த்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்கியாரா பகுதியில் நடந்துள்ள சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இரண்டு வாரங்களை கடந்தும் தொடர்கிறது.

நிலச்சரிவால் மூடப்பட்டுள்ள சுரங்கத்திற்குள் குடைந்து வழி ஏற்படுத்தும் முயற்சிகள் எதிர்பாராத தடையை சந்தித்து நிற்கின்றன. இரும்பு கம்பிகள் குறுக்கிட்டதால் கடையும் எந்திரத்தின் பிளேடுகள் நொறுங்கியுள்ளன.

நொறுங்கியுள்ள எந்திரத்தின் பாகங்களை ஹைதரபாத்திலிருந்து வரவைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா கட்டர் உதவியுடன் வெட்டி எடுத்து அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. அதாவது மனிதர்களை குகைக்குள் அனுப்பித்தான் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட தடைகளை வெட்டி அகற்ற முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டுள்ளது. எனவே தோண்டும் வேகம் குறையும் எனவும், மீட்புப்பணி இன்னும் கூடுதல் நேரம் எடுக்கும் எனவும் மதிப்பிடப்படுகிறது.

மெல்ல நகரும் மீட்புபணிகள்!

சுரங்கத்தின் மேல் புறத்திலிருந்து செங்குத்தாக துளையிட்டு அதன் மூலம் தொழிலாளர்களை மீட்கலாம் என்ற முயற்சியிலும் தொடர்ந்து தடைகள் உருவாகி வருகின்றன. நாமக்கல் போர்வெல் வண்டிகள் வரை உத்தரகாசி மாவட்டத்துக்கு   அனுப்பப்பட்டு முயற்சித்தாகி விட்டது.

உறுதியற்ற மலையின் மேல் முகட்டில் பல டன் எடை உள்ள ரிக் வண்டியை கொண்டு செல்வதே சவாலானது. சுமார் பத்து டன் எடையுள்ள எந்திரத்தின் உதவியுடன் துளையிடும் போது இவற்றை தாங்கக் கூடியதாக அடித்தளப்பகுதி உறுதியானதாக இல்லாமல் விரிசல் விடுகிறது. இதனால் துளையிடும் வேலை தடைப்படுகிறது.

ஆனாலும் சுரங்கத்துக்குள் சிக்கி தவிப்பவர்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் உணவு உள்ளிட்டவை தரப்படுவதும், அவர்களுடன் தொலைபேசி தொடர்பு உருவாக்கப்பட்டு இருப்பதும் ஆறுதல் அளிக்க கூடியதாக உள்ளன.

NHIDCL எனப்படும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி முகமை மூலம் கிடைமட்டமாக துளையிடும் வேலைகள் முன்னெடுக்கப் படுகின்றன. தற்போது இந்திய ராணுவமும் இந்த மீட்புப் பணியில் இணைந்துள்ளது.

யார் விபத்துக்கு பொறுப்பு?

ஆந்திரபிரதேசத்தில் உள்ள நவயுகா இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் தான் இந்த சுரங்கப்பாதை திட்டத்தை பொறுப்பெடுத்து கட்டி வந்துள்ளது. ஆனால் விதிகளை புறக்கணித்து கட்டுமானத்தை எழுப்பியுள்ளது.

சுரங்கப்பாதை அமைக்கும் போது ஒன்னரை கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றாலே அவசர காலங்களில் தப்பிப்பதற்கான பாதையையும் சேர்த்து அமைக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இந்த சில்க்யாரா சுரங்க பாதையில் திட்ட வரைப்படத்தில் மட்டும்தான் எஸ்கேப் பேசேஜ் எனப்படும் தப்பிக்கும் வழி உள்ளது. எதார்த்தத்தில் சுரங்கத்திற்குள் அப்படி தப்பிக்க உதவும்படியான எந்த ஒரு கட்டுமானத்தையும் எழுப்பாமல் கைவிட்டுள்ளது நவயுகா இன்ஜினியரிங் கம்பெனி. இதன் காரணமாகத்தான் தற்போது 41 தொழிலாளர்களின் உயிர் ஊசலாடிக்கொண்டுள்ளது.

தொடரும் நரபலிகள்!

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டுப்பற்று இருக்குமா? டாலர் பற்றுதான் இருக்கும். நவயுகா இன்ஜினியரிங் கம்பெனியின் கட்டுமானங்களில் விபத்து நடப்பது முதல்முறையல்ல.

மோடியால் கடந்த 2022 இல் தொடங்கிவைக்கப்பட்ட சம்ருதி அதிவிரைவு சாலை திட்டமானது மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ஒரு விபத்தை சந்தித்தது. சில்க்யாரா சுரங்கம் இடிவதற்கு 3 மாதத்திற்கு முன்னரே தானேயில் கட்டுமானம் இடிந்து விழுந்துள்ளது.  அங்கு ஒரு சப்வே அமைக்கும் போது கட்டுமானம் இடிந்து விழுந்து எஞ்சினியர் உட்பட  20 பேர் பலியாகியுள்ளனர்.

தானேவைத் தொடர்ந்து  சில்கியாராவிலும் விபத்து நடந்துள்ளது. இதையெல்லாம் விபத்து என கடந்து போக முடியுமா? ஆனால் அனைத்துக்கும் சூத்திரதாரியான மோடியோ துளிகூட கவலையில்லாமல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்க்கிறார்; உற்சாகமாக தேசஜ் போர் விமானத்தில் பறந்து, போட்டோ ஷூட் நடத்தி குதூகலிக்கிறார்.


இதையும் படியுங்கள்: உத்தரகாசி சுரங்க விபத்து: இமயமலையில் தொடரும் துயரம்!


இமயமலையில் இயற்கையை சீரழித்து உருவாக்கப்படும் கட்டுமானங்களால் மக்களின் உயிர்தான் பறிபோகிறது.  தவறான திட்டங்களால் ஒரு ஊரே மண்ணில் புதையுண்டுவிட்டதையும் நாம் உத்தரகாண்டின் ஜோஷிமாவில் பார்த்துள்ளோம். சிக்கிமில் ராணுவத்தினரும்கூட  அணை உடைந்து வந்த வெள்ளத்திற்கு பலியாகினர். ஆனாலும் மோடி அரசுக்கு இதைப்பற்றியெல்லாம் அக்கறையில்லை.  சீன எல்லையை நெருங்கும் விரைவுச்சாலை போட்டாக வேண்டும்.

மண்மூடிக்கிடக்கும் 41 மனித உயிர்கள் மீட்கப்பட வேண்டும். மீட்பதில் அக்கறை இருப்பதாக மோடிஅரசும் நடித்தாக வேண்டும். கார்ப்பரேட் லாப வெறிக்கும், காவி பாசிஸ்ட்டுகளின் இந்துராஷ்டிர சதிகளுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிராந்திய மேலாதிக்க வெறிக்கும் உழைக்கும் மக்களை நரபலியிட இனியும் அனுமதிக்க கூடாது. நாம் இத்தகைய நரபலியை தடுக்க, குற்றவாளிகளை தண்டிக்க,  கார்ப்பரேட் – காவி கூட்டணியை தகர்த்தாக வேண்டும். அதற்கு மோடி – அமித்ஷா கும்பலை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிவோம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here