மயமலை என்றதும் ; வெண் பனி போர்த்திய மலைகளும், பசுமை நிறைந்த அடர் வனங்களும், குளிர்காற்றும், ஆப்பிள் தோட்டங்களும் தான் நம் அனைவருக்கும் நினைவில் வரும். ஆனால் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் இமயமலை சுடுகிறது என்கின்றனர்! என்ன நம்ப முடியவில்லையா?

தகிக்கும் இமயமலை:

இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையில் ஆறு வெப்ப அலைகள் இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளன. அந்த வெப்பம் எந்த அளவுக்கு அதிகமாக இருந்துள்ளது என்றால் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான வெப்பம் இமாச்சலப் பிரதேசத்தில் தான் பதிவாகியுள்ளது.

ஒருபுறம் இமயமலையின் இயல்புக்கு மாறாக அதிகப்படியான வெப்பம் காரணமாக ஆப்பிள் விளைச்சலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் வழக்கத்தை விட குறைவான மழை பொழிவு காரணமாகவும் ஆப்பிள் விளைச்சலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி அதிகப்படியான வெப்பத்திற்கும், சராசரிக்கும் குறைவான மழைக்கும் என்ன காரணம்?

இயற்கையைச் சூறையாடும் கார்ப்பரேட்டுகள்:

கார்ப்பரேட்டுகளின் லாப வெறியால், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை மற்றும் பிற கழிவுகளால் நிலம், நீர் ,காற்று என அனைத்தும் மாசடைந்து வருகின்றன.

இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில், நகரங்களில் அவ்வப்பொழுது வரலாறு காணாத மழைப்பொழிவும், அதிபயங்கர வெள்ளமும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன. அந்தப் பெரும் வெள்ளத்தில் சிக்கி வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டம் ஆகின்றன.

அஸ்ஸாமின் அலறல்:

அதன் ஒரு பகுதியாகத்தான் இப்பொழுது அசாமிலும் பெரும் மழை வெள்ள பாதிப்பால் 100க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்.சுமார் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் கதறல்:

அசாமில் மட்டுமா? ஜம்மு காஷ்மீரிலும் இதுபோன்ற ஒரு நிலைதான் தற்போது உள்ளது. அந்த மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் கனமழை காரணமாக பெரும்வெள்ளம் ஏற்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஜம்மு – ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து இரண்டு நாட்கள் மூடப்பட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.

டெல்லியின் மூச்சுத்திணறல்:

பள்ளி கல்லூரிகளில் தேர்வுக்கு பிறகு விடுமுறை விடப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்; திருவிழா காலங்களில், ஏன்? கொரோனா காலத்தில் கூட விடுமுறை விடப்பட்டதை பார்த்திருக்கிறோம்!

ஆனால், கடந்த நவம்பர் மாதம் தலைநகர் தில்லியில்; சுவாசிக்கும் காற்று நஞ்சாக மாறிவிட்டதாகக் கூறி, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்! காற்று மாசு காரணமாக டெல்லி மக்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் வரை குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பஞ்சாப் ஹரியானா மாநிலங்களின் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் தான் டெல்லியின் காற்று மாசடைந்ததாக ஊடகங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தன. ஆனால் உண்மை நிலை என்ன?

காற்று மாசுக்கான காரணங்கள்:

உலக அளவில் காற்று மாசுபாடு மிக அதிகமாக உள்ள 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் தான் உள்ளன. 51% காற்று மாசுக்கு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை தான் காரணமாக உள்ளது. 27 சதவீதம் மாசுக்கு காரணமாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை உள்ளது. விவசாய நிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதால் 17% மாசு ஏற்படுகிறது. 5% மாசு பிற காரணங்களால் ஏற்படுகிறது.

படிக்க:

மரணத்தை சுமந்து வரும் காற்று:

இந்த காற்றை சுவாசிப்பதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் மக்கள் இந்தியாவில் அகால மரணம் அடைகிறார்களாம். காற்று மாசின் காரணமாக, வட இந்தியாவில் வசிக்கும் 51 கோடி மக்கள் தங்கள் ஆயுள் காலத்தில் ஏழரை ஆண்டுகளை இழப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும்,குறிப்பாக தமிழகத்திலும் இதுபோன்ற நிலைமை தான் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக சென்னையும் தூத்துக்குடியும் உள்ளன.

நாம் என்ன செய்ய வேண்டும்?

கார்ப்பரேட்டுகள் தங்களின் தொழிற்சாலைக் கழிவுகளை உரிய சுத்திகரிப்பு இன்றி வெளியேற்றுவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கலாமா? கார்ப்பரேட் முதலாளிகள் நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்குவதை இனியும் அனுமதிக்கலாமா?

கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக மக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை , இன்னுயிரை இழக்க வேண்டுமா?

மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படாத பொருட்களின் உற்பத்தியில் கார்ப்பரேட்டுகள் ஈடுபடுவதை அனுமதிக்கலாமா?

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here