முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான மாநில ஒதுக்கீட்டை ரத்து செய்யும் உச்சி ‘குடுமி’ மன்றத் தீர்ப்பு!

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மாநில மக்களுக்கும், பொது சுகாதாரத்துறைக்கும், சமூக நீதிக்கும் மிகவும் பாதிப்பை உருவாக்கும். நமது அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவ நிபுணர்கள் இல்லாத நிலை உருவாகும்.

0
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் அதிகமாக உள்ளன.

ன்றிய அரசின் இந்தி திணிப்பு, நிதி பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடே ஒரு குரலாய் ஒலித்து வரும் நிலையில், முதுநிலை படிப்பு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நயவஞ்சக தீர்ப்பு உரிய கவனம் பெறாமல் போயுள்ளது.

நீதிபதி ஹிருஷிகேஷ் ராய், நீதிபதி சுதான்ஷு துலியா மற்றும் நீதிபதி எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதை (29.01.2025) அன்று தீர்ப்பளித்துள்ளது.

தற்போதைய NEET PG முறையின் கீழ், 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் (AIQ) கீழ் ஒதுக்கப்படுகின்றன, மீதமுள்ள 50 சதவீதம் மாநில மற்றும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. தற்போது வரை கடைபிடித்து வந்த நிலையில் இத்தீர்ப்பு மாநில சுயாட்சி குறித்து மிகப்பெரும் கேள்வியை எழுப்புகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வதாக கூறியுள்ளது.

எம்.பி.பி.எஸ் தவிர முதுநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசுகள் தங்களுக்கென வசிப்பிட அடிப்படையில் இடங்களை வைத்துக் கொள்ளக்கூடாது . நாம் அனைவரும் இந்தியாவில் தான் வசிக்கிறோம். எனவே மாநிலங்கள் தங்களுக்கென தனி ஒதுக்கீடு வைத்துக் கொள்வது என்பது அரசியல் சட்டத்தின் 14 வது பிரிவுக்கு எதிரானது. அவ்வாறு மருத்துவ இடங்களை வாழ்விட அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதை அரசியல் சட்டம் அனுமதிக்காது. எனவே, அனைத்து முதுநிலை மருத்துவ இடங்களையும், மேற்படிப்பு இடங்களையும் அகில இந்திய அளவில் பொதுவானதாக்க வேண்டும் என்பது போன்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சி கோட்பாட்டிற்கும், இட ஒதுக்கீட்டிற்கும், அரசு மருத்துவர்களின் இட ஒதுக்கீட்டிற்கும், பெண்களின் உரிமைகளுக்கும் எதிரானதாகும். இந்த தீர்ப்பின் சாரம் முதுநிலை மருத்துவ படிப்புகளோடு நிற்காமல் அனைத்து மருத்துவ, பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நீட்டிக்கப்படும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு வட மாநிலங்கள் நீண்ட காலமாக மருத்துவக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணமாக, அம்மாநிலங்களில் போதிய அளவிற்கு மருத்துவ மேற்படிப்பு இடங்கள் இல்லாத அவலநிலை உள்ளது.

ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் அதிகமாக உள்ளன.

இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புகளில்  மாநில அரசுகள்  தங்களுக்கென வைத்துக் கொள்ள இயலாது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கூறி இருப்பது கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த உயர்கல்வி பயில நினைக்கும் மருத்துவர்களை கடுமையாக பாதிக்கும்.

படிக்க:

  நீட் தேர்வில் தில்லுமுல்லு! மாணவர்களுக்கு எதிரான அநீதி தொடர்கிறது!

  மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தடையாக 10% EWS இட ஒதுக்கீடு! கலகம் செய்!

6,419 முதுநிலை மருத்துவ இடங்களைக் கொண்ட கர்நாடகா, 4,649 இடங்களைக் கொண்ட தமிழ்நாடு, 3,142 இடங்களைக் கொண்ட தெலுங்கானா, 3,416 இடங்களைக் கொண்ட ஆந்திரா மற்றும் 1,715 இடங்களைக் கொண்ட கேரளா என கணிசமான எண்ணிக்கையிலான முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன பாதிக்கப்படும்.

ஏற்கனவே, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இடங்களை ஒன்றிய அரசு பறித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் வழி வகுத்தது. அதனால் அதிக மருத்துவ கட்டமைப்புகளை கொண்ட தென்மாநிலங்கள் பெரும் இழப்புகளுக்கு உள்ளாகி வருகிறது.  மிக முக்கியமாக உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் (super speciality) நூறு விழுக்காடு இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக பறிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது.

இந்திய அரசியலமைப்பின் கீழ் சுகாதாரம் என்பது மாநிலக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், சுகாதாரத்தில் மாநிலங்களின் சுயாட்சி குறித்து இந்தத் தீர்ப்பு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரம், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளை நிர்வகிப்பதற்கும் வழங்குவதற்கும் மாநிலங்கள் முதன்மைப் பொறுப்பைக் கொண்டுள்ளன. மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் மருத்துவக் கல்லூரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மாநில மக்களுக்கும், பொது சுகாதாரத்துறைக்கும், சமூக நீதிக்கும் மிகவும் பாதிப்பை உருவாக்கும். நமது அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவ நிபுணர்கள் இல்லாத நிலை உருவாகும்.

இது மருத்துவ படிப்பு தொடர்பான பிரச்சனை மட்டும் அல்ல, மாநில உரிமை சார்ந்த ஒன்று. ஏற்கனவே ஒன்றிய பாஜக அரசு மும்மொழி கொள்கை, தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தாவிட்டால் நிதி தர முடியாது என பாசிச பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நீதிமன்றமும் மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்பதையே இந்த தீர்ப்பு உணர்த்துகிறது.

மாநில உரிமைகளுக்கான போராட்டம் என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமைகள் என்ற நிலையைத் தாண்டி தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற கட்டத்துக்குக் கொண்டு செல்வதே காவிப் பாசிஸ்டுகளின் ஒற்றைச் சர்வாதிகார போக்கை முறியடிக்கும் ஒரே வழியாகும். மாநில உரிமைகளுக்கான நமது போராட்டத்தை அந்த திசையில் கொண்டுசென்று ஜனநாயக கூட்டரசை நிறுவுவதன் மூலம் உண்மையான கூட்டாட்சியை படைப்போம்.

  • பரூக்

செய்தி ஆதாரம்: https://thesouthfirst.com/health/sc-strikes-down-domicile-based-pg-quotas-raising-questions-over-states-rights/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here