டிசம்பர் 3 ‘சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக” ஐநாவால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகில் வாழும் மக்கள் தொகையில் 10%பேர் மாற்றுத்திறனாளிகளாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 7 கோடி மாற்று திறனாளிகள் வாழ்வதாகவும் தமிழகத்தில் 16 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒரு நல்லெண்ண அடிப்படையில் கடைப்பிடிப்பதாக இல்லாமல் சக மனிதனாக அங்கீகரிக்கும் தினமாக மாற்றுவதற்காக போராட வேண்டிய தேவை இன்று உள்ளது.

முற்பிறவி பாவத்தால் சபிக்கப்பட்டவர்களே மாற்றுத்திறனாளிகள்  என்ற கர்மவினை கோட்பாட்டை ஆழமாக சமூகத்தில் விதைத்துள்ளது,  வர்ணாசிரமத்தை போதிக்கும் பார்ப்பன இந்து மதம். இத்தகைய இழி முற்பிறவி கர்மவினை விழுமியத்தின் காரணமாக  மாற்றுத் திறனாளி பெற்ற  குழந்தைகள் கூட   சமூகத்தல் இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளை தனிமைப்படுத்த சொல்கின்றன வேதங்கள். இத்தகைய ‘மாற்றுத்திறனாளிகளை சமூகத்துடன் ஐக்கியப்படுத்துவதற்கே தனிமைப்படுத்தலை முன்னிருத்தும் சனாதன இந்துமத மரபுகளை உடைத்தெரியும் தேவை உள்ளது”.

இத்தனை தடைகளையும் தாண்டி வரும் மாற்றுத்திறனாளிகளை இழிவான விமர்சனங்களுக்கு உள்ளாக்குவது என்ற நிகழ்வுவெளிப்படையாக  சமூகத்தில் உள்ளது. அதனை இந்த சமூகம் எளிமையாகவும் கடந்து செல்கின்றது.ஆனால் மறுபுறம் தங்களின் நல்லெண்ணத்தை காட்டுவதற்கு ஒருவடிகாலாக மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்திக்கொள்வதில் பொதுச் சமூகம் தவறுவதில்லை.

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நடைமேடையில் சக்கர நாற்காலியில் சென்ற கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களை உருவ கேலி செய்தது, சமூக ஊடகங்களில் வெளிப்படையாக நடந்தேறி உள்ளது. சமூகத்தில் கோலோச்சும் 3ஆம் தர பண்பாடுகளுக்கு  சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு நடைமுறை உதாரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் காவலர்களான நீதிமன்றங்கள். நரம்பியல் குறைபாடுகளுடைய மாற்றுத்திறனாளியான ஸ்டேன்ஸ் சுவாமி அவர்களுக்கு தண்ணீர்  குடிப்பதற்கு அவசியமான உறிஞ்சு குழாய்களுடன் கூடிய குடுவையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு   பதில் அளிக்க 20 நாட்கள் அவகாசம் கோரிய  என்ஐஏவின் கொலைபாதக வஞ்சக செயலை  ஏற்ற நீதிமன்றத்தின் பால் உங்களுடைய மதிப்பீடு என்ன?

80% உடல் ஊனம் என்று வகைப்படுத்தப்பட்டவர், தன்னுடைய அடிப்படைதேவைகளுக்கு மற்றவர்களை சார்ந்து வாழும் கட்டாயத்தில் உள்ளவர் பேராசிரியர் சாய்பாபா அவர்கள் ,ஒரு மாற்றுத்திறனாளி. அவருக்கு தேவைப்படும் அத்தியாவசியமான உதவிகளை வழங்க மறுத்துள்ளது  சிறைத்துறை. இத்தகைய இன்னலுக்கு உட்படுத்தும் அரசு நிர்வாகத்தை கேள்விகேட்கும் அதிகாரம் கொண்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலர் உண்டா? இது சாத்தியமா?

இதையும் படியுங்கள்: பேராசிரியர் சாய்பாபாவை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்!

மாற்றுத்திறனாளிகளாக இருப்பினும் அவர்கள் உழைக்கும் மக்களின்  பிரதிநிதிகளாக இருந்தனர்  என்பதாலே கொடுமைப்படுத்திய பாசிச அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது? மாற்றுத்திறனாளியாக இருப்பவர்களை அங்கீகரிக்கும் மருத்துவ சோதனை மற்றும் அலுவல் நடைமுறைகள், உழைக்கும் மக்களுக்கு கொடியதாகவும், தண்டனைக்குரியதாகவுமே உள்ளது.

அப்படி வழங்கப்படும் அங்கீகாரத்தில் 21 வகையினரே மாற்றுத்திறனாளிகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர். இன்றைய சூழலில் அதிகரித்துள்ள  இருதயம் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு  உழைப்பு சக்தியை இழந்தவர்கள் மாற்றுத்திறனாளிகளாக அங்கீகரிக்கப்படுவதில்லை.

அத்தகைய அங்கீகாரங்களுக்கு நிவாரணமாக போதிய வாய்ப்புகளோ, சந்தர்ப்பங்களோ இருப்பதில்லை. ஏனெனில் அரசு நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு  4% இட ஒதுக்கீடு வழங்க சட்டங்கள் இருப்பினும் நடைமுறையில் அமுல் ஆவதில்லை. மற்றொரு புறம் வேலை வாய்ப்புகளை வழங்கும் அரசு துறை நிறுவனங்களில் தனியார் காண்ட்ராக்ட் விடப்படுவதும், அரசு நிறுவனங்களே ஏலம் விடப்படுவதையும் பார்க்கின்றோம். தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் பெரும்பாலும் வழங்குவதில்லை! வழங்கவும் எவ்வித நிரப்பந்தகளும் இல்லை!

இத்தகைய வேலை வாய்ப்புகளை அடையும் கல்வியைப்  பெற, மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள்  பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  அத்தகைய தனி சிறப்பான  கல்வி, பயிற்சிகள் , மருத்துவ தேவைகளை வழங்கும் கட்டமைப்பை பெயரளவில் மட்டுமே கொண்டுள்ளன, மாநில அரசுகள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சிறப்பு மருத்துவ தேவை குறித்த எவ்வித அடிப்படை கட்டமைப்பையும் உருவாக்க தடையாக இருப்பது தனியார்மய கொள்கைகளே!. இதன் காரணமாகவே மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து சிறப்பு கவனத்தையும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பெற்று உள்ளன.

இத்தகைய சூழலில் தான் மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றிற்கு  பராமரிப்பு உதவி  தொகை என்ற பெயரில் சொற்பத் தொகையாக ரூ.1000 முதல் 2000 வரை   வழங்குகிறது. அதுவே தனியார் நிறுவனங்களில் மாத பராமரிப்பு தொகையாக ரூ.6000/- முதல் 20000/- வரை வசூலிக்கப்படுவதை நாம் காண்கிறோம்.

அங்கீகரிப்பதில்லை, அஙகீகரித்தாலும் போதிய மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு கவனம்  இல்லை, பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள உத்திரவாதப்படுத்தும் சட்ட நடைமுறை இல்லை.சமூகத்தில் சுயமரியாதையாக வாழ்வதற்கு எதிரான பார்ப்பன இந்து சமய விழுமியங்கள் என்பதோடு பிரச்சனை முடியவில்லை .அடுத்த சுரண்டலை மோடி அரசு GST என்ற வடிவில் இறக்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலி, செயற்கை பாகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மீதான வரி விலக்கை ரத்து செய்து 5% வரி விதிப்பை அமுல்படுத்தியுள்ளனர். கடந்த மாத GST வரி வசூல் இலக்கு அதற்கு முந்தைய மாதங்களில் இருந்து அதிகரித்து  சாதனைப்படைத்துள்ளது என்ற செய்தி, வரியை வருவாயை பெருக்குவதில் இருந்து   மாற்றுத்திறனாளி பயன்படுத்தும் சாதனங்களையும் விட்டுவைக்கவில்லை மோடி தலைமையிலான அரசு,என்பது தெளிவாகிறது. ஆம், தெய்வத்தின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு  5% வரி! சநாதனிகளின் வார்த்தைகளில் கூறுவதென்றால் பாவத்தை அனுபவிப்பதற்கு 5% வரி!! கார்ப்பரேட் ஆசாமிகளின் ஆட்சிக்கு எதிராக போராடுவதன் அவசியத்தை உணர்வோம், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவோம் என்று உறுதி ஏற்போம், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில்!

  • தமிழ் மாறன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here