
சமீபத்தில் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பரோலில் சென்ற யுவராஜை பெருந்தலைவர் போல் சித்தரித்து சாதி வெறியர்கள் கொண்டாடியது அந்த காணொளியை காண்பவர்களை வெட்கி தலைகுனிய செய்துள்ளது. இப்படிப்பட்ட அவலமான நபர்கள் மத்தியில் தான் நாம் வாழ்கிறோமா? என்ற கேள்வியை உருவாக்குகிறது.
அரசியல் ரீதியான கைதிகள் பரோலில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடாமல் கடுமையாக விதிமுறைகளை கடைபிடிக்கும் காவல்துறை இதுபோன்ற ஆதிக்க சாதி வெறிக் கொலை குற்றவாளிகளுக்கு பரோல் கொடுக்கும் போது அவற்றை காற்றில் பறக்கவிடுகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்தவர் 21 வயதான பட்டியல் சமூகத்தை சேர்ந்த கோகுல்ராஜ். இவர் முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர். கடந்த 2015 ஜூன் மாதம் 23ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையத்திற்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கோகுல்ராஜ் தனது தோழியுடன் கோவிலில் பேசிக் கொண்டிருந்த பொழுது ஒரு கும்பல் மிரட்டி அழைத்துச் சென்றதாக கோகுல்ராஜ் அண்ணனிடம் தெரிவிக்கிறார் சுவாதி. மறுநாள் கோகுல்ராஜ் பிணமாக மீட்கப்படுகிறார்.
ஒரே வகுப்பில் ஒன்றாக படித்த கோகுல்ராஜ் சுவாதியை காதலிப்பதாக கருதியே, இந்த கொலையை அரங்கேற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. காதல் என்ன குற்ற செயலா? இந்த ஆணவக் கொலையை செய்த ‘தியாகி’ தான் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவனான யுவராஜ்.
நீதிமன்றத்தால் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஜெயிலில் களி தின்று கொண்டிருப்பவன் தான் இந்த ஆதிக்க சாதி வெறி பிடித்த கொலையாளி. இந்த கொலை குற்றவாளியை தான் சமீபத்தில் கொண்டாடியுள்ளது ஆதிக்க சாதி வெறிக்கும்பல்.
படிக்க:
🔰 சாதி ஆணவக் படுகொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் வழக்கு!
🔰 அழகேந்திரன் ஆணவப்படுகொலை! மக்களுக்கு விடப்படும் எச்சரிக்கை!
யுவராஜ் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும் “அவனுக்கும் ஒரு குடும்பம் உள்ளது” என்று சிலர் மனிதாபிமானம், கருணை பொங்க பேசுகின்றனர். நியாயமாக யுவராஜின் குடும்பம் என்ன செய்திருக்க வேண்டும்? எந்த தவறும் செய்யாத தந்தையை இழந்து அந்த குடும்பத்தின் ஆணிவேராய் இருந்த முதல் தலைமுறை பட்டதாரியான கோகுல்ராஜை கொலை செய்த சாதி வெறியன் யுவராஜுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவனது குடும்பம் அறிவித்திருக்க வேண்டும்.
மாறாக அவனது கொலையை அங்கீகரித்து, சாதி வெறியை அங்கீகரித்து, அவனைப் போற்றி புகழ்வது அவன் செய்த கொலையை நியாயப்படுத்தும் செயல் அல்லவா! கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜுக்கு குடும்பம் இல்லையா? கோகுல்ராஜின் தாய் சொல்கிறார்: “என் மகனுக்கு ஏற்பட்ட நிலை இது யாருக்கும் ஏற்படக்கூடாது. அவன் யாரிடமும் எந்த தவறான நோக்கத்தோடும் பழகாதவன். இந்நேரம் அவன் இருந்திருந்தால் நல்ல வேலையில் இருந்திருப்பான், திருமணம் ஆகியிருக்கும்” என்கிறார். அந்தத் தாயின் மனம் எவ்வளவு வேதனையுடன் இதனை தெரிவித்து இருக்கும்.
தந்தை இல்லாத மகனை தனது கடின உழைப்பில் படிக்க வைத்து ஆளாக்கிய தாயின் தவிப்பை உணர்ந்திருந்தால் கொலைகாரன் யுவராஜை அவனது குடும்பமும் அவன் சார்ந்த சமூகமும் புறந்தள்ளி இருக்கும்.
ஆனால் அப்படி செய்யாமல் பரோலில் வந்த கொலைகாரனை சகல மரியாதையுடன் வரவேற்று அவனுடன் செல்பி எடுப்பது, காணொளியுடன் பின்னணி இசை கோர்த்து தியாகியை போல் போற்றி ரீல்ஸ் போடுவதெல்லாம் கோகுல்ராஜை திரும்ப கொலை செய்வதற்கு சமமானது.

மறுபுறம் கொலைகாரன் யுவராஜின் மனைவியோ தன் கணவர் ஏதும் அறியாதவர் என்றும், “உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் பொழுது எப்படி குற்றவாளி என்று கூறலாம்” என்று கூறிவிட்டு “பரோலில் வந்த எனது கணவரை பார்த்து நாடகக்காதல் கும்பல் எப்படி விமர்சிக்கலாம்?” என யுவராஜின் குற்றத்திற்கு குறைவில்லாமல் பேசுகிறார்.
சாதி என்ற மனநோய் பீடித்து இருக்கும் மக்களை மீட்பது கடினம். நாய்க்கு வெறி பிடிப்பது போல் சில சாதி வெறியர்களுக்கும் பீடித்திருக்கிறது இந்த நோய். அதன் காரணமாகத்தான் தன் சமூகத்தை சேர்ந்த பெண் மாற்று சமூகத்தை சேர்ந்த ஆணை காதலிக்கக் கூடாது என்று கொலை செய்கிறது. அப்படித்தான் இளவரசன், கோகுல்ராஜ், உடுமலை சங்கர் உள்ளிட்டோர் இந்த மிருகங்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில் ஆதிக்க சாதி இளைஞர்களால் அதே பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும்போது வேடிக்கை பார்க்கிறார்கள் ஆணாதிக்க வெறி பிடித்தவர்கள். ‘பெண்ணும் மண்ணும் சமம்’ என்பவர்கள் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நடந்தேறிய போது ஆணாதிக்க உணர்வில் சகஜமாக கடந்து போனவர்கள் தான்.
இவர்கள்தான் கொலைவெறியனை ஆதரித்து ரீல்ஸ் போடுகிறார்கள். ஏதோ தியாகியை போல் சோக கீதம் வாசிக்கிறார்கள். கொலை குற்றத்தில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் ஆதிக்க சாதி வெறியனை கொண்டாடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது கூட தான் செய்த கொலையை பற்றி சிறிதும் வருந்தாதவனை, வெளியில் நடமாட விட்டால் அவனைப் போன்ற சில நூறு பேரை உருவாக்குவான் இது சமூகத்திற்கு ஆபத்தானது. ஆதிக்க சாதி வெறி கொலை குற்றவாளி யுவராஜ் சொத்துக்கள் பறிக்கப்பட வேண்டும். சாதி வன்கொடுமை வழக்குகளில் தண்டிக்கப்படும் குற்றவாளிகளுக்கு பரோல் தருவது, ‘நன்னடத்தை’ காரணமாக தண்டனையை குறைப்பது போன்றவற்றை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். சாதி வன்கொடுமை குற்றவாளிகளை தொடர்பாக கடுமையாக நடந்து கொள்வதே ஒரு சமூகமாக நாம் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும்.
- நந்தன்
கொலைகாரனான ஆதிக்க சாதி வெறியன் யுவராஜ் பரோலில் வருகின்ற பொழுது மாபெரும் தியாகிக்கு மரியாதை செலுத்துவது போல் திக்கு சாதி வெறியர்கள்
வரவேற்பு அளிப்பது வெட்கக்கேடு! மானக்கேடு! இப்படிப்பட்ட இனங்களில் காவல்துறையும் நீதி துறையும் அரசும் போதிய காணும் செலுத்தி பரோலில் வெளிவரும் இத்தகைய ஈனத்த தனமான குற்றவாளிகளுக்கருகில் எவருமே நெருங்கி அணுகாதபடி அழைத்துச் சென்று வீட்டில் விடுவதோடு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்க வேண்டும். அதை மீறுகின்ற குற்றவாளிகளுக்கு இப்பொழுது வழங்கப்பட்டு கூடிய தண்டனையை இரு மடங்காக்க வேண்டும். அப்பொழுதுதான் அனைவருக்கும் அச்சம் வரும்!