மார்ச் 8 மகளிர் தினத்தையும் மற்ற ‘சிறப்பு’ தினங்களைப் போல முதலாளித்துவம் நுகர்வு வெறி சந்தையாகவே பயன்படுத்திக் கொள்கிறது. இந்த ஒரு நாள் சம்பிரதாய நாளாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. மகளிர் தினத்தின் வரலாறு தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. கடைசியில் முதலாளிகளுக்கு பயன்படும் ஒரு நாளாக முடிவடைந்து வருகிறது.

மார்ச் 8: உழைக்கும் மகளிர் தினம்

மகளிர் தினத்தை கொண்டாடும் முன் அதன் வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியம். 1910 ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகனில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் கிளாரா ஜெட்கின் தலைமையிலான உலக சோசியலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் பெண்களின் பிரச்சனைக்கு சோசலிச பார்வையில் உரிமையை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நவம்பர் 7 தோழர் லெனின் தலைமையில் புரட்சி நடந்தது. அதற்கு முன்னர் மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் உரிமைப் போரை தொடங்கினர். ரஷ்ய பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவு கூறும் வகையிலேயே மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. மார்ச் 8-ல் நடைபெற்ற போராட்டத்தில் ஆண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ரஷ்ய புரட்சியில் பெண்களின் பங்கு முக்கியமானது. பெரும்பாலான பெண்கள் செம்படையிலும் இணைந்து பணியாற்றினர். பின்னாளில் சோசலிச ரஷ்யாவை கட்டி அமைப்பதில் பெண்களும் முக்கிய பங்காற்றினார்கள்.

ஆனால் இன்று நிலைமையோ வேறு!

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் வெறும் கொண்டாட்ட நாளாகவே அனுசரிக்கப்படுகிறது தொழில்நுட்ப ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வளர்ச்சி அடைந்த நாடுகளாக இருந்தாலும் கூட பெண்களுக்கு அங்கு சுதந்திரம் கிடையாது. பணிபுரியும் இடங்களிலும், வீட்டிலும் பாலியல் ரீதியான துன்புறுத்தலும் உடல்ரீதியான துன்புறுத்தலும் தொடர்கிறது.

பெண்களை ஆண்கள் பெரும்பாலும் தங்களது உடலுறவு தேவை, வீட்டு வேலை உள்ளிட்ட பணிவிடை செய்வதற்கு மட்டுமே  பயன்படுத்திக் கொள்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமல்ல வேலைக்கு சென்று வரும் பெண்களும் கூட கணவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற நிலையே தொடர்கிறது. இதனால் உடல் சோர்ந்து மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். காலையில் எழுந்து தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து… இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பணிவிடை முடிய கிட்டதட்ட 16 மணி நேரத்திற்கு மேல் உழைக்கிறார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான். இதில் பணியிடத்தில் அவர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் வேறு.

இதையும் படியுங்கள்: வீட்டுப் பணியாளர்கள்: ஆறு வீடுகளில் வேலை செய்தால் தான் குறைந்தபட்ச ஊதியத்தை பெற முடியும்!

தொழில்நுட்பமும் பெண்கள் மீதான வன்முறையும்!

பெண்களின் உடலை வைத்து உலக அளவில் வியாபாரம் நடக்கிறது. பார்ன் சினிமாக்களும் கொடிகட்டி பறக்கிறது. பழைய காலத்தை போல் தியேட்டரில் பதுங்கி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை கையடக்க கருவிகளில் அனைத்தும் வந்துவிடுகிறது. ஆன்லைனில் பணம் கட்டி ஆபாச படங்களை பார்ப்பதும்,  வீடியோ காலில் ஷேட் செய்வதும் என்று தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பெண்கள் மீதான பாலியல் சுரண்டலை தீவிரபடுத்தியுள்ளது முதலாளித்துவம்.

சிலர் பெண்கள் விரும்பித்தானே செய்கிறார்கள் என்று கூறலாம். ஆனால் புறநிலையை ஆராய்வதில்லை. உலக அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட முதலாளிகளின் கையில் பல லட்சம் கோடிகள் சொத்து குவிந்து கிடக்கிறது. ஆனால் மறுபுறமோ விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவதும், பலர் வேலை இழந்து ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் உடலை விற்றாவது  தங்களை சார்ந்தவர்களின் பசியையும் தீர்க்க இந்த முதலாளித்துவத்தால் தள்ளப்படுகிறார்கள் என்பதே உண்மை.

மறுபுறம் பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவது deep fake வீடியோ என்ற மென்பொருள் மூலம் பெண்களின் நிர்வாண வீடியோக்கள் தயாரித்து பரப்புவது என்று வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பெண்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.

பெண்கள் அனைத்து துறைகளில் வளர்ந்து வந்தாலும் ஆணுக்கு நிகரான ஊதியமோ, சமத்துவமோ கிடைப்பதில்லை. ஒருபுறம் பாலியல் ரீதியான சுரண்டல் என்றால் மறுபுறம் உழைப்பு சுரண்டல். மென்பொருள் நிறுவனங்களிலும் ஆயத்த ஆடை நிறுவனங்களிலும் பெண்கள் அதிக அளவில் பணிபுரிகிறார்கள். வேலை கடுமையாக இருக்கும், ஆனால் ஊதியமோ மிகக்குறைவு கடந்த காலங்களில் ஆயத்த ஆடை நிறுவனங்களில் நடைபெற்ற தொழிலாளரின் போராட்டமே இதற்கு உதாரணம்.

இந்தியாவில் பெண்களின் நிலை!

சமீபத்தில் வந்த புள்ளி விவரங்களை இந்தியாவில் பெண்களின் நிலைக்கு சிறந்த உதாரணம் எனலாம். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஆறு பெண்கள் குஜராத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று புள்ளி விவரம் கூறுகிறது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை: 11 கொலை குற்றவாளிகள் விடுதலை! பில்கிஸ் பானோவுக்கு இழைக்கப்பட்ட அநீதி!

கட்டிய மனைவியை மனைவியின் மீது சந்தேகம் கொண்டு தீயில் இறங்கச் சொன்ன ராமன் பேரில் ஆட்சி செய்யும், ராமராஜ்யம் அமைக்கப் போவதாக கூறும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பெண்களின் நிலை படுமோசமாக உள்ளது. பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் குறிப்பாக உபியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு பல பெண்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அதில் பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கர் என்பவனுக்கு சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மட்டுமல்ல சிறுமிகளும் சங்பரிவார்  கும்பலாலும், போதை ஆசாமிகளாலும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த மே மாதம் மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல்  வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்: மணிப்பூர் பெண்கள் மீதான கொடூரம்: யாருக்கு அவமானம்?

இந்தியாவில் பெண்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆளும் பாசிச கும்பலோ அதனை கண்டும் காணாமலும் மறைமுகமாக ஆதரித்து வருகிறது. எட்டு வயது சிறுமி ஆசிஃபா காஷ்மீர் கோவிலில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதும் அதன் குற்றவாளியை ஆதரித்து சங்பரிவார் கும்பல் ஊர்வலம் நடத்தியதும் நாம் அறிந்ததே. 2002 ஆம் ஆண்டு பாஜக நடத்திய குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானோ 12 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு  ஆளாக்கப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 11 பேரை ‘ஐயர் மிகவும் நல்லவர்’ என்ற அடிப்படையில் விடுதலை செய்தது குஜராத்தில் ஆளும் பாஜக அரசு.  இதற்கெல்லாம் பாசிஸ்டுகளுக்கு ஆதாரமாய் இருப்பது சனாதன தர்மமே. இதை இந்தியா முழுவதும் கொண்டு செல்லவே, இந்துராஷ்டிரம் அமைக்கவே பாஜக தீவிரமாக வேலை செய்கிறது.

எப்படி ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட உழைக்கும் பெண்கள் களத்தில் இறங்கி போராடினார்களோ அதுபோல் காவி பாசிச கும்பலை வீழ்த்த அதற்கு அடிப்படையாய் உள்ள சனாதனத்தை வேரறுக்க பெண்கள் களம் காண வேண்டும். மகளிர் தினம் என்பது ‘வெறும் கொண்டாட்ட நாள்’ என்று கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலால் கட்டமைக்கப்பட்ட ஒன்று. மாறாக பாலியல் சுரண்டல், உழைப்பு சுரண்டலுக்கு எதிராக அதனை வீழ்த்த உறுதி ஏற்க வேண்டிய நாள் என்பதை கருத்தில் கொள்வோம். உழைக்கும் மகளிருக்கு முதன்மை எதிரியாக உள்ள கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்.

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here