இந்தியாவில் சாதிஆணவப் படுகொலைகள் என்பது வெகுஇயல்பான ஒன்று. இருபிறப்பாளர்களான பிராமன, சத்திரிய, வைசிய குலப் பெண்களை சூத்திரன் மணம் செய்து கொண்டால் அவனது உறுப்பை இழத்தல் மற்றும் சொத்துக்களை பறித்தல் என்பதை மனு சட்டம் VIII.374 தண்டனையாக குறிப்பிடுகிறது. “மனுசட்டம்” எந்த சட்டத்திற்கும் கட்டுப்பட்டதல்ல என்று சனாதனிகள் கொக்கரித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் சனாதன-சாதி வெறியர்களுக்கு எதிரான கோகுல்ராஜ் வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததுதான் என்பதில் ஐயமில்லை.
இந்த தீர்ப்பை பெற்றுத் தந்தமைக்காக மூத்த வழக்கறிஞர் தோழர் பவானி பா.மோகன் அவர்களை வாழ்த்தி பாராட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். அவருக்கு உறுதுணையாக இருந்த அனைத்து வழக்கறிஞர்களும் இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள். கோகுல்ராஜ் கொலைவழக்கு கடந்து வந்த பாதையை சற்று பின்னோக்கி நினைவு கூர்ந்தோமென்றால் இது எவ்வளவு பெரிய சாதனை என்பதை நம்மால் உணரமுடியும்.
2015 ஜூன் 23 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கோகுல்ராஜ் அவரது பெண் தோழி சுவாதியுடன் இருந்தபோது கடத்திச் செல்லப்பட்டார். ஜூன் 23 ஆம் தேதிஅன்றேகோகுல்ராஜின் தாய் சித்ரா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்தார். கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டது.
அடுத்த நாள் கோகுல்ராஜின் தலை மிகக் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு, நாக்குதுண்டிக்கப் பட்டு உடல் நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டிருந்தது.
கோகுல்ராஜ் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது, இவ்வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்த சேலம் அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டுவரப்பட்டது. உடல் கூறாய்வில் தனியார் மருத்துவரும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு முடிவில் 27ஆம் தேதி பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு கோகுல்ராஜ் மிகக்கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. .
குற்றவாளிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 6 பேர் கைது செய்யப்பட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜூலை 2ஆம் தேதி கோகுல்ராஜ் உடலை பெற்று பெற்றோர்கள் அடக்கம் செய்தனர்.
சாதி ஆணவப் படுகொலையான இந்தகோரக் கொலையை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்ரியாவின் திடீர் மரணத்திற்கு பிறகு
கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் என்று விளம்பரப் படுத்தப்பட்ட யுவராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள்
17பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அரசு வழக்கறிஞராக சேலத்தைச் சேர்ந்த கருணாநிதியும், யுவராஜ் தரப்பின் வழக்கறிஞராக மதுரை ஜி.கே. என்ற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜுவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வந்தனர்.
2015 டிசம்பர் 25ல் யுவராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் 7பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அதில் முக்கியமான சாட்சியான கோகுல்ராஜின் தோழி பிறழ்சாட்சியாக மாறினார். இதேபோல் அரசு தரப்பு சாட்சிகள் 40க்கும் மேற்பட்டோர் பிறழ்சாட்சிகளாக மாற்றப்பட்டு வழக்கின் போக்கே திசை மாற்றப்பட்டது. மற்றொரு முக்கிய சாட்சி ஜோதிமணி கொலை செய்யப்படார். மேலுமோரு சாட்சி சந்திரசேகர் இறந்துபோனார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி மாற்றப்படவேண்டும், மூத்த வழக்கறிஞர் பவானி பா.மோகனை அரசுதரப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என அப்போதைய நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் வழக்கறிஞர் பார்த்திபன் மனு அளித்து அம்மனு பரிசீலிக்கப்படவில்லை. உயர்நீதிமன்றத்தில் கோகுல்ராஜின் தாய் சித்ரா மனு தாக்கல் செய்ததன் அடிப்படையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கருணாநிதியை விடுவித்து அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி பா. மோகனை நியமித்து உத்தரவிட்டது. இந்த நியமனம் தமிழக உள்துறைச் செயலாளரின் அரசாணை மூலம் உறுதி படுத்தப்பட்டது. உத்தரவு கிடைக்கப் பெற்றபோது நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருந்தனர். 2019 மே.5ஆம் தேதி முதல் இந்த வழக்கு, மதுரை எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற துவங்கியது.
அரசு போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. எடப்பாடிஅரசு வழக்கை முடக்குவதிலேயே குறியாய் இருந்தது என்ற போதிலும் வழக்குரைஞர் மோகன்
இந்த வழக்கை முன்முயற்சியுடன் நடத்தினார். கடுமையாக முயற்சி எடுத்து சுமார் 110 சாட்சிகளை இரண்டாவது முறையாக மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து குறுக்கு விசாரணைசெய்து நீதியை நிலைநாட்ட போராடினார்.

கடந்த ஏழு ஆண்டு காலமாக நடைபெற்று வந்த வழக்கு பிப்ரவரி மாதம் விசாரணை முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு 05-03-2022 அன்று வெளியிடப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் எனறு நீதிமன்றம் அறிவித்தது. சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 08-03-2022 அன்று அளிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பில் சாதிஆணவ கொலைக்குற்றவாளி யுவராஜிற்கு மூன்று ஆயுள் தண்டனை அளித்து வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலவளவு குற்றவாளிகள் அனைவரும் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்தநேரத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சமூகநீதி போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாட்டிலேயே இதுதான் நிலை என்றால் பிற மாநிலங்கள் குறித்து சொல்லத்தேவையில்லை. இந்திய சனாதனசாதிய சமூகத்தில் இருக்கக்கூடிய சாதீய மனநிலை, ஆதிக்கசாதி பெருமிதம் இவைகள்
சாதியை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் கடத்திக்கொண்டிருக்கின்றன. இன்றும் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகளால் இனியும் நாம் எத்தனை சங்கர், இளவரசன், கோகுல்ராஜ் முருகேசன்களை இழக்கப்போகிறோம்?
ஆணவப் படுகொலைக்கு புதிய சட்டம், சிறப்பு சட்டம் போன்றவைகள் இயற்றப்பட்டாலும் அதனை போராடி பெறுவதற்குறிய துணிவை உருவாக்க வேண்டியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்திலும், கலாச்சார தளங்களிலும் உள்ள மனுவாத உள்ளடக்கத்தை எதிர்த்து மாபெரும் மக்கள்திறள் போராட்ட இயக்கங்களை கட்டியமைப்பதற்கு கம்யூனிஸ்டுகளும், அம்பேத்காரும் பெரியாரும் தேவைப்படுகிறார்கள்.
நன்றி:
புதிய கலாச்சாரம் ஊடக செய்திகள்.