புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை மார்ச்  02 தேதி காணாமல் போய் உள்ளார். பெற்றோர்கள் போலீசில் புகார் தந்து விட்டு தொடர்ந்து தேடி வந்தனர். 5 ம் தேதி அவர் வீட்டிற்கு அருகில் சாக்கடையிலிருந்து சிறுமியின் உடலை மீட்டுள்ளனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செய்யப்பட்ட உடற்கூறாய்வு முடிவானது, சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொன்றிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

முதல் கட்டமாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சிலரை காவல்துறை கைது செய்துள்ளது. அதில் 50 வயதான விவேகானந்தனையும், 19 வயது இளைஞன் கருணாசையும் குற்றவாளி என்கிறது காவல்துறை. அவர்களை குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் வருகின்றன.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் நிலையத்தில் உள்ள அத்தனை பேரையும் இடம் மாற்றம் செய்து ‘அதிதீவிரமான’ தண்டனையை வழங்கி உள்ளார். மேலும், ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவையும் அமைத்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசையோ சிறுமியின் வீட்டிற்குச் சென்று சிறுமியின் அம்மாவை கட்டித்தழுவி ஆறுதல் சொன்னார். குற்றவாளிகள் கடுமையாக துண்டிக்கப்படுவார்கள் என சூளுரைத்தார்.

வெடித்து கிளம்பும் போராட்டங்கள்!

பாண்டிச்சேரி மக்களோ இந்த கொடூரத்தை கண்டு கொதித்து தன்னெழுச்சியாக போராட்டங்களில் இறங்கினர். பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. கடந்த ஏழாம் தேதி இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் பந்த்தை அறிவித்து நடத்தின. இன்று எட்டாம் தேதி அதிமுக தனியாக பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

காவல்துறையோ போராட்டங்களை நசுக்குவதிலேயே, அடக்குவதிலேயே குறியாக உள்ளது. தன்னெழுச்சியாக திரண்டவர்கள் வேறு வழியின்றி கடல் நீருக்குள் இறங்கி போராடும் வரை சென்றனர். வணிகர்கள் கடைகளை அடைத்து கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி நீதிமன்றத்தில் உள்ள  வழக்கறிஞர்கள் யாரும் சிறுமையை கொன்ற கிரிமினல்களுக்காக வாதாட போவதில்லை; சிறுமியின் பெற்றோர் பக்கம் நின்று நியாயத்திற்காகவே குரல் கொடுப்போம் என அறிவித்தனர் . இவை அனைத்தும் வரவேற்கத்தக்கவை.

இதையும் படியுங்கள்: அஞ்சலி சிங் மரணம்: பெண்களுக்கு இந்திய தலைநகரிலேயே பாதுகாப்பில்லை! இராம ராஜ்ஜியத்தின் யோக்கியதை இதுதான்!

மனிதனை மிருகமாக்குவது எது?

போதை தான் என மருத்துவர்கள் அடித்துச் செல்கின்றனர். குஜராத்தில் 2000 இஸ்லாமியர்களை வெட்டிக்கொன்ற காவிகளை கேட்டால் வேறு பதில் வரும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் படுகொலை செய்கின்ற ஆதிக்க சாதி வெறியர்களை கேட்டால் வேறு பதில் வரும். வாச்சாத்தியில் கூட்டு பாலியல் வல்லுறவு செய்த காவல்துறையினரை கேட்டால் அவர்கள் பதில் வேறாக இருக்கும். காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவத்தை தான் கேட்க வேண்டும்; நீங்கள் என் மிருகமானீர்கள் என்று ?

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாண ஊர்வலம் விட்ட பா.ஜ.க. கட்சியின் தமிழிசை எப்படி கூச்சநாச்சம் இல்லாமல் ஆறுதல் கூற முடிகிறது என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.

நாம் மருத்துவர்களின் விளக்கங்களை எடுத்து பரிசீலிப்போம்.

மனிதனை ஆளும் போதை!

தமிழகத்தில் தான் கஞ்சா பயிரிடவோ, வைத்திருக்கவோ, கொண்டு செல்லவோ தடை உள்ளது. ஆனால் வட மாநிலங்களில் அது சாலையோர செடியாக பூத்துக் குலுங்குகிறது. மருத்துவ தேவைகளுக்காக என அரசே கஞ்சா தோட்டங்களையும் வளர்த்து வருகிறது. தனியார் கஞ்சா தோட்டங்களுக்கும் நம் நாட்டின் குறை ஏதும் இல்லை. இது போக நம்மை சுற்றியுள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மியான்மர் போன்ற நாடுகளிலும் அபின் உள்ளிட்ட போதை பொருள் உற்பத்தியும், சட்டவிரோத ஏற்றுமதியும் அமோகமாக நடக்கவே செய்கிறது.

போதை நுகர்வை எடுத்துக் கொண்டால் வளர்ந்த பெரு நகரங்களில் உள்ள மேட்டுக்குடியினருக்கு விலை உயர்ந்த, உயர் தரத்திலான போதைகளும், சாமானிய உழைக்கும் மக்களின் கைகளுக்கு, சேரிப்பகுதிகளுக்கு கஞ்சா போன்ற மலிவான போதைகளுமே பரவலாக கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்: 5லட்சம் கோடி மதிப்புள்ள 68,200 கிலோ போதை பொருள் பறிமுதல் ! இந்தியாவை போதையில் ஆழ்த்தி சுரண்டும் கார்ப்பரேட் காவி மோடி கும்பல்!

இதில் தென் மாநிலங்களில் உள்ள சென்னையும் புதுச்சேரி மாநிலமும் தனிச்சிறப்பான இடத்தை பெறுகின்றன.

புதுச்சேரி என்றாலே குடிமகன்களுக்கு சரக்கு தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் புதுச்சேரிக்கு சரக்கு அடிக்கவே வந்து செல்வதும் உண்டு. அதே ஊரில்  கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் தாராளமாக கிடைக்கின்றன. இதற்கும் பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

9 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ய மனிதத் தன்மை இருப்பவர்களால் முடியாது. அப்படி என்றால், இந்த சமூகத்தில் நம்மோடு கலந்து வாழ்ந்து வருபவர்கள் எப்படி மனிதத்தன்மையே இல்லாத மிருகங்களாக மாற்றப்பட்டார்கள்?

மருத்துவர்கள் ஆல்ஹகாலையும் தாண்டிய தீவிர போதை தான் இப்படி மிருகமாக மாறுவதற்கு காரணம் என்கின்றனர். அதுதான் மூளையில் உள்ள நமது சிந்தனைகளை உசுப்பி வெறியேற்ற வைத்து, விளைவுகளைப் பற்றி துளி கவலை கூட இல்லாமல் எந்த தீவிர நிலைக்கும் துணிந்து செல்ல தள்ளுகிறது என்கின்றனர்.

நிர்பயாக்கள் அதிகரிக்கின்றனர்!

டெல்லியில் நிர்பாயாவுக்கு நேர்ந்த கொடுமையை கண்டு நாடே கொந்தளித்தது. ஆனாலும் ஆங்காங்கே நிர்பயாக்கள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகிறார்கள்.

பெண்களை தாயாக, கடவுளாக போற்றி கொண்டாடும் நாட்டில்தான் படு கேவலமான, மிருகத்தனமான, பாலியல் வல்லுறவு குற்றங்களும் நடந்திருக்கின்றன.

வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலாவாக வந்த தம்பதியினர் திறந்தவெளியில், கூடாரத்தில் தூங்ககூட முடிவதில்லை; வட மாநிலங்களில் காம வெறியர்கள் குதறி எறிகிறார்கள்.

இத்தகைய வல்லுறவு படுகொலை குற்றங்கள் நடக்கும் போது அரசும் காவல் துறையும் தீவிரமான விசாரணை மேற்கொண்டு, புலனாய்வு செய்து உண்மையான குற்றவாளிகளைத்தான் கண்டுபிடித்து தண்டித்துள்ளதா?

ஏன் வல்லுறவு குற்றங்கள் தொடர் கதையாகிறது?

காவல்துறை விஷயத்தை மூடி மறைக்கிறது. உண்மையிலேயே டெல்லியிலோ, தெலுங்கானாவிலோ அல்லது நாடெங்கிலும் உண்மை குற்றவாளிகள் தான் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனரா?

இதையும் படியுங்கள்: தெலுங்கானா என்கவுண்டர்: போலீசு செய்த படுகொலை!

நம் நாட்டைப் பொறுத்தவரையில் குற்றவாளிகள் முக்கிய அரசியல் கட்சியினராகவும், அல்லது அவர்களின் செல்வாக்கை பெற்றவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் எளிதாக தப்பி விடுகின்றனர். போலீசாரே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டி பணிய வைத்து விடுகின்றனர். மீறினால் சாட்சிகளை அழித்து, சட்டங்களை வளைத்து, குதறப்பட்ட பெண்ணின் உடலை எரித்து, தடையங்களையும் அழித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கையறு நிலைக்குத் தள்ளி கதற வைக்கின்றனர்.

முறிக்கப்பட வேண்டியது அம்பு மட்டுமா? அல்லது வில்லுமா?

களத்தில் இறங்கி வேட்டையாடும் காமக் கொடூரர்களை ஈவிரக்கம் இன்றி தண்டிப்பதுதான் சரி. சாமானிய மக்களை படிப்படியாக போதைக்குள் இழுத்து, அவர்களை மிருகமாக்கி, கொல்லப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளிய அனைவரையும் சேர்த்து தண்டித்தாக வேண்டும். அம்பை மட்டுமே உடைத்துக் கொண்டிருந்தால் வில்லிருந்து அடுத்தடுத்து பாயத்தான் செய்யும். நாம் வில்லையும் சேர்த்து முறித்தாக வேண்டும்.

எப்படி பெண்ணினத்தை, சமூகத்தை காப்பது?

நாம் போதை பொருள் உற்பத்தி, கடத்தல், விநியோகம், சில்லறை விற்பனை நெட்வொர்க்கை நொறுக்கியாக வேண்டும். சர்வதேச  போதை  மாஃபியாக்கள் முதல் உள்ளூர் கிரிமினல் வரையிலான அனைவரும் அரசு அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும், பல்வேறு அரசியல் கட்சி தலைமைகளுடன் கொண்டுள்ள இணைப்பையும் கண்டறிந்து மொத்தமாக களையெடுக்க வேண்டியுள்ளது.

இதற்கு தற்போதுள்ள சட்டங்களும், விசாரணை முறைகளும், நீதிமன்ற நடைமுறைகளும் போதுமானதாக இல்லை.  அரசு கட்டமைப்பிலேயே தேவையான மாற்றங்களை கொண்டு வந்தாக வேண்டும். அதற்கு முதலில் கார்ப்பரேட் காவி பாசிச அரசை வீழ்த்தியாக வேண்டும். ஜனநாயக கூட்டரசை கட்டியமைத்தாக வேண்டும்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here