
இந்த மாதம் ஐந்தாம் தேதி அன்று டெல்லி சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக கூட்டணி 48 இடங்களில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட்டு 22 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்துள்ளது.
2014 வரை தொடர்ந்து மூன்று முறை டெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தனித்துப் போட்டியிட்டு, மூன்றாவது முறையாக, ஒரு சீட்டை கூட வெல்ல முடியாத நிலையில் இருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பாஜக அமோக வெற்றி பெற்றதற்கும் பல்வேறு காரணங்களாக கூறப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை நாம் பரிசீலிப்போம்.
பாஜக கூட்டணி 47.2% வாக்குகளையும் ஆம் ஆத்மி கட்சி 43.6% வாக்குகளையும் பெற்றுள்ளன. பாஜகவின் கூட்டணிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3.6%. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 6.3% வாக்குகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில் காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடாததே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டதற்கும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

2020 இல் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கும் 2024 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கும் இடையில் 4 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த ஏழு மாதத்திற்குள் நான்கு லட்சம் வாக்காளர்கள் டெல்லியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவே மிகப்பெரிய மோசடி.
இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டு இடையில் டெல்லியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27% குறைந்து உள்ளது எப்படி? சென்ற முறை 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அரவிந்த் கேஜ்ரிவால், அதே தொகுதியில், தற்பொழுது தோற்றுப் போய் உள்ளார். அந்தத் தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 37,000 வாக்குகள் காணாமல் போய் உள்ளன. இது தேர்தல் ஆணையத்தின் சித்து வேலை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட கடந்த ஐந்து மாதத்தில் 40 லட்சம் வாக்காளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். பாஜகவின் வெற்றிக்காக தேர்தல் ஆணையம் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் இது போன்றவைகள் நடக்காவிட்டால் தான் நாட்டு மக்கள் ஆச்சரியப்பட வேண்டும்.
படிக்க:
🔰 டெல்லி: ஆம் ஆத்மி தோல்வியும், பாசிச பாஜகவின் வெற்றியும்! நாட்டு மக்களுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை!
🔰 டெல்லி பாஜகவுக்கு வேலை செய்யும் தேர்தல் ஆணையம்!
இப்படி பாஜக-வின் வெற்றியை உத்திரவாதப் படுத்துவதற்கான வேலைகளை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருந்த பொழுதும், சங்கிகள் தங்களது முயற்சியை மட்டும் நம்பி இருக்காமல் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து சந்திரபாபு நாயுடுவையும் பீகாரில் இருந்து ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் புராரியையும் டெல்லிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வைத்தனர்.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ குறைந்தபட்சம் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட முன்வரவில்லை.
இந்த தேர்தலில், மகளிருக்கு மாதாந்திரமாக ரூ.2,500 நிதி உதவி வழங்குவது, தீபாவளி மற்றும் ஹோலி போன்ற பண்டிகைகளில் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்குவது போன்ற வாக்குறுதிகளை பாரதிய ஜனதா கட்சி வழங்கியதும் அக்கட்சியின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.
அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து துவக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி “ஊழலற்ற ஆட்சி அமைப்போம், லோக்பால் அமைத்து ஊழலைத் தடுப்போம்” என்று பேசி ஆட்சிக்கு வந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் லோக்பால் அமைப்போம் என்பதை குறித்து பேசுவதைக்கூட அந்த கட்சி கைவிட்டு விட்டது.
இந்த நிலையில், பாஜக அரசால் இக்கட்சியின் முக்கிய தலைவர்களின் மீது மதுபான ஊழல் வழக்குகள் பதியப்பட்டு அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாக “ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிரானது” என்று மக்கள் மத்தியில் இருந்த தோற்றம் அடித்து நொறுக்க பட்டுவிட்டதும் இந்த தோல்விக்கு காரணமாக இருந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் “வளர்ச்சி”, “வளர்ச்சி” என்று மட்டும் தான் பேசி வந்தாரே ஒழிய பாஜகவின் இந்துத்துவ அரசியலைப் பற்றியோ பாசிசத்தை பற்றியோ பேசவில்லை. அரவிந்த் கேஜ்ரிவால் மென்மையான இந்துத்துவ போக்கை கொண்டுள்ளவர் என்பதே இதற்குக் காரணம்.
2022 ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் சேர்த்து, விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படங்களையும் அச்சிடும்படி பிரதமர் மற்றும் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார். “நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு கூடுதலாக, கடவுளின் ஆசீர்வாதமும் நமக்குத் தேவையாக உள்ளது” என்று இதற்கு ஒரு ‘அறிவியல் பூர்வமான’ காரணத்தையும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இத்துடன் இவர் நிற்கவில்லை. இந்துக்களின் புனித யாத்திரைகளுக்கும் இந்துக்களின் ஆரத்தி வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்தார். இந்து மத வெறியர்கள் “ஜெய் பஜ்ரங்பலி” என்று முழங்குகின்றனரே, அதே பஜ்ரங்பலியை தனது கட்சியின் தெய்வமாக அறிவித்தார்.
அத்துடன் விட்டாரா அரவிந்த் கேஜ்ரிவால்? 2020 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது ஒவ்வொரு மாதத்திலும் முதல் செவ்வாய்க்கிழமையில், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் “சுந்தரகாண்டம்” பாராயணம் நடத்தவும் (பாடவும்) “ஹனுமான் சாலிசா” பாராயணம் நடத்தவும்(பாடவும்) அரசாங்கம் ஏற்பாடு செய்யும் என்றும் அவர் கூறினார்.
அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவின் போது டெல்லியின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சுந்தரகாண்டம் பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அரவிந்த் கேஜரிவால் கூறியதுடன் அதை நடத்தியும் காட்டினார்.
இப்படி நடந்து கொண்டதன் மூலம் ஆர் எஸ் எஸ் பாஜக -வின் சித்தாந்தத்திற்கு இணக்கமான கட்சியாக ஆம் ஆத்மி கட்சி தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.
ஊழல் எதிர்ப்பு பேசி கட்சியை துவங்கி, ஆட்சியைப் பிடித்த கேஜ்ரிவால் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றது, “ஊழலுக்கு எதிரானது ஆம் ஆத்மி கட்சி” என்ற மக்களின் எண்ணத்தை மாற்றியுள்ளது. அதேசமயம் ஆம் ஆத்மி கட்சிக்கும் பிஜேபிக்கும் இந்துத்துவ கொள்கைகளில் வேறுபாடு இல்லை என்ற எண்ணமும் டெல்லி வாக்காளர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி சிறப்பாக செயல்படாததற்கு மத்தியில் ஆளும் பிஜேபியுடனான அக்கட்சிக்கு இருக்கும் முரண்பாடே காரணம் என்று கூறப்படுவது வாக்காளர்களிடையே என்ன விதமான சிந்தனையை ஏற்படுத்தியிருக்கும்?
“ஆம் ஆத்மி, பிஜேபி இரண்டுமே இந்துக்களுக்கான கட்சிதான். மோடி, கேஜரிவால் இருவருமே வளர்ச்சி வளர்ச்சி என்று தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதால் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையில் முரண்பாடு தான் ஏற்படும். இதனால் டெல்லியின் வளர்ச்சி பாதிக்கப்படும். மாறாக பாஜகவிற்கு வாக்களித்தால் இரட்டை எஞ்சின் அரசாங்கம் ஏற்பட்டு டெல்லியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்” என்ற எண்ணம் தானே ஏற்பட்டிருக்கும்? மக்களின் இந்த எண்ணமும் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் இந்துத்துவ நிலைப்பாடு, ஆம் ஆத்மி காங்கிரஸ் இடையில் கூட்டணி ஏற்படாதது போலவே இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்வது போன்றவை பாஜகவின் பாசிச ஆட்சி செழித்தோங்கி வளர்வதற்கான வாய்ப்புகளாக சங்கிகளால் பார்க்கப்படும் என்பது உறுதி. தேர்தல் கூட்டணியோ ஐக்கிய முன்னணியோ உறுதியாக இருந்து பாசிசத்தை வீழ்த்த குறைந்தபட்ச பொதுத் திட்டம் ஒன்று இன்றியமையா தேவையாக உள்ளது.
—குமரன்