
ஏகாதிபத்தியங்கள் பரப்பி வரும் நுகர்வு வெறியையும் அதன் ஒரு அங்கமாக பழைய குடும்ப – தாலி மதிப்பீடுகள் மங்கி செல்வதையுமே இப்படம் காட்சிப்படுத்தி உள்ளது. ஆனால் மேட்டுக்குடி யினரிடமும் மேட்டுக்குடியாக பாவித்துக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்திடமும் பரவி உள்ள சீரழிவுகளையே கொண்டாட வேண்டியதாக, இயல்பானதாக கண் முன் நிறுத்துகிறது .
நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் தனுஷ் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என ஒரு கவிதையை போன்ற தலைப்பை வைத்துள்ளார்.
படத்தின் ஹீரோவாக அவரது உறவினரையே நடிக்க வைத்துள்ளார். அவரின் நடிப்பும் குரலும் தனுசையே நினைவூட்டுவதாக உள்ளது.
இன்றைய மேட்டுக்குடியினர் காதலையும் திருமணத்தையும் எப்படி அணுகுகின்றனர் என்பதை கதைக் கருவாக கொண்டுள்ளது இந்த படம்.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் கிராமங்களின் எதார்த்தத்தை இப்படம் சொல்லவில்லை. இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள மேட்டுக்குடிகளின் கலாச்சாரத்தையே கலர்ஃபுல்லாக முன் வைக்கிறது.
சொந்த வீட்டிலேயே மொட்டை மாடியில் இளம் பெண் மற்றொருவருடன் அமர்ந்து விடிய விடிய சரக்கு அடிப்பது, காதல் தோல்வி காரணமாக போதையில் மூழ்கி முழுதாக தெளியாமல் எழுந்து உட்கார்ந்து இருக்கும் மகனை செல்லமாக பெற்றோர்கள் கண்டிப்பது உள்ளிட்ட காட்சிகளே நம் சங்கிகளுக்கு கடுப்பை ஏற்படுத்த போதுமானது.
திருமணம் என்றால் சாதிப் பெருமையை முன்னிறுத்துவது, சாதி மதத்தை கடந்து காதலித்தால் ஆணவ படுகொலைகளை செய்வது என ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் சூழலில், நடுத்தர வர்க்கமும் மேட்டுக்குடிகளும் திருமணத்தை, காதலை, காதல் முறிவை அணுகும் கண்ணோட்டம் முற்றிலும் வேறானது.
இந்தப் படத்தில் வில்லன்களே இல்லை. திரைக்கதையை பொருத்தவரை எதிர்மறை கதாபாத்திரமாக எதுவுமே இல்லை. அதனால் வழக்கமான ஹீரோயிசமும் இல்லை. ஸ்டன்ட்டும் இல்லை. இப்படம் புதுவகையான பொழுதுபோக்கு மசாலாவாக தயாரிக்கப்பட்டுள்ளது.
படத்தில் அனைவரும் அநியாயத்திற்கு நல்லவர்களாகவே இருக்கிறார்கள். காதலியை மணம் முடித்த பின்னும் விட்டுத்தரும் கணவன்; தனக்கு மணம் முடிக்க பேசப்பட்டு வரும் ஆணையே “முன்னாள் காதலியுடன் சேர முடியுமா?” என்று முயற்சித்துப் பார்க்க திருமணத்திற்கு கோவாவிற்கு – அல்லது ஏதோ ஒரு கடலோர நகரத்திற்கு அனுப்பி வைக்கும் வருங்கால மனைவி; ஏழு ஆண்டுகளாக காதலையும் சொல்லாமல், அந்த காதலி இன்னொருவனுடன் காதலில் மூழ்கி திளைப்பதை பார்த்து ஏங்கும் நண்பன்; காதல் தோல்வியில் தவிக்கும் ஹீரோவை விடாமல் துரத்தும் பெண்கள் என புதிய ‘எதார்த்தம்’ என்று படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.
படிக்க:
✅ கார்ப்பரேட்டுகளின் பிடியில் சினிமா! ரசிகனின் தலையை தடவும் நடிகர்கள்!
✅ நாங்குநேரி வன்முறைக்கு சினிமா தான் காரணமா?
தாலியைப் பற்றி “அந்த ஏழு நாட்கள்” படத்தில் பாக்கியராஜ் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் புனித விழுமியங்களுடன் காட்சிப்படுத்தி இருப்பார். “அலைபாயுதே” படத்தில் அந்தப் புனிதத்தை நொறுக்குவதாக ஒரு காட்சி வைக்கப்பட்டு, கடும் விமர்சனத்துக்கு உள்ளானதும் உண்டு.
தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் தாலி ஏறிய உடனே அதை கழட்டத் துணியும் பெண்ணாக, கட்டியவனே தாலியை கழட்டி வைத்துக் கொள்ளும் ஆணாகவெல்லாம் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைச் சொல்வது படத்தின் இறுதிக்காட்சியை சொல்வதாகும் என்றாலும் தவிர்க்க முடியவில்லை.
இந்த காட்சியை முழுமையாக காட்டாமல் இயக்குநர் தனுஷ் சாமர்த்தியமாக கதையை நகர்த்துகிறார். தாலியை கழட்டி எடுக்கும் அல்லது கழட்டித் தரச் சொல்லி வாங்கும் காட்சி எடுக்கப்படவே இல்லையா? அல்லது எடுத்த பின் கட் செய்தார்களா? அல்லது சென்சார் போர்டு நீக்கினார்களா? என்ன நடந்துள்ளது என்பது தெரியவில்லை.
உண்மையில் கழுத்தில் தொங்கவிடப்படும் தாலி சரடுக்கு இவ்வளவுதான் மதிப்பு என்று காட்சிகளாக காட்டாமல் மறைமுகமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பிற்போக்காளர்களுக்கு எரியத்தான் செய்யும். நிலப்பரபுத்துவ போக்கு மற்றும் மதிப்பீடுகளை மிதிக்கும் இந்த எதார்த்தம் காவிகளை, மத – சாதி சடங்குகளில் ஊறித்திளைக்கும் வெறியர்களை கதற விட போதுமானது எனினும் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் இருந்த இடத்தில் அதற்கு மாற்றாக மேம்பட்ட விழுமியங்கள் எதையும் முன்வைக்கவில்லை. விழுமியங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.

இன்றைய இளம் தலைமுறையினரின் கண்ணோட்டங்களை, பெருநகரங்களில் வாழும் மேட்டுக்குடி இளம் தலைமுறையினரின் பழக்க வழக்கங்களை அல்லது டீன் ஏஜில் கனவு காணும் அவர்களின் விருப்பங்களை காட்சிப்படுத்தியுள்ளது மொத்தத்தில் இந்தப் படம் உழைக்கும் மக்கள் பார்ப்பதற்கும் தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்வதற்கும் எதுவும் இல்லாத ஒன்றுதான்.
வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய மேட்டுக்குடியினரின் ஊதாரித்தனங்களை சாமானியர்கள் வெறுக்கும் படியோ அல்லது தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கவில்லையே என ஏங்கும்படியோ காட்டுகிறது.
இளம் நடிகர்களின் நடிப்பு, பாடல், நடனம், பின்னணி இசை, கொஞ்சம் சென்டிமெண்ட், கொஞ்சம் காதல், கொஞ்சம் ஏக்கம் சற்று அதிகப்படியான நகைச்சுவைகள் என அனைத்தும் இளைஞர்களை மட்டுமே இலக்கு வைத்து சேர்த்து செய்துள்ள காக்டைல் பானமாக உள்ளது .
நமது மருமகளுக்கு அப்பா அம்மா இல்லை என்பதால் மணமேடையில் அவள் தனியாகத்தான் இருக்க முடியும். அது அவளின் மனதை நோகடிக்கும் என்பதால் தனது மகனின் திருமணத்தை காண நேரில் செல்வதையே தவிர்க்கும் அளவுக்கு மேட்டுக்குடியினரிடம் உயர்ந்த பண்புகள் இருப்பதாக காட்சிப்படுத்தியுள்ளனர். கோடீஸ்வரனான தனது மகளை காதலித்து, மருமகனாக ஒரு சாதாரண சமையல் கலை படிக்கும் நடுத்தர வர்க்க இளைஞன் வருவதை முதலில் எதிர்க்கும் தந்தை பின்னர் ஏற்றுக்கொண்டதாக வைத்துள்ளனர். இதையெல்லாம் நம்பத்தான் முடியவில்லை .
வழக்கமான காதல் கதையாக முன்வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் முற்போக்காளர்கள் கொண்டாட எதுவும் இல்லை. ஆனால் பிற்போக்காளர்கள் எதிர்ப்பதற்கு நிச்சயமாக சில காட்சிகள் இருக்கவே செய்கின்றன.
- இளமாறன்