நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை புதுச்சேரி மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையில் கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் மிக மிக மெதுவாக புயலாக உருவெடுத்தது மட்டுமின்றி கரையைக் கடப்பதற்கும் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது. கரையைக் கடந்த பின்னரும் முழுமையாக நகர்வதற்கு பல மணி நேரம் எடுத்துக் கொண்டது.
இதனால் தமிழகத்தின் வடக்கு மாவட்ட மக்கள் கடுமையான மழை மற்றும் புயல் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். குடிநீர், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் விலை ஏற்றம் காரணமாக அவதியுற துவங்கியுள்ளனர்.
இந்திய வானியல் ஆராய்ச்சி நிறுவனம் முதல் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் வரை கணித்தபடி உடனடியாக புயல் கரையை கடக்கவில்லை. இதனால் அவர்களின் ஆய்வு முடிவுகள் தவறு என்று எடுத்துக் கொள்வதா என்றால் அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது.
புயல் பாதிப்புகளை உணர்வதற்கு புயல் பற்றி சில அடிப்படைகளை புரிந்துக் கொள்ள வேண்டும்.
புயல் அல்லது சூறாவளி என்றால் என்ன?
ஒரு “சூறாவளி புயல்” அல்லது ஒரு “சூறாவளி” என்பது வளிமண்டலத்தில் ஒரு தீவிரமான சுழல் அல்லது ஒரு சுழல் ஆகும், இது வடக்கு அரைக்கோளத்தில் கடிகார திசையில் எதிரெதிராகவும், தெற்கு அரைக்கோளத்தில் கடிகார சுற்றுப்படி ஒரே திசையிலும் சுற்றி வருகிறது.
“Cyclone” என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து உருவானது, “Cyclos” என்ற வார்த்தை பாம்பின் சுருள்கள் என்று பொருள்படும்.
பிரிட்டனைச் சேர்ந்த கடல் மாலுமியான ஹென்றி பெடிங்டன் என்பவர் இந்தியாவில் உள்ள, வங்காள விரிகுடாவிலும், அரபிக்கடலிலும் ஏற்பட்ட வெப்பமண்டலப் புயல்கள் போன்றவற்றை முதன் முதலில் ஆய்வு செய்தார். அவரது ஆய்வுக்குப் பிறகு கடலில் சுருண்ட பாம்புகள் போல் தோன்றிய, இந்தப் புயல்களுக்கு “சூறாவளி” என்று பெயரிட்டார்.
சூறாவளிகள் தீவிரமான குறைந்த அழுத்தப் பகுதிகளாகும் – அதன் மையத்திலிருந்து வெளிநோக்கி அழுத்தம் அதிகரிக்கிறது- மையத்தில் ஏற்படும் அழுத்தம் வீழ்ச்சியின் அளவு மற்றும் அது வெளிப்புறமாக அதிகரிக்கும் வீதம் சூறாவளிகளின் தீவிரத்தையும் காற்றின் வலிமையையும் தருகிறது.
வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் உலக வானிலை அமைப்பு (WMO) ,இந்திய வானிலை ஆய்வுத் துறை போன்றவை காற்றழுத்த தாழ்வு மண்டலங்களை வகைப்படுத்த பின்பற்றும் அளவுகோல் என்னவென்றால் காற்றின் வேகம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து மணிக்கு இத்தனை கிலோமீட்டர் வேகம் என்ற அடிப்படையில் வானிலை அறிக்கைகளாக வெளிப்படுத்துகின்றன.
கடந்த இரண்டு தசாப்தங்களாக கடலின் அளவு இரண்டரை டிகிரி ஃபாரன்ஹீட் முதல் மூன்று டிகிரி பாரன்ஹீட் வரை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சில ஆண்டுகளுக்குள் அதிகபட்சமாக புயல்கள் தோன்றி நிலத்தை நோக்கி நகர்கின்றது.
இந்த புயல்கள் உருவெடுக்கும் போது கடலில் இருப்பதால் அதன் வேகம் நீருடன், அதாவது வெப்பமண்டலம் வெப்ப அழுத்தம் ஆகியவற்றுடன் தொடர்புடையதால் வேகமாக நகர்வதும், கரையை நெருங்கியவுடன் வலுவிழக்க தொடங்கி விடுகிறது என்பதுதான் பொதுவாக புயல் மற்றும் சூறாவளி பற்றிய செய்தியாகும்.
ஆனால் இந்த முறை அவ்வாறு நிகழவில்லை. இலங்கை கடல் பகுதியில் இருந்து தமிழக கடல் பகுதியில் நுழைந்து புயலாக மாறி வழித்தடம் அமைத்து வர ஏதுவாக வங்கக்கடலில் 2 வெப்ப நீரோட்டம் உள்ளது. ஆனால், இந்த 2 வெப்ப நீரோட்டமும் சந்திக்கும் இடத்தில் ஃபெஞ்சல் புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது.
அதன் பிறகு தாமதமாகவே புயலாக மாறி புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாகவே அரபிக் உயரழுத்தம், பசுபிக் உயரழுத்தம் என இருவேறு தாக்கங்கள் இருந்தது. தற்போது பசுபிக் உயரழுத்தம் காரணமாக மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மெது மெதுவாகவே நகர்ந்து சென்றது.
புயல் கரையை நெருங்கும்போது, நிலப்பரப்பினை அடைய முற்பட்டபோது அரபிய உயரழுத்தத்தின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால்தான் புயலானது. ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது.
மேற்கண்ட செய்திகள் அனைத்தும் வானியல் தொடர்பான சுருக்கமான அறிவியல் விளக்கங்கள் ஆகும். இவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதோ இல்லையோ புயல் கரையை கடப்பதற்கு தாமதமாவதற்கு காரணம் புவி வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தான் என்பது முக்கியமான அம்சமாகும்.
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு உயிரினங்களும், சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலமும் இணைந்து பாதுகாத்து வந்த புவி கோளத்தை முதலாளித்துவம் தோன்றி 200 அல்லது 300 ஆண்டுகளுக்குள் கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது.
புவி வெப்பமயமாதல் என்ற நிகழ்ச்சிப்போக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை ஒட்டி கடலின் வெப்பமும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அடிக்கடி சூறாவளிகள், புயல்கள் உருவாவதும் அவை பூமியை நோக்கி வரும்போது அதாவது கரையைக் கடக்கும் போது கடுமையான பாதிப்புகளை உருவாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.
இயற்கையை கட்டுப்படுத்தி மனித குலத்திற்கு சேவை செய்ய வைப்பது வேறு; இயற்கையை நாசப்படுத்தி தனிப்பட்ட நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பது வேறு. முதலாளித்துவம், அதன் பின்னர் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய முதலாளித்துவம் உருவாக்கிய அரசியல், பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக புவி வெப்பமயமாதல் அதிகரித்துக் கொண்டே போவதும் பூமியை அழிக்கின்ற புயல் மற்றும் வெள்ளம் உருவாகி வருவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இந்தக் கண்ணோட்டத்திலிருந்து நேற்று கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய அபாயத்தை உணர்ந்துக் கொள்வதும் ஒட்டுமொத்தமாக புவி கோளத்தையும், மனித குலத்தையும் பாதுகாக்கின்ற மிகப்பெரும் போரில் இறங்க வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது.
- ஆல்பர்ட்.
கட்டுரையின் அறிவியல் விளக்கம் சிறப்பு. ஒவ்வொரு வானிலை செய்திகளையும் உற்று நோக்கும் நிலைக்கு புவி வெப்பநிலை மக்களை தள்ளியுள்ளது ஏனெனில் ஒரு சில மணி நேரங்களில் உழைக்கும் மக்களின் வாழ்நாள் உழைப்பின் சேமிப்பை மழை வெள்ளம் அடித்துச்செல்லப்படுவது நடக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் பருவமழை எச்சரிக்கை
பெரும்பாலும் புரியும் வகையில் இருப்பதில்லை. அவர்களுக்கே உரிய மொழி நடையில் அறிக்கையை வாசிப்பது மழையின் அளவை செ.மீ. களில் தெரிவிப்பது ஆனால் மழை முன்னறிவிப்புகள் ” மிதமானது முதல் அதிகனமழை” என்றும்? “அனேக இடங்களில்” என்றும் வாசிப்பதில் பொறுப்புணர்வு ஏதாவது இருக்கிறதா? மாறாக தனி நபர்/தனியார் வானிலை ஆய்வுகள் ஏன் ஸ்மார்ட்போன் ஆப்களின் கணிப்புகள் உபயோகமான இருக்கும் நிலையில் சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தால் மக்களுக்கும்,விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை!! புவி வெப்பமடைதல், அதன் விளைவுகள் என்ன என்பதை ஒரு அறிக்கையாக மக்களுக்கு தெரிவிப்பதில்லை இந்த வானிலை ஆராய்ச்சி நிறுவனங்கள் !மக்களின் வரிப்பணத்தை தின்று செரித்து வருகிறது இத்தகைய பொறுப்பற்ற நிறுவனங்கள்
உங்களின் கருத்து மிகச்சரி தான் தோழரே! மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் அவர்களுக்கு உபயோகப்படும் படி நடப்பதில்லை. எப்போது மழை வெள்ளம் வந்தாலும் அதனால் பாதிக்க்ப்படுவது விவசாயிகளும் பெரும்பான்மை உழைக்கும் மக்களும் தான்.