பாசிச மோடியின் நண்பரான பாபா ராம்தேவ், ஒரு கார்ப்பரேட் சாமியார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே சமயம் அவர் ஒரு ஏமாற்று பேர்வழி – பிராடு என்பது அப்பாவிகளுக்கு தெரியாமல் இருந்த  குறையை தற்பொழுது உச்ச நீதிமன்றம் நிவர்த்தி செய்து விட்டது. பாபா ராம்தேவின் அயோக்கியத்தனம் வெளிச்சத்திற்கு வந்த கதையை சுருக்கமாக பார்ப்போம்.

கொரோனா பெருந்தொற்று உலகைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த காலத்தில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் “கொரோனில்” என்ற ஒரு ஆயுர்வேத மருந்தை அறிமுகப்படுத்தியது. இந்தக் கொரோனில் மருந்து கொரோனாவை 3 லிருந்து 14 நாட்களுக்குள்  குணப்படுத்தி விடும் என்று ‘சாமியாரான’ பாபா ராம்தேவ் விளம்பரம் செய்து நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளார். இது அப்பொழுதே மருத்துவத் துறையினர், அறிவியலாளர்கள் மற்றும் மக்களிடையே கடும் கண்டனத்தை எழுப்பியது.

இந்த எதிர்ப்பை பற்றி எல்லாம் ஒரு சிறிதும் கவலைப்படாமல் பாஜகவின் ஒன்றிய அமைச்சர்களான ஹர்ஷ்வர்தன் மற்றும்   நிதின் கட்கரி இருவரும்  கொரோனில் மருந்தை பிரபலப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அந்த மருந்தின் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதாவது, இந்த இரண்டு ஒன்றிய அமைச்சர்களும்  கொரோனில் மருந்துக்கு விளம்பரம் செய்தனர் என்பதைத் தவிர இதில் வேறு ஒன்றும் இல்லை. விளம்பரத்தில் பங்கேற்றதற்காக இவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்று நீங்கள் கேட்பீர்களானால் அதற்கு  நம்மிடம் பதில் இல்லை. ஏனெனில் உலகறிய“பி எம் கேர்ஸ் -ல்” வசூலித்த பணத்திற்கான கணக்கையே காட்ட முடியாது என்று கூறும் சங்கிகளிடம் இந்த விவரத்தை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

ஆனால் , ஒன்றிய அமைச்சர்களே கொரோனில்  மருந்தை ஆதரிக்கின்றனர் என்பதால் அந்த மருந்தின் மீது இருந்த அவநம்பிக்கை மறைந்தது. இது  நாட்டு மக்களின் பணத்தை  பாபா ராம்தேவ் ஏமாற்றிப் பறிப்பதற்கு வசதியாக அமைந்தது. இதைப் பற்றி எல்லாம் பாஜகவினர் வருத்தப்படவோ, கூச்சப்படவோ போவதில்லை என்பது உலகத்திற்கே தெரியும்.

கொரோனில் மருந்தின் நம்பகத்தன்மையை கூட்ட வேண்டும் என்றோ அல்லது உலகின்  பல நாடுகளில் வசித்து வரும் இந்தியர்களிடம் இதனை விற்று கல்லா கட்ட வேண்டும் என்றோ நினைத்த பாபா ராம்தேவ் வகையறாக்கள்கொரோனில் மருந்திற்கு உலக சுகாதார நிறுவனமே(WHO) சான்று அளித்துள்ளது என்று அப்பட்டமான பொய்யையும் பரப்பியுள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உலக சுகாதார நிறுவனம் “COVID-19 சிகிச்சைக்கான எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும்  WHO மதிப்பாய்வு செய்யவோ அல்லது சான்றளிக்கவோ இல்லை” என்று அறிக்கை வெளியிட்டது.

இதைப் பார்த்தெல்லாம் கலங்காத அஞ்சா நெஞ்சங்களான  பிராடு பாபா ராம்தேவ் வகையறாக்கள் தொடர்ந்து கொரோனில் மருந்தை விற்று கல்லா கட்டுவதில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தான் கொரோனில் மருந்து தொடர்பாக பாபா ராம்தேவ் மற்றும் அவரது பதஞ்சலி நிறுவனத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையிலும் பாபா ராம்தேவ் மற்றும் பாபா ராம்தேவின் சகாவான பாலகிருஷ்ணா  நடந்து கொண்டதற்காக, அவர்கள் இருவருக்கும் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அது மட்டுமன்றி கொரோனில் மருந்து குறித்து அறிவியலுக்கு புறம்பான, உண்மைக்கு மாறான தகவல்களை பாபா ராம்தேவ் பரப்பிக் கொண்டிருந்ததை மத்திய அமைச்சகமான ஆயுஷ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்:

அத்துடன் நிற்காமல் பொய்யான விளம்பரத்தை வெளியிட்ட  பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக ஏன் மத்திய அரசு செயல்படவில்லை? என்றும் கேள்வி எழுப்பியது. மேலும் அந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் அத்தனை பேரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாசிச மோடியின் மிக நெருக்கமான நண்பரும் கார்ப்பரேட் சாமியாருமான பாபா ராம்தேவும் அவரது சகாவான பாலகிருஷ்ணாவும் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியிருக்கிறனர். ஆனால் அவரது மன்னிப்பை ஏற்க முடியாது என்பதுடன் நீதிமன்ற அவமதிப்பு உத்தரவு பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா மீது ஏப்ரல் 16ஆம் தேதி அன்று பிறப்பிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிவிட்டனர்.

இதன் மூலம் தெரிய வருவது என்ன?

அயோக்கியத்தனம் செய்து மாட்டிக் கொண்டிருப்பது பாபா ராம்தேவும், பாலகிருஷ்ணாவும், பதஞ்சலி நிறுவனமும் மட்டும் தானா?

பிராடு சாமியார் பாபா ராம்தேவின் நெருக்கமான நண்பரான பாசிச மோடியும் பாஜகவின் அமைச்சர்களும் சேர்ந்தே தான் தற்பொழுது மாட்டிக்கொண்டு உள்ளனர்.

அது எப்படி, இப்படி கூற முடியும்என்று கேட்கிறீர்களா?

“உனது நண்பனை சொல் உன்னை பற்றி சொல்கிறேன்” என்று தமிழில் ஒரு சொலவடை உள்ளது.

மோடியின் நண்பர்,  பாபா ராம்தேவ் ஒரு “பிராடு “என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. அப்படியானால் தனது அமைச்சர்களை அனுப்பி கொரோனில் மருந்துக்கு விளம்பரம் செய்த மோடி யார்? நீங்களே கூறுங்கள்.

  • குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here