்று நடுவர்கள் சிலர் முன்னிலையில் பாடி தங்களது திறனை நிரூபித்து வருகின்றனர்.
இங்கிருந்து தான் சிக்கல் உருவாகிறது. இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கு என்று இந்த வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் தேர்ந்தெடுக்கும் பாடல்களில் பல ஆபாச வக்கிரத்தையும், கீழ்த்தரமான முக்கல் முனகல்கள் கொண்ட ஓசைகளையும் கொண்டு பாடப்படுகிறது. தமிழ் சமூகத்தை சீரழித்து வரும் பாடல்களால் நிரப்பப்படுகிறது.
தங்களது வயதுக்கும், அனுபவத்திற்கும் மீறிய பாடல்கள் இவர்களின் மீது திணிக்கப்படுகிறது. இதனால் மிக மிக சிறிய வயதிலேயே காதல், காமம், விரசம், ஆபாசம், ஏமாற்றம், கடி ஜோக்குகள் இவற்றை எதிர்கொள்வதற்கு இந்த மழலைப் பருவ தளிர்கள் டிசைன் செய்யப்படுகின்றனர்.
இதன் காரணமாக ஆபாச வக்கிரம் நிறைந்த நிறைந்த நிகழ்ச்சிகளாக இவை ஒவ்வொன்றும் மாறி வருகிறது என்பதை ஈழத் தமிழர்களின் ஆசிரியர்கள் அமைப்பு ஒன்று கடுமையாக கண்டித்து எழுதியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் சம்பள உயர்வு, சலுகைகளை பெறுவது என்பதிலேயே குறியாக இருக்கின்றனரே ஒழிய பொது சமூகத்தை சீரழிக்கின்ற இது போன்ற நிகழ்வுகளின் மீது எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றாமல் மொன்னையாகவும், மௌனமாகவும் கடந்து செல்கின்றனர்.
ஜீ தொலைக்காட்சியில் திவினேஷ் என்ற சிறுவன் தனது தாத்தாவின் மூலம் பாடல்களை தேர்வு செய்து பழைய பாடல்களை பாடி வருவதால் வயது முதிர்ந்த பலர் அவனது பாடலை ரசித்து வருகின்றனர் என்று உசுப்பேற்றி வருகிறது ஜீ தமிழ். இதன் உச்சகட்டமாக முதியோர் இல்லத்தில் இருந்து சிலரை வரவழைத்து அவர்கள் கண்ணீரும், கம்பலையுமாக திவினேஷை பாராட்டுவதை எடுத்து போட்டு தனது டிஆர்பி ரேட்டை உயர்த்துவதற்கு படாத பாடுபடுகிறது.
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட போது அந்த சிறுவனின் ரியாக்ஷன்களை கவனித்து இருந்தால் அவனது வயதுக்கு மீறி பாராட்டுகளும், கொஞ்சல்களும் அவனால் ஜீரணிக்க முடியாத அளவிற்கு இருந்தது என்பதை உணர முடியும்.
அதேபோல அபினேஷ் மற்றும் விஷ்ணு என்ற சிறுவர்கள் பாடுகின்றனர். இதில் ஒரு சிறுவன் பாடல் பாடிய பிறகு நடுவர்களில் ஒருவரான சைந்தவி, “வாராவாரம் உன்னையே நான் கொஞ்ச முடியுமா இதோ வரேன் டா” என்று கூறிக்கொண்டு தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவது போன்ற காட்சிகள் ஆபாச வக்கிரத்தின் உச்சகட்டமாக உள்ளது.
படிக்க:
♠ என்டிடிவி ( NDTV ) யை அதானி பறிக்கிறாரா ? ஜெயிக்கப்போவது யாரு ?
♠ மன்னித்துவிடு அன்கிதா! இதுதான் இன்றைய இந்தியா – காலின் கான்சால்வேஸ் கடிதம்
இதுபோல விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் தொடரில் பாடிவரும் ஆதனா என்பவர், ‘ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை’ என்ற பாடலை ஆபாச வக்கிர அசைவுகளுடன் பாடியதை நடுவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படும் சித்ரா, மனோ, மற்றும் ஈமான் குழுவினர் ஆடிப்பாடி வரவேற்கின்றனர்.
இந்த ஆபாச வக்கிரங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே இந்த போட்டியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் மத்தியில் படிப்படியாக பல சுற்றுகளில் சிலர் தேர்வாவதும், சிலர் வெளியேறுவதும் என்று உள்ளது. இவ்வாறு வெளியேறுபவர்கள் தனது வாழ்க்கையில் ஏதோ பெரிய விஷயத்தை இழந்து விட்டது போல ரியாக்சன் கொடுத்து அதையும் டிஆர்பி ரேட்டிங் ஏற்றுவதற்கு காட்டுவது ஆபாச வக்கிரத்தின் உச்சகட்டம்.
அதேபோல தகுதி சுற்றில் தேர்வானவர்களை நடுவர்களும் பிறரும் புகழ்கின்ற புகழ்ச்சியிலிருந்து ஏதோ உலகில் மிகப்பெரிய விஷயத்தை சாதித்து விட்டது போல அந்த போட்டியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் நடந்து கொள்வது இன்னொரு வகை ஆபாசத்தின் உச்சகட்டம்.
மனிதர்களுக்குள் உள்ள தனித்திறன்களை கொண்டு வருவதற்கு சில நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்பது சரிதான். ஆனால் வயதுக்கு மீறிய பாடல்களை தேர்வு செய்து ஆபாச வக்கிரமாகவும் கீழ்த்தரமான முக்கல், முனகல் சவுண்டுகளுடன் பாட வைத்து அதனையும் பெருமைக்குரிய விஷயமாக குடும்பத்தினர் முன்னாள் பேசுவது எந்த அளவிற்கு தமிழ் சமூகத்தின் பண்பாடு சீரழிந்து போய் உள்ளது என்பதை குறிக்கின்றது.
இந்த கன்றாவியான நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து அதன் மீது மதிப்பீடு சொல்கின்ற அளவிற்கு நமக்கு பொறுமை இல்லை என்றாலும் ஏற்கனவே தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கும் சிலர் மற்றும் இதற்கு எதிராக எழுந்த விமர்சனங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பரிசீலிக்கும் போது தான் எந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சிகளின் சீரழிவு புதிய உச்சத்தை தொட்டுள்ளதை உணர முடிகிறது.
இதேபோல டான்ஸ் போட்டி என்ற பெயரில் நடக்கின்ற ஜோடி நம்பர் ஒன்னு, பி பி ஜோடிகள், காமெடி காட்சிகள் என்ற பெயரில் நடக்கின்ற ஆபாச கூத்துகள் ஆகியவை எல்லாம் புதிய பரிமாணத்தில் சென்று கொண்டுள்ளன.
இந்த நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்ட காலமும் ஏகாதிபத்திய நிதி மூலதனம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கிய காலமும் அக்கம் பக்கமாக இருப்பது தவிர்க்க முடியாத ஒற்றுமை.
தனது பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியாத நிதி மூலதன ஏக போகங்கள் கார்ப்பரேட் ஊடகங்களின் மூலம் மக்கள் மத்தியில் பொழுதுபோக்கு, ஓய்வு ஆகியவற்றை இது போன்ற கீழ்த்தரமான ரசனைகளைக் கொண்டு நிரப்புவதன் மூலம் ஏகாதிபத்திய நிதி மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து திசை திருப்புகிறார்கள் என்பதுதான் இதில் அடிப்படையாக புரிந்துக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.
ஒவ்வொரு நிகழ்ச்சியாக எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு போட்டியாளரை பகுப்பாய்வு செய்து, அவர்களின் பாடல்களை பிரித்து மேய்ந்து இதன் மூலம் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்வதைக் காட்டிலும் தொகுப்பாக இந்த சீரழிவு கலாச்சாரத்தை உருவாக்குகின்ற கழிசடை ஊடகங்களை புரிந்து கொள்வதற்கு சில வகைகளை வரையறுத்துள்ளோம்.
இத்தகைய நிகழ்ச்சிகள் சிறுவர்களின் திறனை வெளிக்கொண்டு வருகிறது என்று தட்டையாக பார்க்காமல் எத்தகைய சீரழிவு அவர்களின் மனதில் திணிக்கப்படுகிறது. அந்த குடும்பமே எவ்வாறு அந்தரத்தில் மிதக்கிறது, புகழ் போதைக்குள் சிக்கிக் கொண்டு எவ்வாறு தவிக்கின்றது என்பதை எல்லாம் புரிந்து கொண்டால் தான் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கும் சமூகத்தில் நெருக்கடியான பிரச்சனைகளின் மீது பெரும்பான்மையான மக்கள் மௌனமாக கடந்து செல்வதற்கு உள்ள உறவை புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் இதனை இப்படியே அனுமதிக்க கூடாது.
- வவுனியன்.







‘சிறப்பான முறையில் ஏழை-பணக்காரர் பாபாடின்றி குழந்தைகளின் ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து சமூகக் கடமையாற்றுகின்றன ஜீ டிவி-யும், விஜய் டிவியும்…’ – என்ற கண்ணோட்டத்தில் ஆண்டாண்டு காலமாகவே சினிமா ரசிகத் தனத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ் நாட்டு மக்கள் இது விடயத்திலும் போதையில் தத்தளிக்கிறார்கள்! அதிலும் இந்நிகழ்வுகளில் ‘நடுவர்கள்’ என்ற ‘பதவி’களில் உட்கார்ந்து கொண்டு சில பிராணிகள் பண்ணுகிற அலப்பறை இருக்கிறதே அவற்றை சொல்லி மாறாது.
எப்படியோ இளஞ்சிறுசுகளை பிஞ்சிலேயே
பழுக்க வைக்கும் இக்கேவலமான நிகழ்ச்சி
களையும், நாட்டில் நிகழும் எண்ணற்ற பெரும் கொடுமைகள் துயரங்கள் – இவை எதனைப் பற்றியும் முற்றிலும் பாராமுகமாய்க கடந்து சென்று,இந்நிகழ்வுகளை குடும்பத்தோடு தவறாது கண்டு களித்து உல்லாசமாக குதூகுளிக்கும் ‘ஜந்துகளையும்’ என்னவென்று கூறுவது? இவை அனைத்தையும் ஒருமுகமாக அம்பலப் படுத்தியுள்ள கட்டுரையாளருக்குப் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!
பார்த்து
சூப்பர் கட்டுரை