ந்திய சிறைச்சாலைகளில் நிலவும் சாதியப் பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வரவும், சிறைக் கையேடுகளில் உள்ள சாதி அடிப்படையிலான பிரிவினைகளை அகற்றவும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்தப் பிரச்சினை குறித்து ஆய்வு நடத்திய பத்திரிகையாளர் சுகன்யா சாந்தா, இந்தக் கொடுமையான நடைமுறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு அக்டோபர் 3 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், சிறைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், இந்த விவகாரத்தை கண்காணிக்க நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யும் என்றும் கூறியது.

சிறைகளில் சாதியப் பாகுபாடு கண்டறியப்பட்டால், அதற்கு மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. தீர்ப்பில் உள்ள முக்கியமான சில அம்சங்களை பார்ப்போம்.

  1. குற்றவியல் சட்டங்கள் காலனித்துவ அல்லது அதற்கு முந்தைய தத்துவங்களை அங்கீகரிக்க கூடாது!

நவீன காலத்தில் குற்றவியல் சட்டங்கள்தான் அரசு அதிகாரத்தின் வலுவான வெளிப்பாடு என்பதால், அவை சமத்துவத்தை மறுக்கக்கூடாது. காலனித்துவ காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகளுக்குள் நிலவிய சாதியப் பாகுபாடுகளில் தலையிடாமல் இருந்தனர். ஆனால் அந்த அணுகுமுறையை தொடர அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

  1. பழங்குடியினருக்கு எதிரானப் பாகுபாடுகள் முடிவுக்கு வரவேண்டும்!

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியானது சில ஒடுக்கப்பட்ட பிரிவினரை “குற்றம் சார்ந்த பழங்குடியினர்” என்று ஏதோ ஒரு அனுமானத்தின் அடிப்படையில் வகைப்படுத்தியது. சிறைக் கையேடுகளில் அவர்களை வழமையான குற்றவாளிகள் ( Habitual Offenders) என வகைப்படுத்தியது.  இப்படி முத்திரை குத்தப்பட்டால் இவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் பாகுபாடு காட்டப்படும். எனவே இதைத் தொடர அனுமதிக்க முடியாது.

  1. பாகுபாட்டிற்கு காரணமாக சாதி இருக்க முடியாது!

சில அரசியலமைப்பு விதிகளின் கீழ், சாதி அடிப்படையிலான வகைப்பாடுகள் அனுமதிக்கப்பட்டாலும், அவை சமத்துவம் மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சிறைவாசிகளுக்கிடையே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாதிய பாகுபாடு காட்டுவது அரசியலமைப்புப் பிரிவு 14 – ஐ மீறுவதாகும். சிறைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கும், சாதி அடிப்படையில் கைதிகளை வகைப்படுத்துவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

4.வேலைப் பிரிவினைக்கு சாதிகளுக்கு இடையேயான மோதல் போக்கை காரணம் காட்டக்கூடாது!

இரண்டு சாதிக் குழுக்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில், சிறை அதிகாரிகள் கைதிகளை அவர்களின் சாதி அடிப்படையில் பிரித்து வைத்த சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த அணுகுமுறையை விமர்சித்துள்ள நீதிமன்றம், சாதி அடிப்படையிலான பிரிவினையை ஊக்குவிக்கும் படியான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சிறைக்குள் ஒழுக்கத்தை கடைபிடிப்பது சிறை நிர்வாகத்தின் பொறுப்பு என்றும் கூறியுள்ளது.

  1. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சாதியத் தடைகளை கடக்கும் உரிமை உள்ளது!

அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21, தனி நபரின் உயிர்வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் போன்றவற்றை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், சாதியத் தடைகளை கடக்கும் உரிமையையும் அது உள்ளடக்கியுள்ளது. மேலும் சாதியத் தப்பெண்ணங்களும், பாகுபாடுகளும் தனி மனித ஆளுமையின் (Personality) வளர்ச்சியை தடுக்கின்றன.

எனவே ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்களின் வாழ்வுரிமையின் ஒரு பகுதியாக சாதியத் தடைகளை கடக்கும் உரிமையையும் பிரிவு 21 வழங்குகிறது. சிறையில் உள்ள பட்டியல் சமூகத்தினருக்கான சீர்திருத்தத்தை தடுக்கும் வகையில் சிறைக் கையேடுகள் இருப்பதால் அவை கைதிகளின் உரிமைகளை தடுக்கின்றன என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

  1. ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் கீழ்த் தரமான பணிகள்!

அசுத்தமான அல்லது இழிவான வேலைகளை சாதிப் பின்னணியை காரணம் காட்டி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒதுக்குவது என்பது அவர்களை கட்டாய வேலை செய்ய வைப்பதற்கு சமமாகும். தாழ்த்தப்பட்ட சாதிக் கைதிகளை கழிப்பறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துவது போன்றவை பிரிவு 23 – ன் கீழ் கட்டாய வேலை வாங்குவது என்ற சட்ட விரோதமான செயலாகும் என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

  1. சாதியப் பாகுபாட்டை களைவதற்கு பன்முக அணுகுமுறை தேவை!

பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரானப் பாகுபாடு என்பது திட்டமிட்ட முறையில் தொடர்கிறது. இதனை சரி செய்வதற்கு அனைத்து அரசு  நிறுவனங்களின் உறுதியான பன்முக முயற்சிகள் தேவை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

  1. எந்த சாதியையும் துப்புரவு பிரிவினர் என வகைப்படுத்த முடியாது!

சாதி அமைப்பு முறையில் தோட்டிப் பிரிவு என்று கூறி தீண்டாமை கடைபிடிப்பது நடைமுறையில் உள்ளது. கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியில் ஈடுபடுவதற்காக யாரும் பிறப்பதில்லை. ஆனால் இழிவானதாக கருதப்படும் அத்தகைய வேலைகளை செய்வதற்காக ஒரு பிரிவினர் சமூகத்தால் கட்டாயப்படுத்தப் படுகின்றனர் என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

  1. சாதிப் பாகுபாட்டை தடுக்க மறுப்பது இத்தகைய நடைமுறைகளை உறுதிப்படுத்துகிறது!

சாதியப் பாகுபாடுகள் தாழ்த்தப்பட்ட மக்களின் ஒடுக்கு முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. சாதிப் பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசியல் சாசனம் ஆணை இடுகிறது. எனவே இத்தகைய நடைமுறைகளை தொடர அனுமதிக்க முடியாது.

  1. சட்டம் மற்றும் கையேடுகளுக்கு இடையே உள்ள முரண்கள்!

2016ஆம் ஆண்டின் மாதிரி சிறைக் கையேடு மற்றும் 2023 – ன் மாதிரி சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டம் ஆகிய இரண்டும் “வழமையான குற்றவாளி” என்பதைத் தெளிவாக வரையறுக்கவில்லை. இதனால் மாநிலங்கள் பட்டியல் பழங்குடியினர் விஷயத்தில் தங்களது அனுமானங்களின் அடிப்படையில் இதை வரையறுக்க வழி வகுக்கிறது.

மாதிரி சிறைக் கையேட்டில் சமைக்கும் பணியைத் தவிர மற்றவற்றில் சாதியப் பாகுபாடு குறித்த தெளிவான தடைகள் இல்லை என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.  அபாயகரமான சாக்கடை மற்றும் மலக்குழிக்களை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுவதை, அதிலும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத் தக்கதுதான். எனினும் சமூகத்தில் ஆதிக்க சாதிகளிடம் புரையோடிப் போயுள்ள சாதியப் பாகுபாட்டு வெறியானது, சிறைத்துறையை நிர்வகிக்கும் அதிகாரிகளிடம் நீக்கமற நிறைந்துள்ளது. அவர்களது மனங்களில் உள்ள ஆதிக்க சாதிவெறி சிந்தனையை சட்டத்தின் மூலமாகவோ, நீதிமன்ற தீர்ப்புகளின் வழியாகவோ அகற்ற முடியாது என்பதே நடைமுறை எதார்த்தம்.

எனவே நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் இது போன்ற சாதிய ரீதியான வேலைப்பிரிவினைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த சிறைவாசிகளும், அவர்களுக்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக சக்திகளும் போராடுவதே தீர்வாக அமைய முடியும்.

  • குரு

ஆதாரம்: https://www.barandbench.com/news/ten-highlights-supreme-court-verdict-caste-discrimination-jails?s=08

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here