பாலஸ்தீனம் தீப்பற்றி எரிவது ஏன் ? :
“ஆண்டாண்டாய் பாலஸ்தீன விடுதலைக்காக, இசுரேலியப் பாசிசத்தை எதிர்த்து நடக்கும் இந்தப் போரில், அடுத்த தலைமுறையை, அப்பாவிக் குழந்தைகளைப் பலிகொடுத்த எல்லா பாலஸ்தீனத் தாய்களுக்கும் என் இதயம் ரத்தக்கண்ணீர் சிந்துகிறது……. ”
–கவிஞர் ஹானா ஹஸீயெம்.
(இக் கவிதையில் பாலஸ்தீன உணர்வு ததும்பியிருக்கிறது; கவிதை என்பதோடு குறும்படத் திரைக்கதையாகவும் அமைந்திருக்கிறது.)
————————————————————————-
யார் அதைஎண்ணுகிறார்கள் ?
கண்ணீர்த் துளி,
ஒரு திவலையாய்
தரையில் நீர்ப்பரப்பாய்.
அந்திவானம், கண்கூசும் ஒளி!
என் உயிர் தண்ணீருக்காய்த் தவிக்கிறது!
வாசம், மெல்ல வரும் வாசம்.
வடிவம், மிக நேர்த்தியான வடிவம்.
ஓர் இனியமுகம் தோன்றி
பின் — தொலைவில் நகர்ந்து….
மறைந்துவிடுகிறது.
ஒலி, ஓர் ராகமாய்;
துடிப்பு, ஓர் தாளமாய்.
சீரான இடைவெளியில்
வருகிறது, நிறைகிறது.
நிறங்கள், மங்கலாக.
ராணுவச்சீருடைகள், கனமாக.
அவர்கள் பார்வை கொடூரமாக,
அந்த இதயங்களோ, கோழைகளாக.
டாங்கிகள் :
கொழுத்துத் திரிந்து
வெறுப்பைக் கக்கியவாறு நகர்கின்றன.
அதன் மூளை, அற்பச் சிறுமையாக ;
சொற்களோ, பொறுப்பற்ற உளறலாக.

எனது நம்பிக்கை — வெற்றிடமாகவே உள்ளது.
நம்பிக்கையை — எங்கிருந்து நான் பெறுவது ?
பிணங்கள் எங்கும் சிதறி
சில இடங்களில் அருகருகே, சில பல கோணங்களில்.
ரத்தச்சேறோடு கிடக்கின்றன,
எவ்வளவு ? கணக்கிலடங்காது.
ஒரு சோகநாடகமாய்ப் பிணங்கள் —
யார் அதை எண்ணுகிறார்கள் ?
ராகம் ஒவ்வொன்றாய் எழுந்து பின்
குளிர்ந்து கெட்டியாகி
மௌனப்பாறையில் மோதும்
வாளின் ராகம்போல் அதிரும்.
அந்தப் பாறை
“புனிதக் கடவுள் தூபிகளைக்”
கட்டிமுடித்த பாறையாம் !
ஓயாத சண்டைகள், என்றாலும்
ஓயாத நம்பிக்கைகளைக் காட்டும்
பளிச்சிடும் முகங்கள் ;
ஓயாது தொடரும் போர்கள்,
தணியுமா தெரியவில்லை.
உணர்வுகள் ஓங்கிவீசுகின்றன
அலைகள் போல ;
இழப்புகளும்தான் வந்துகொண்டே இருக்கின்றன–
ஆனால்
யார் அதை எண்ணுகிறார்கள்?

கரும்புகை சுருள் சுருளாய்க்
காற்றில் நிரம்பிவழியும் ;
கண்ணாடிகள் தூளாய் நொறுங்கித்
தரையெங்கும் தெறித்துக் கிடக்கும்.
சின்னஞ்சிறு குழந்தைகள்
சல்லடைக் கண்களாய்த் துளைபட்டு ……
இதோ
தரை எங்கும் நிரம்பி……
இனி அவர்கள் தேவதைகள் அல்ல,
வலியூட்டும் சின்னக் குழந்தைகள் —
பிணங்களாக….
அழகுகள்….
அழகுப் பிணங்களாக….
அதோ ஓர் அழகுமுகம்
வசீகர இதழ்கள்,
கவனித்து மைதீட்டிய புருவங்கள்
தலையைமூடிய
கருப்பு – வெள்ளை
சச்சதுரமாக அச்சிட்ட மூடுதுணி….
அவை உச்சரித்த கடைசிச் சொற்கள்,
துணிச்சல் துணிச்சல்.
கடைசியாக வந்து நிற்கும்
ஊடகமே சாட்சியாக —
அந்த மெலிந்துபோன இதயம்,
வெள்ளந்தியான மனம்….
எல்லாம் இழந்தோம் !
உலகம்
பார்த்தவாறு இருக்கிறது ;
உலகம்
துக்கம் காக்கிறது !
இப்படி இழப்புகள் எத்தனை எத்தனை ?
யார் அதை எண்ணுகிறார்கள் ?

மனித இதயங்கள்
இளம் தளிர் முதல் பழுத்ததுவரை
அமைதி அமைதி அமைதியை நோக்கித்
தவிக்கின்றன;
ஆனால், இன்னமும்
துணிவுக்குக் குறைவேயில்லை.
இழப்புகள் நிரம்பிக்கொண்டே இருக்கும்போது
அதை எண்ணிக்கொண்டே இருக்கும்போது —
துணிவு
எப்படி எழாமல் போகும் ?
இதையும் படியுங்கள்:
தியாக இழப்புகள்,
எத்தனை எத்தனை —
யார் அதை எண்ணுகிறார்கள் ?
நீங்கள் எண்ணுகிறீர்களா ?
நாம் எண்ணுகிறோமா??
கவிஞர் ஹானா ஹஸீயெம் : அராபிய எமிரேத்தில் ( UAE ), அராபிய – பிரிட்டிஷ் தாய் தந்தையருக்குப் பிறந்து வளர்ந்து தற்போது இங்கிலாந்தில் வாழ்கிற பெண்கவிஞர். எமிரேத் — பாலஸ்தீனம் இரண்டோடும் உயிரோட்டமான தொடர்பு கொண்டுள்ளார். பாலஸ்தீன விடுதலையை உயிராக நேசிக்கிறார்.
( இருபது ஆண்டுகள் முன்னால் ஆங்கிலத்தின் படி ஒன்று
அஜித் என்ற அந்தக்கால நண்பன் மூலம்கிடைக்கப் பெற்று )
தமிழில் மறு ஆக்கம் மற்றும் குறிப்புக்கள் :
- பீட்டர்.