அல்லாஹ் அக்பர்


வாடைக்காற்று
வீட்டுக்கு கொண்டுவரும்
மசூதியின் பிரார்த்தனை கீதத்தில்
அல்லாஹ் அக்பரை கேட்போம்

எப்போதாவது பார்க்கும்
மாலிக் பாயின் உதடுகளில்
அநிச்சையாக
அல்லாஹ் அக்பர்
இருப்பார்

பேன் அரேபியா
தேசபக்திப் பாடலிலும்
லிபிய தேசியகீதத்திலும்
அல்லாஹ் அக்பரை
வரலாறு கேட்டது

மாண்டியாவின்
கல்லூரி வாசலில்
யுவதி ஒருத்தி
உக்கிரமாக முழங்கியபோது
இந்திய எல்லையைத் தாண்டி
அல்லாஹ் அக்பரை
உலக நாடுகள் கேட்டன

இடிக்கப்பட்ட மசூதியின் சிதிலங்களுக்கிடையே
பாபர் புரண்டு படுத்தார்

குர்ரானில் மூன்றே மூன்று
இடங்களில் காணப்பட்ட
அல்லாஹ் அக்பர்
முகநூலில்
டிவிட்டரில்
இன்ஸ்டாவில்
டிரெண்டிங்கானது

ஒரு இறை துதி
அரசியல் முழக்கமாக
பரிணமித்தது

கல்வி நிலையங்களில்
மாணவர்கள்
அல்லாஹ் அக்பர்
சொன்னார்கள்

டீ கடைகளில்
ரயில்வே சந்திப்புகளில்
கடற்கரையில்
விளையாட்டு மைதானங்களில்
அல்லாஹ் அக்பர்
கேட்க முடிந்தது

எம்.பிக்கள்
நாடாளுமன்றத்தில்
அல்லாஹ் அக்பர்
முழங்கினார்கள்

இன்குலாப் ஜிந்தாபாத்
ஜெய் பீம்
அல்லாஹ் அக்பர்

ஃபூஷன் இசைக்
கோர்வையொன்றின்
அடுத்தடுத்த வரிகளானது

அல்லாஹ் அக்பர்
அல்லாஹ் அக்பர்
அல்லாஹ் அக்பர்

கல்லறையில் தூங்கும்
கோட்சேவிலிருந்து
பாராளுமன்றத்தில் தூங்கும்
மந்திரிகள் வரை

காவித் துண்டால்
காதைப் பொத்திக்
கொள்கிறார்கள்!

கரிகாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here