கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் திங்கள் மாலை நிலவரப்படி 80 பேர் இறந்துள்ளனர். தலைநகர் சிம்லாவில் இரண்டு நிலைச்சரிவுகள் நடந்துள்ளது. அதில் 12 பேர் மரணம். ஒரு சிவன் கோவிலில் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் மண்ணில் புதைந்து மரணம் என கவலை தரக்கூடிய செய்திகள் வந்து கொண்டுள்ளன.
இப்பொழுது பெய்து வரும் கனமழையானது ஆகஸ்ட் 18 வரை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திலேயே இவ்வளவு பேரழிவு எனும் போது சிவப்பு எச்சரிக்கை விடப்பட்ட பகுதி எத்தகைய அழிவை சந்திக்கும்? உத்தரகாண்ட் மாநிலத்திற்குதான் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டேராடூனில் இருக்கும் இராணுவக் கல்லூரிக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
இமயமலையில் இருந்து வரும் ஆறுகளில் வெள்ளம், அபாய அளவை தாண்டி பாய்கிறது. பெரும்பாலான ஊர்கள் ஆற்றின் கரையை ஒட்டி அமைந்திருப்பதால் உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் மேலும் அதிகரிக்கும் என்பதே உண்மை.

நம் நாட்டில் உள்ள மலைத்தொடர்களிலேயே இமயமலை தான் மிகவும் இளமையானது. உறுதியற்ற பாறைகளை கொண்டுள்ளது. எனவே எளிதில் மண் அரிப்புக்கும், நிலச்சரிவுக்கும் உள்ளாக கூடியது. கீழ்நோக்கி பள்ளத்தாக்கில் பாயும் ஆறுகள் அனைத்தும் சேற்றுக் குளம்புகளாக செம்மண், சாம்பல் நிறத்தில் பாய்கிறது.
இமயமலையின் மேல் அதிகரித்து வரும் எதார்த்தத்திற்கு பொருந்தாத கனராக வாகன போக்குவரத்துகளும்,ரயில்வே பாலங்களும், நீர்த்தேக்கங்கள், அணைகள் உள்ளிட்ட பிரம்மாண்ட கட்டுமானங்களும் மாநிலத்தின் நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றன.
இந்துக்களின் புனித யாத்திரை இடங்களான பத்ரிநாத் கேதார்நாத் அமர்நாத் உள்ளிட்டவை இங்கு அமைந்திருப்பதால் பெரும் எண்ணிக்கையில் மக்களும் அதாவது பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குவிந்து வருகின்றனர். இதற்கு ஏற்ப நவீன போக்குவரத்து வசதிகளும், தங்குமிடங்களும், உணவகங்களும், கடைகளும் ஆறுகளின் கரையோரத்தில் உருவெடுத்துள்ளன. எனவே வெள்ள சேதம் என நடந்தால் அது அம்மாநில மக்களை மட்டும் பாதிப்பதாக இருக்காது. நாட்டின் பல பகுதியில் இருந்தும் சென்றுள்ள பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும், வியாபாரிகளையும் சேர்த்து பழிவாங்கும்.
இதையும் படியுங்கள்:
♦ உருகும் பனி மலைகள் நெருங்கி வரும் பேரபாயம்!
♦ உழைக்கும் மக்களின் வாழ்வை அழிக்கும் கனமழை – பெருவெள்ளம்: நிரந்தர தீர்வு என்ன?
இமயமலைத் தொடரில் தற்போது நடக்கும் மேக வெடிப்பையொத்த கனமழை, பெரு வெள்ளம், நிலச்சரிவுகளுக்கு பருவநிலை மாற்றமும் ஓர் காரணம். ஏகாதிபத்தியங்களால் தூண்டப்பட்டு வரும் புவி வெப்பமயமாதலுக்கும், அதன் தொடர் விளைவான வறட்சி, காட்டுத்தீ, வெப்ப அலை தாக்குதல், மேக வெடிப்பு, கனமழை உள்ளிட்டவற்றுக்கு பலியாவதோ சாதாரண உழைக்கும் மக்கள் தான். நாம் இயற்கையிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டு விழித்தெழுவோம்.
- இளமாறன்