ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் உள்ள 2.50 லட்சம் மக்களுக்கும், ஆண்டுதோறும் வருகின்ற சுமார் 2 கோடி சுற்றுலாப் பயணிகளுக்கும் 24 மணிநேரமும் சுத்தமான குடிநீரை குழாய் மூலம் வழங்கும்  “சுஜால்” திட்டத்தின் தொடக்க விழாவை ஜூலை 26 ல் நடத்தியுள்ளது நவீன்பட்நாயக் அரசு.

பூரி ஜெகன்நாதர் கோவில் திருவிழா கூட்டம்!

இதற்காக சமாங் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு மையம் மூலம் நாளொன்றுக்கு 4.20 கோடி லிட்டர் தண்ணீரை  பூரிக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

சுஜால் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டம் மூலம் ஒடிசாவின் பூரியானது லண்டன், சிங்கப்பூர், நியூயார்க் போல 24 மணிநேரமும் சுத்தமான தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. குழாயிலிருந்து நேரடியாக குடிக்க வைப்பதால் தண்ணீர் கேன் விற்பனை தேவையற்றதாகிவிடும். இப்படி தண்ணீர் பாட்டிலை ஒழித்துக்கட்டுவதன் மூலம் 400 டன் பிளாஸ்டிக் கழிவு உருவாவதையும் தடுக்கப்போகிறார்கள். நவீன் பட்நாயக் அரசின் இந்த  ‘சாதனை’ விளம்பரங்கள் ஒடிசாவைத்தாண்டி இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் பரப்பப்படுகிறது.

சிங்கப்பூரில் முன்னணி பிராண்டுகள்

நவீன் பட்நாயக் அரசு இந்த சுஜால் திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. மார்ச் 2022 க்குள் 15 நகரங்களில் 15 லட்சம் பேருக்கு சுத்தமான குடிநீரை, குழாய் மூலம் வழங்க உள்ளதாகவும் அறிவித்தது.  இதற்காக தமது பொறியாளர்கள் குழுவை சிங்கப்பூருக்கு அனுப்பி அங்குள்ள தண்ணீர் சப்ளை தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை பார்த்து பயிற்சிபெற்று வரவைத்து  திட்டத்தை வடிவமைத்துள்ளது. ஐஸ் மவுண்டைன், அக்வா, ஏவியான், கோக்கின் தசானி போன்ற தண்ணீர் கொள்ளையர்களின் நிறுவன பிராண்டுகள் கோலோச்சும்  சிங்கப்பூரில் காசுள்ளவனுக்கே குடிநீர்! பூரியிலும் அதைத்தான் அமல்படுத்துவார்களா என்பது விரைவில் தெரியவரும்.

இந்தியாவில் சாமானியனுக்கும் இனி குடிநீரை உலகத் தரத்தில் தரப்போகிறாரகள். அந்த வகையில் 13 கோடி செலவில் ஒவ்வொரு தெருவிற்கும் குழாய்கள் பதித்து, பூரி மக்களுக்கு ISO – 10500 தரத்தில் குடிநீர் தர தெளிவாக திட்டமிட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்சித்துறை செயலரான மதிவதனன் விவரித்ததை விளக்கியுள்ளன ஆங்கில பத்திரிக்கைகள்.

பார்கவி ஆறு

நீங்கள் ஆச்சரியப்படும்படி இதில் தொலைநோக்கு திட்டமும் உள்ளடக்கப் பட்டிருக்கிறது. பார்கவி ஆற்றில் ஓடும் உபரி நீரை உரிஞ்சி சுத்திகரிப்பு மையத்திற்கு அனுப்புவதோடு, நேராக குழாய் பதித்து பூமிக்குள் ஆழமாகவும் அனுப்புவார்களாம். இப்படி சேமித்து பின்னர் தேவைப்படும்போது சுவையான நிலத்தடிநீராக அதை எடுத்துக் கொள்வார்களாம்.

கடந்த சனிக்கிழமை காலையில் ஒடிசாவின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பிரதாப் ஜெனா பூரியின் ஜெகன்னாதர் கோயிலுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குழாயிலிருந்து பிடிக்கப்பட்ட சுத்தமான குடிநீரை குடித்தார். இந்த விழாவிற்கு பத்திரிக்கைகள், மீடியா துறையினர் என அனைவரையும் வரவழைத்து “குழாயிலிருந்து நேரடியாக குடிக்கும்” வசதிபெற்ற இந்தியாவின் முதல் நகரமாக பூரி மாற்றப்பட்டிருப்பதையும் காட்டினார்.

தனியார்மயம் அமலில் இருக்கும் நாட்டில் கின்லே, அக்குவாஃபினா போன்றவைகள் கோலோச்சும் சூழலில், ஒரு நகரமே தண்ணீர் கார்ப்பரேட்டுகளின் வலையிலிருந்து அறுத்துக்கொண்டு தப்ப முடியமா? அதையும் ஒரு மாநில அரசே முன்னின்று செய்யுமா? இந்த கேள்விக்கான விடையை அரசு விளம்பரத்தில் தேடமுடியாது. உண்மையை அறிய ‘புனித நகரான’ பூரி நகர மக்களைத்தான் நேரில் சந்தித்தாக வேண்டும்.

நேற்றுவரை பலியபந்தா பகுதியிலிருந்து எடுக்கப்படும் நிலத்தடி நீரைத்தான் பூரியின் கடலோர பகுதி மக்கள் பயன்படுத்தினர். ஆழ்குழாய் கிணறுகள், அடிபம்புகள் அங்கு செயல்பாட்டில் இருக்கிறது. இன்று பார்கவி ஆற்று நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படும் இந்த சுஜால் திட்டத்தில் புதிதாக தண்ணீர் மீட்டர்களை, வீட்டு இணைப்பு குழாய்களில் பொருத்துகிறார்கள். இனி மக்களுக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறுகள், அடிபம்புகள் பூரிக்குள் அனுமதிக்கப்படுமா அல்லது பிடுங்கி வீசப்படுமா என்பது பற்றி இன்றுவரை அறிவிப்பு எதுவும் நவீன் பட்நாயக் அரசிடமிருந்து வெளிவரவில்லை.

மக்களின் தாகம்தீர்க்க அரசுகள் கவலைப்படுவதும், திட்டங்களை அறிவிப்பதும் நமக்கு புதிதல்ல. 2014 லில் ராஜஸ்தானில் தண்ணீர் ATM களை மக்கள் நலனுக்காக என்றுதான் அறிமுகப்படுத்தினர்.  ஜீவன் அமிர்தம் திட்டத்தை PPP மூலம் நிறுவி 24 மணி நேர சுத்தமான தண்ணீர் சப்ளையை தொடங்கியது அரசு. கிராமப்புறங்களில் உள்ள 22,000 பேருக்கு தேவையான குடிநீர் ATM கள் அமைக்கப்பட்டது. இந்த தண்ணீர் ATM களில் பணம் கட்டி வாங்கிய அட்டையை தேய்த்தால் 5 ரூபாய் செலவில் 20 லிட்டர் தண்ணீரை பிடிக்கலாம் எனவும் அறிவித்தது அரசு. மறுபுறமோ ஜெய்ப்பூரில், கலதேராவில் கொக்கொ கோலா(coco – cola) பிளாண்ட் போட்டு நிலத்தடி நீரை சூறையாடி உற்பத்தியை பெருக்கி கோடிகளை குவிக்கவும் தாராள அனுமதி நீடிக்கப்பட்டது.

PPP (Public Private Partnership) எனப்படும் இம்முறையில் கரின் இந்தியா, டாடா, உள்ளிட்ட கார்ப்பரேட்டுகள் மக்களின் தாகம் தீர்க்கவே தண்ணீர் வழங்கும் ATM அமைக்க ராஜஸ்தான் அரசுடனும், கிராம பஞ்சாயத்துக்களுடனும் கைகோர்த்ததாக அறிவித்தனர். அதாவது காசுள்ளவனுக்கே தண்ணீர் என்பதை 2014லிலேயே அமல்படுத்தினர்.

1999ல் வெறும் 20 அடியில் கிடைத்த நிலத்தடி நீரை 2014ல் 500 அடிக்கும் கீழே அனுப்பியது கோக் ஆலை. இதை தடுக்க கலதேரா சங்கர்ஸ் சமிதி எனும் போராட்ட குழு களம் இறங்கியது என்பது வரலாறு.

ஒரு வருடத்துக்கு முன் தமிழகத்தில் கோவை, திருப்பூரில் சூயஸ் நிறுவனம் மூலம் குடிநீர் விநியோக திட்டம் அறிவிக்கப்பட்டு, தெருக்களில் குழாயும் பதிக்கப்பட்டு மீட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளது. கார்ப்பரேட்டுகள் கோடிகளை வசூலிக்கும் திட்டமில்லாமல் தண்டத்திற்கா மீட்டர்களை பொருத்துகிறார்கள்?

பாசிச ஜெயா ஆட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டம் என்ற போர்வையில் திருப்பூருக்கு தண்ணீர் விற்க வந்தது பெக்டெல் நிறுவனம். பவானி ஆற்று நீரை கொண்டுவந்து திருப்பூரின் ஆலைகளுக்கு விற்பதும், வழியிலுள்ள கிராமங்களுக்கும், திருப்பூர் மக்களுக்கும் கொசுறாக மலிவு விலையில் தரவும் திட்டம். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக தொழில் நெருக்கடி, சாயக்கழிவு பிரச்சினைகளால் உற்பத்தி குறைந்தது. சாயப்பட்டறைகள் எதிர்பார்த்த அளவு தண்ணீரை வாங்காததால், கிராமங்களுக்கு பஞ்சாயத்துகளுக்கு கொடுக்கும் தண்ணீரின் விலையை அநியாயமாக உயர்த்தியது.  முதலாளிகள் வாங்கவில்லை; அதனால் மக்களுக்கான நீரின் விலையை உயர்த்தி லாபத்திற்கே விற்பேன் என்றது பெக்டெல்.

நவீன் பட்நாயக் அரசு மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு இலவசமாக தண்ணீர்  தரும் முடிவை எடுக்க முடியுமா? அப்படி செய்ய தண்ணீர் கார்ப்பரேட்டுகள் அனுமதிப்பார்களா? நடப்பதோ வேறொன்றாகத்தான் உள்ளது. பூரி ஒரு சோதனைச் சாலையாகவும் இருக்ககூடும். விரைவில் உண்மை புலப்படும்.

அரசு விளமபரம்

‘புனித’ நகரான பூரியில் முன்னெடுக்கப்படும் திட்டம்தான் நாளை அனைத்து நகரங்களுக்கும் வரப்போகிறது. பொலிவியாவின் கொச்ச பொம்பாவில் பெக்டெல்லுக்கு எதிராக 2000-த்தில் வெடித்த தண்ணீர் யுத்தம் இங்கும் பரவப்போகிறது. தண்ணீரும் எண்ணையாக மாறி எரியும்; தண்ணீர் கார்ப்பரேட்டுகளை எரிக்கும்.

இளமாறன்

செய்தி ஆதாரம்;

India today, the hindu, times of india, outlook.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here