’நீதி’மன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள்! நீதி கிடைக்குமா?

கடந்த 11 மாதங்களில் சுமார் 9.22 லட்சம் வழக்குகள் அதிகரித்து, நவம்பர் 15-ந்தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4.53 கோடியாக உயர்ந்துள்ளது.

நவம்பர் 21-ந்தேதி நிலவரப்படி 5.16 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது

பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குற்றவியல் சட்டத் திருத்தம் என்ற பெயரில் நீதிமன்றங்களின் மூலம் கிடைத்து வந்த அரைகுறை நீதிகளுக்கும், ’ஆப்பு’ வைக்கப்பட்டு நாடே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

சாதாரண சிவில் வழக்குகள் முதல் கொடுமையான கிரிமினல் வழக்குக்கள் வரை அனைத்தும் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்படுவதாகவும், நிரபராதிகள் விடுவிக்கப்படுவதாகவும் பொதுவாக நீதித்துறை ’நம்பிக்கை’ கொடுக்கின்றது.

அரசு கட்டமைப்பின் பிற உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து மக்களுக்கு விரோதமாக செயல்படுகின்ற போதிலும் நீதிமன்றங்களின் மீது இன்னமும் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கை என்ற அடிப்படையில் நீதிமன்றத்தை நாடுவது இந்தியாவில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நிலைமையாக உள்ளது.

இந்த சூழலில் சமீபத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில்,கடந்த ஜனவரி 1-ந்தேதி நிலவரப்படி, நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் துணை நீதிமன்றங்களில் 4.44 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், கடந்த 11 மாதங்களில் சுமார் 9.22 லட்சம் வழக்குகள் அதிகரித்து, நவம்பர் 15-ந்தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4.53 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதில் சிவில் வழக்குகள் 1.10 கோடி என்றும், கிரிமினல் வழக்குகள் 3.43 கோடி என்றும் அவர் கூறியுள்ளார். மொத்தமாக நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நவம்பர் 21-ந்தேதி நிலவரப்படி 5.16 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அர்ஜுன் ராம் மேக்வால், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் துணை நீதிமன்றங்களில் 5,245 நீதித்துறை அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கவனியுங்கள்! மாவட்ட நீதிமன்றம் மற்றும் துணை நீதிமன்றங்களில் 5245 நீதித்துறை அதிகாரிகள் பணியிடங்கள் காலியிடமாக உள்ளது என்று தெரிவித்துள்ளதன் பின்னணி என்ன?..

உள்ளூர் அளவில் அதாவது கிராமம் மற்றும் தாலுக்கா அளவில் நடக்கக்கூடிய சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்கு அந்தந்த வட்டாரத்திற்கு பொருத்தமான மாவட்ட நீதிமன்றம் மற்றும் துணை நீதிமன்றங்களில் நீதிபதிகளே இல்லை என்பது எந்த அளவிற்கு கேடான விவகாரம் என்பதை மேற்கண்ட புள்ளிவிபரம் நமக்கு பட்டவர்த்தனமாக தெரிவிக்கின்றது.

கோர்ட்டுகளில் நீதி கிடைக்குமா என்று எமது புதிய ஜனநாயகம் இதழ் துவங்கிய இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். போலி ஜனநாயக அரசு கட்டமைப்பின் கீழ் நீதிமன்றம் என்பது ஒரு வர்க்க சார்பு உடையது என்றும் முதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் சேவை செய்வதற்கு முன்னணியில் நிற்பதும் அதன் தனமை என்றும் குறிப்பிட்டிருந்தோம்.


படிக்க: இந்திய நீதித்துறையின் அவலமும் பாசிசக் காவிக் கூட்டத்தின் ஆட்டமும்!


பாதிக்கப்பட்ட மக்களை மேலும் ஒரு முறை அடக்கி சிறையில் அடைப்பதற்கு ஒரு கருவியாகவே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்பதுதான் கடந்த 75 ஆண்டுகால சுதந்திரம் வழங்கியுள்ள நிலைமையாகும்.

நீதிமன்றங்களில் நீதிபதிகள் இல்லை என்பது மட்டுமல்ல பிரச்சனை. நீதிபதிகள்-வழக்கறிஞர்கள், நீதித்துறையில் பணியாற்றுகின்ற பணியாளர்கள், போலீசு ஆகியவர்கள் அடங்கிய முக்கூட்டு பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்பதும், பல்வேறு வழக்குகளை உடனடியாக முடிக்காமல் வாய்தாக்கள் பெற்று இழுத்தடிப்பதன் மூலமாக சொல்லிக் கொள்ளப்படும் நீதிக்கு எதிராக உள்ளது என்பதும் பல்வேறு வழக்குகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் கோடிக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் நீதித்துறையின் மீது மக்கள் அதிருப்தி அடைந்து வேறு மாற்று சிந்தனைக்கு சென்று விடுவார்கள் என்ற காரணத்தினால் அவ்வப்போது ’லோக் அதாலத்’ மூலம் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வழக்குகளை தீர்த்து வைப்பது, மக்கள் நீதிமன்றம் என்றெல்லாம் கண்கட்டு வித்தை காட்டுவதன் மூலம் நீதித்துறையின் மீது நம்பிக்கை வைப்பதற்கு தூண்டுகிறார்கள்.

ஆனால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆண்டு கணக்கில் நீதிமன்றங்களில் தண்டணை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நீதிமன்றங்களுக்கு வாய்தா வாய்தா என்று அலைந்து வருகின்ற பெரும்பான்மை மக்கள் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது நீதி என்பது கையில் உள்ள ’கனத்திற்கு’ பொருத்தமாக கிடைக்கின்றதே ஒழிய சாதாரண மக்களுக்கும், எளிய மனிதர்களுக்கும் நீதி அவ்வளவு லேசில் கிடைத்து விடுவதில்லை.

தற்போதைய குற்றவியல் சட்டத் திருத்தம் படிப்படியாக அமலுக்கு வந்துள்ள சூழலில் நீதி என்பது பெரும்பான்மை மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறுகின்ற அபாயம் உள்ளது என்பதும் பாசிசம் சட்டபூர்வமாகவே நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

  • மருது பாண்டியன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here