வாழ்வதைப் போல சங்கடமான விஷயம் வேறு எதுவுமே இல்லை

– மனுஷ்ய புத்திரன்

”வாசிப்பில்லாத மனிதர்கள் ஒரு மிகப் பெரிய அனுபவத்தை இழக்கிறார்கள். உங்களிடம் ஒரு வைரக் கல்லைக் கொடுத்தால்கூட, எது வைரம் என்ற கான்ஸெப்ட் உங்கள் மனதில் இருந்தால்தான் நீங்கள் அந்த வைரத்தை வைரமாக உணரமுடியும். அது கண்ணாடிக் கல்லா, வைரமா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நிறைய பேர் வைரத்தைக் கண்ணாடிக் கல் என்று தூக்கி எறிந்துவிடுகிறார்கள். கண்ணாடிக் கற்களை வைரங்களாக வைத்திருக்கும் மனிதர்களும் இருகிறார்கள். ஏன்? எது கண்ணாடி, எது வைரம் என்பதை எது உங்களுக்குச் சொல்லித்தரும்?

நீங்கள் வைரத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லையே! இப்படி வாழ்க்கையில் நமக்குக் கிடைத்த எத்தனையோ வைரங்களை நாம் தொலைத்திருக்கிறோம். காரணம் அவற்றைக் காண்பதற்கான கண்கள் நம்மிடம் இருந்ததில்லை; பார்வை நம்மிடம் இருந்ததில்லை. எத்தனை உறவுகளை நாம் போகிறபோக்கில் தொலைத்திருக்கிறோம்!”


அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் ஜூம் மீட்டிங் என்று சொல்லலாம். இது போன்ற விஷயங்கள் எனக்கு அவ்வளவாகப் பழக்கமில்லாதவை. ஆனால், வாசக நண்பர்களை இதன் மூலமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பது எனபது எனக்கு உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நியாயமாகப் பார்த்தால் இந்தச் சமயத்தில் நான் சிங்கப்பூரில் இருக்கவேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்களாக ஷாநவாஸ் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். போன வாரம்கூட போனில் பேசும்போது, “கொரானா இருந்தாலும் பரவாயில்லை… வாருங்கள்” என்றார். அதனால் கூடிய சீக்கிரம் நான் இங்கே வருவேன். வந்து நேரில் உங்களையெல்லாம் சந்திப்பேன்.

இப்படி ஒரு டெக்னாலஜி வழியாக நாம் தொடர்புகொள்ள இயலுகிறது என்பது ஒரு விதத்தில் நாம் யாரும் தனிமைப்படுத்தப்பட்டுப் போகவில்லை என்பதை உணர்த்துகிறது. அல்லது முன்பு எப்போதையும்விட நாம் இன்னும் தொடர்பில் இருப்பதற்கான ஓர் அவசியம் இருக்கிறது என்பதை இந்தக் காலகட்டம் நமக்கு உணர்த்தியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்தக் காலகட்டம் உருவாக்கக்கூடிய தனிமையைக் கலை, இலக்கியம் வழியாகத்தான் நாம் கடந்து செல்ல முடியும்.

நீங்கள் வெளியே சுற்ற முடியாது; நிறைய நண்பர்களைப் பொது இடங்களில் போய்ப் பார்க்க முடியாது; உணவகங்களுக்குப் போக முடியாது; திரைப்படத்துக்குப் போக முடியாது; கடற்கரைக்குப் போக முடியாது. அவ்வளவு ஏன் – நமக்கு மிகவும் பிடித்தவர்களை – ஒரு காலத்தில் நம்மை மிகவும் நேசித்தவர்களைக்கூட நேரில்போய்ப் பார்க்க முடியாது. அதாவது எவையெல்லாம் நம்முடைய பிளாங் ஹவர்ஸை இட்டு நிரப்பிக்கொண்டிருந்தனவோ அவற்றையெல்லாம் செய்ய முடியாது. காதலன்கள் காதலிகளையும், காதலிகள் காதலன்களையும் பார்க்க முடியாது; நண்பர்களைச் சந்திக்க முடியாது; அந்தச் சந்தர்ப்பத்தில் கலையும் இலக்கியமும் நமக்கு மிகப் பெரிய வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு காலத்தில் மனிதன் அப்படித்தான் இருந்தான். இன்றைக்குத்தான் நமக்கு இந்த அவுட்டிங் என்று சொல்லப்படும் வெளியே போவதற்கு இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. வெளியே போவது என்றால் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் விஷயங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறோம் இல்லையா? நூறு வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து இல்லாத காலகட்டத்தில் மனிதன் எங்கே போனான்? இவ்வளவு பொழுதுபோக்குகள் இல்லாத காலகட்டத்தில் மனிதன் எங்கேதான் போயிருப்பான்? தாத்தா பாட்டியெல்லாம் எங்கே போயிருப்பார்கள்? வாய்க்கால் வரப்புகளுக்கு வேலைக்குப் போயிருப்பார்கள்; அப்புறம் வீட்டுக்கு வந்திருப்பார்கள்; வியாபாரம் செய்திருப்பார்கள்; வீட்டுக்கு வந்திருப்பார்கள். வீட்டையும், தொழிலையும் தவிர யாருக்கும் எந்த வெளியுலகமும் கிடையாது.

அப்பொழுதெல்லாம் ஊரில் ஒரு கூத்து நடக்கும். கூத்தை இரவெல்லாம் கண்விழித்துப் பார்ப்பார்கள். திருவிழாவுக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள். அல்லது ஊரில் நடக்கும் ஒரு சிறிய கலை நிகழ்ச்சிக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள். அல்லது நான்கு பேர்கள் உட்கார்ந்து பேசுவதைக் கேட்கக் காத்துக்கொண்டிருப்பார்கள். இப்படித்தான் காலம் காலமாக நம்முடைய கதைசொல்லிகள்கூட உருவாகியிருந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

அதற்கப்புறம்தான் – சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுப்போக ஆரம்பித்ததற்கப்புறம் – நாம் நமக்கென்று தனிப்பட்ட பொழுதுபோக்குகளை நிறைய உருவாக்கிக்கொண்டோம். சிறிய, சிறிய குழுக்களாக வெளியுலகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டோம். இந்த லாக்டவுன் என்பது மனிதகுல வரலாற்றின் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத ஒரு புது அனுபவம். இது வரைக்கும் நமக்கு என்னவெல்லாம் கொடுக்கப்பட்டனவோ அவை எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டன. அதற்குப் பதிலாக ஒரு நூறு வருடங்களுக்கு முன்பான பிரைமரி ஸ்டேஜ் என்று சொல்லப்படும் நிலைக்குக் கொண்டுவிடப்பட்டுவிட்டோம்.

ஆனால், நாம் சும்மா இருக்க மாட்டோம் அல்லவா? நாம் திரும்பவும் டெக்னாலஜி வழியாக இணைக்கிறோம். ‘நீ எப்படி எங்களை லாக் அவுட் செய்யமுடியும்? நாங்கள் 100 பேர் சேர்வோம்; 50 பேர் பேசுவோம்; ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வோம்’ என்கிறோம். மனிதனுடைய மிகப் பெரிய சவாலாக இதைத்தான் நான் பார்க்கிறேன்.

மனிதனை மிகவும் ‘கெட்ட பையன்’ என்று சொல்லலாம். எல்லா சூழ்நிலைகளிலும் அவன் மீண்டு வந்திருக்கிறான். இது போல எத்தனை பேண்டமிக்குகளை நாம் பார்த்திருக்கிறோம். எவ்வளவோ பேர் இறந்திருக்கிறார்கள். ஆனாலும், நாம் மீண்டு வந்திருக்கிறோம்.

யோசித்துப் பாருங்கள்… இங்கே பேசியவர்கள் எல்லாம் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். தியடோர் பாஸ்கரன், ஜெயமோகன், மௌனி… இப்படி ஒரு பரந்த தளத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான முக்கியமான ஆசிரியர்களைப் பற்றியும் அவர்களது படைப்புகளைப் பற்றியும், அவர்களது வாசக அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள்.

நமக்குக் கால காலமாக உருவாக்கிய இலக்கியம் சார்ந்த ஒரு திறப்புக் கிடைத்திருக்கிறது. வால்ட் விட்மன் ஒரு கவிதையில் “இந்தக் கவிதைகளைத் தொடுகிறவன் என்னையே தொடுகிறான்” என்று சொல்வார்.
நாம் ஓர் எழுத்தாளைனை – ஒரு படைப்பாளியை – வாசிக்கிறபோது ஒரு தனி மனிதனை வாசிக்கவில்லை… அவன் வாழ்நாள் முழுக்கக் கற்றறிந்த ஓர் உணர்வு, அவன் தேடிக் கண்டடைந்த ஓர் உலகம் ஆகியவற்றை அவன் அப்படியே நம் கைகளில் கொடுக்கிறான். அதை அப்படியே நாம் எடுத்துக்கொள்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால் இந்தப் புத்தக அலமாரியைப் பார்த்தோம் என்றால், அது தனியாக இந்த அறையில் இருப்பது போலத் தோன்றும். ஆனால் எத்தனை நூறு, நூறு ஆசிரியர்கள் என்னோடு இருக்கிறார்கள்! எத்தனை ‘மாஸ்டர்’கள் என்னுடன் இருக்கிறார்கள்!

என்னுடைய எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லக்கூடிய ஆசிரியர்கள்என்னோடு இருக்கிறார்கள். இதில் பிரச்னை என்னவென்றால் நிறையப் பேருக்கு ஆசிரியர்களோடு உரையாடுவதற்கான மொழி இல்லை; ஆர்வம் இல்லை; அதற்கான ஓர் உத்வேகம் இல்லை. இந்த ஆசிரியர்கள் நமக்கு எதைக் கொடுப்பார்கள் என்ற ஒரு பார்வை இல்லை. நான் அதைத்தான் பார்க்கிறேன். அப்படிப் பார்க்கும்பொழுது இந்த லாக் டவுன் காலத்தை ரொம்பப் பயனுள்ளதாக அமைத்துக்கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். நிறையப் பேர்களிடம் நல்ல புத்தகங்களே இருக்காது. சில பேர்தான் புத்தகங்களை அதிகமாகத் தேடித் தேடிச் சேகரித்து வைத்துக்கொண்டிருப்பார்கள்.
இன்னொரு விஷயம், நேரம் தொடர்பானது. பல பேர், “படிப்பதற்கு எனக்கு நேரமே இல்லை” என்பார்கள். இப்போது நிறைய நேரத்தைக் காலம் நமக்குக் கொடுத்திருக்கிறது. ஆனால், இப்படி நிறைய நேரம் கிடைத்திருக்கும் சமயத்தில் எவ்வளவு பேர் படிக்கிறோம் என்ற ஒரு கேள்வியைக் கேட்டால் மிகவும் நகைச்சுவையாக இருக்கும்.

நிறையப் பேர் உண்மையை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தார்களோ – திரும்பவும் அதே சோஷியல் மீடியா, அதே கேம்ஸ், அதே திரைப்படங்கள், அதே சேட்டிங் இதைத்தான் செய்துகொண்டிருப்பார்கள். இவற்றைத் தவறு என்று சொல்லவில்லை. நானும் அவற்றையெல்லம் செய்பவன்தான். இதெல்லாம் தவறு இல்லை. ஆனால் படிக்க நேரம் இல்லையென்று சொல்கிறோம் அல்லவா? அது சும்மா. இந்த குவாரன்டைன், லாக்டவுன் எல்லாம் வராதபொழுது படித்துக்கொண்டிருந்தவர்கள்தான் இப்போதும் படிக்கிறார்கள். முன்பு எதையும் படிக்காதவர்கள் இப்போதும் படிக்கமாட்டார்கள். அவர்களைக் கட்டிவைத்து உரித்தாலும்கூடப் படிக்கமாட்டார்கள். இதுதான் நாம் பார்க்கக்கூடிய ஒரு விஷயம்.

படிப்பு என்பது ஒரு பெரிய வேலை. அது ஒரு பயிற்சி. என்னைப் பொருத்த வரைக்கும் எழுதுவதைப் போலத்தான் படிப்பதும். எழுதுவதற்கு நமக்கு எப்படி ஒரு நீண்ட பயிற்சியும் முயற்சியும் தேவைப்படுகிறதோ, எப்படி அவற்றைத் திரும்பத் திரும்ப நாம் பயிற்சி செய்கிறோமோ அப்படியேதான் படிப்பதும்!
கொஞ்ச காலம் படிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் உங்களுக்குப் புத்தகங்களிலேயே நாட்டம் இல்லாமல் போய்விடும்; அவற்றைப் பார்த்தாலே எரிச்சலாக வரும்; தூக்கம் வரும். தூங்குவதற்குப் புத்தகங்களைப் பயன்படுத்துபவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். சரி… புத்தகத்தால் ஏதாவது ஒரு பயன் இருந்தால் நல்லதுதானே?

இதில் ஒரு செய்தி உண்டு. நாம் படிக்கும்போது இரண்டு விதமான வாசிப்புகள் இருக்கின்றன. ஒன்று, தேர்ந்தெடுத்துப் படிப்பது. அது கவிஞர்களாக இருக்கலாம்; கதாசிரியர்களாக இருக்கலாம்; உரைநடை ஆசிரியர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களில் நாம் முதன்மையாக – கண்டிப்பாக வாசித்தே தீரவேண்டியவர்கள் இருப்பார்கள்.

என்னைப் பொருத்த வரை தமிழில் முதல் நிலையில் வாசிக்கவேண்டிய புத்தகங்கள் என்று பார்த்தால் ஒரு 100 புத்தகங்கள்தாம் இருக்கின்றன. இரண்டாம் நிலையில் படிக்கவேண்டிய புத்தகங்கள் ஒரு 1,000 இருக்கும். ஆனால், நமக்கு நேரம் இருக்கும்பொழுது எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதற்கு ஏராளமானவை இருக்கின்றன.

அப்படிப் பார்க்கும்பொழுது இந்த முதல் நிலை ஆசிரியர்களை நாம் பயில வேண்டும். கவிஞர்கள் என்றால் ஒரு பத்து இருபது பேரை நீங்கள் நிச்சயம் படித்தாக வேண்டும். அதே போல சிறுகதை ஆசிரியர்கள், நாவல் ஆசிரியர்கள் என்றால் ஒரு பத்து, இருபது பேரைப் படித்தாகவேண்டும். “1,000 சிறுகதைகளை நான் படிக்கப் போகிறேன்” என்று ஒரு நண்பர் சொன்னார். ஒரே ஆசிரியர்கூட 200 அல்லது 300 கதைகளை எழுதியிருப்பார். எனவே, அப்படிப் படிக்கக்கூடாது.

1,000 கதைகளைப் படிக்கவேண்டும் என்றால் நான் முதலில் 100 சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்துகொள்வேன். அதில் 50 பேர் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களாகவும், 50 பேர் பிற மொழிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். ஒவ்வொருவருடைய கதைகளிலும் பத்துப் பத்துக் கதைகளை நான் படிப்பேன். அப்படிப் படிக்கிறபோது, அவர்களுடைய உலகம் என்ன என்கிற ஒரு பரந்த பார்வை கிடைக்கும். அப்படிக் கிடைக்கிறபோதுதான் அடிப்படையில் நாம் சிறந்த வாசகர்களாக உருவாக முடியும்.
நிறையப் பேருக்கு அந்தச் சிறந்த வாசகர்களாக உருவாவதற்கான பரந்த வாசிப்பு என்பதே இருப்பதில்லை. சில பேருக்கு சில எழுத்தாளர்களை மிகவும் பிடிக்கும். உதாரணமாக ஒருவருக்கு ஜெயகாந்தனை மிகவும் பிடிக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் ஜெயகாந்தனையே வாழ்க்கை முழுவதும் படித்துக்கொண்டே இருப்பார். இன்னொருவருக்கு இன்னோர் எழுத்தாளரைப் பிடிக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். பெயர்களைச் சொல்வதைத் தவிர்த்துவிடலாமே – வம்பு வேண்டாம் – அவரையே படித்துக்கொண்டிருப்பார்.

இப்படியெல்லாம் படிக்கும்போது, சில பேர் சில தத்துவஞானிகளை அப்படியே பின்பற்றுவார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பின்பற்றுகிறார்கள் என்றால் அவர்களுக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தியைத் தவிர உலகில் வேறு என்ன இருக்கிறதென்றே தெரியாது. அவர்களை எல்லாம் பார்க்கும்போது மிகவும் பாவமாக இருக்கும். சில பேர் ஓஷோ படிக்கிறார்கள் என்றால் ஓஷோவை மட்டுமே படித்துக்கொண்டிருப்பர்கள்.
அறிவு என்பது மிகவும் வெர்ஸடைலாக இருக்கவேண்டும். பல்வேறு விதமான ஆசிரியர்களையும், கவிஞர்களையும் படிக்கும்போது 2,000 ஆண்டுகளாகக் கவிதை எழுதிய ஒரு மொழியில், நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் படித்தாலும்கூடப் பரவாயில்லை. நிறைய ஆசிரியர்களுடைய படைப்புகளை நான் தொட்டுப்பார்த்திருக்கிறேன் அவர்களோடு – அவர்கள் புத்தகங்களோடு – ஒரு மணி நேரமாவது நான் உரையாடி இருக்கிறேன் என்னும்போது அந்த ஆசிரியர்கள் மிகச் சிறந்த வாக்கியங்களை உங்கள் மனதில் விட்டுச் செல்வார்கள்.

நம் தமிழ் மரபிலேயே ஒரு பழமொழி இருக்கிறது. ‘கண்டதையும் படிக்கக்கூடியவன் பண்டிதனாவான்’. நான் எல்லா விதமான விஷயங்களையும் அப்படிப் படிக்கக்கூடியவன். க்ரைம் நாவல்கள் படிப்பேன்; கிளாசிக்ஸ் படிப்பேன்; தத்துவ நூல்களைப் படிப்பேன்.

எனக்கு அதிலெல்லாம் ஒரு வேறுபாடும் கிடையாது. ஒவ்வொருவருடைய மொழியும் எப்படி இருக்கிறது, புலமை எப்படி இருக்கிறது? ஒவ்வொருவரும் சொல்லியிருக்கிற சிறந்த விஷயங்களைப் படிப்பேன். ‘கோலம் எப்படிப் போடுவது?’ என்ற புத்தகத்தைக்கூட ஆர்வமாகப் படிப்பேன். ஏனென்றால், எப்படி ஒரு கோலம் போடுவது என்று எனக்குத் தெரியாது. அது ஓர் அறிவு. சமையல் புத்தகத்தை எடுத்தும் வாசித்துப் பார்ப்பேன். ஏனெனில், ஓர் எழுத்தாளனாக எல்லாத் துறை சார்ந்த அறிவும் எனக்குத் தேவை.

ஆனால், நிறையப் பேரிடம் இருக்கும் பிரச்சனை இதுதான். ஒருவர் கவிஞர் என்றால் கவிதைகளை மட்டுமே படித்துக்கொண்டிருப்பார். உருப்படாமல் போவதற்கு முதல் வழி அது. கவிதை எழுதுபவன் முதலில் பிற துறைகள் சார்ந்த நூல்களைப் படிக்கவேண்டும். தத்துவம், வரலாறு, பொருளாதாரம் போன்றவற்றில் அவனுக்கு ஈடுபாடு இருக்கவேண்டும். அப்போதுதான் அவற்றின் சாரம் அவனுடைய கவிதைகளில் இருக்கும்.

உரைநடை ஆசிரியர் என்றால் அவர் நிறையக் கவிதைகளையும் நாவல்களையும் படிக்கவேண்டும். இப்படிக் கலவையாக நீங்கள் படிக்கும்போதுதான் உங்களுடைய அறிவு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பது என்னுடைய அபிப்ராயம். நிறையப் பேரிடம் இருக்கும் சிக்கல் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்துப் படிப்பது. அப்படிப் படிக்கும்போது உங்களை நீங்களே குறுக்கிக்கொள்கிறீர்கள். இது ஒரு பிரச்னை.

அடுத்தது வழிபாடு. சில எழுத்தாளர்களை வழிபடுவது. ஸ்பெஷல் ரீடர்ஸ் ஆக இருப்பது; பின்பற்றுவது. சில எழுத்தாளர்கள் அதை மிகவும் ஊக்குவிக்கவும் செய்கிறார்கள். ஓர் எழுத்தாளன் செய்யக்கூடிய முக்கியமான பணி தன்னிடம் வரும் வாசகனுக்கு யாரையெல்லாம் படிக்கவேண்டும், யாரிடமெல்லாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வதுதான். அவனை ஒரு தொண்டனாக மாற்றக்கூடாது. சில எழுத்தாளர்கள் அதைச் செய்கிறார்கள். அது தேவையில்லை. எனக்கு நூற்றுக்கணக்கில் ஆசான்கள் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான வழிகாட்டிகளும் இருக்கிறார்கள். வாசிப்பு என்னும் விஷயத்தில் தனிப்பட்ட வழிபாடு என்பது கூடாது.

சில எழுத்தாளர்கள் நம்முடைய மன உலகத்துக்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். உதாரணமாக எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இளையராஜா உங்களுக்கு மிகவும் பிடித்தமானவராக இருப்பார். அல்லது உங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை மிகவும் பிடிக்கும். இளையராஜாவை ரசிப்பதற்கு நீங்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் விசிறியாக இருப்பது தடையாகிவிடக்கூடாது; எம்எஸ்வியை ரசிக்க அது ஒரு தடையாகிவிடக்கூடாது.

உங்களுடைய மன உலகத்தோடு தொடர்புடைய சில எழுத்தாளர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். ஆனால் ஒரு குழுவின் ஒரு பகுதியாக நீங்கள் மாறக்கூடாது. அது ஓர் அந்தரங்கமான ஓர் உறவு. ஓர் எழுத்தாளனுக்கும் உங்களுக்குமான உறவு என்பது மிக மிக அந்தரங்கமானது. இன்னும் சொல்லப்போனால் நிறைய வெளிச்சங்கள் உங்களுக்குத் தேவை. ஓர் எழுத்தாளனைப் புரிந்துகொள்வதற்கே இன்னோர் எழுத்தாளன் தேவை. நீங்கள் ஒரு பத்து எழுத்தாளர்களைப் படித்தால்தான் அதில் – ஒவ்வொரு எழுத்தாளரும் எப்படித் தனித்துவமானவர் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த மாதிரியான ஒரு விஷயம்தான் அது.

அப்படிப் பார்க்கும்பொழுது பரந்துபட்ட வாசிப்பு என்பதும், வாசிக்கிற விஷயங்களை நாம் குறிப்புகள் எடுத்துக்கொள்வது, அல்லது அதைப் பற்றி விவாதிப்பது, உரையாடுவது என்பனவும் ஒரு கதையைத் திரும்பச் சொல்கிற விஷயம் இல்லை.

உதாரணத்துக்கு… புதுமைப்பித்தனுடைய ஒரு கதையைப் படிக்கிறேன் என்றால், புதுமைப்பித்தன் அந்தக் கதையை எப்படி எழுதியிருக்கிறார் என்று உங்களுக்கு நான் சொல்வதில் பெரிய உபயோகம் இல்லை. அந்தக் கதை உங்களிடமும் இருக்கும். அந்தக் கதையில் ஏதாவது ஒரு வரி உங்களை பாதித்திருக்கும் அல்லவா? உங்களுடைய வாழ்க்கை அனுபவத்தோடு ஏதாவது ஒரு வரி தொடர்புடையதாக இருக்கும் அல்லவா? உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தோடு அந்த வரி உங்கள் மனதைக் கிளர்ச்சியடைய வைத்திருக்கும் அல்லவா? அதுதான் முக்கியம்.

நீங்கள் ஒருவருடைய கவிதையைப் படிக்கிறீர்கள். நகுலனின் ஒரு கவிதையைப் பாருங்கள்: “இருப்பதற்கென்றுதான் வருகிறோம். இல்லாமல் போகிறோம்”. இதில் ‘இருப்பதற்கென்றுதான் வருகிறோம்’ என்பதில் ஒரு பிடிவாதம் இருக்கிறது. ‘நான் இருப்பதற்குத்தாண்டா வந்தேன் இங்கே’. ‘இல்லாமல் போகிறோம்’ என்னும்போது டோன் அப்படியே டவுனாகிறது.

எனக்கு நகுலனுடைய இன்னொரு கவிதை ஞாபகம் வருகிறது. ‘நேற்று ஒரு கனவு. சுசீலாவின் முதல் கர்ப்பம் அலசிவிட்டதாக’ – இதைச் சொல்லிவிட்டு, ‘இந்த மனதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது’. ‘இந்த மனசை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்துவிட முடியாது’ என்று சொன்னால், என் மனதால்தானே நான் யோசிக்கிறேன்? அப்போ இந்த மனதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்கிற இன்னொரு மனது என்பது என்ன? அது எங்கே இருக்கிறது? அப்படியானால் எனக்கு இரண்டு மனம் இருக்கின்றனவா? என் மனதைப் பற்றியே யோசிக்கும் இன்னொரு மனம் இருக்கிறதா? அப்படியானால் என்னுடைய எமோஷைனை ஹேண்டில் செய்யும் ரேஷனாலிடி பற்றிப் பேசினேனா? இல்லை மனம் என்பதே பல்வேறு அடுக்குகளைக் கொண்டதா? அப்படியானால் இந்த மனதை வைத்துக்கொண்டு நான் ஒன்றும் செய்யாமல் இருந்த தருணங்கள் வாழ்க்கையில் எவ்வளவு இருக்கும்? இந்த மனதைக் கழற்றித் தூரப்போட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்த தருணங்கள் எவ்வளவோ இருக்கின்றன.
இந்த மனம் இல்லாமல் போகவேண்டும் என்பதற்காகத்தானே நிறையப் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? இந்த மனம் இல்லாமல் போகவேண்டும் என்பதற்காகத்தானே நிறையப் பேர் குடிக்கிறார்கள்? அல்லது வேறு எது எதற்குள்ளாகவோ மூழ்கிப்போகிறார்கள்? இந்த மனதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. இந்த மனம் சில சமயம் ஒரு பெரிய பாறாங்கல் போலக் கிடக்கிறது. சில சமயம் ஓர் இறகு போல இருக்கிறது.
ஓர் இரண்டு வரிகள் கொடுக்கக்கூடிய இந்த அனுபவம், இது எனக்குள் எவ்வளவு திறப்புகளை ஏற்படுத்துகிறது!

நீங்கள் ஒரு 100 பக்கம்கொண்ட ஒரு கதையை வாசிக்கலாம். ஆனால், அதில் இரண்டே இரண்டு வரிகள்தாம் உங்களுக்கானவை. ஓர் எழுத்தாளர் 1,000 வரிகள் எழுதியிருப்பார். அது அவருடைய சௌகரியம். ஒரு கவிஞன் ஆயிரக்கணக்கான சொற்களை எழுதுவார். அது அவருடைய சௌகரியம். இரண்டே இரண்டு வாக்கியம்தான் உங்களுக்கான வாக்கியம். நீங்கள் எங்கே போனாலும் உங்கள் கூடவே அவை வந்துகொண்டிருக்கும். உங்கள் குழந்தை போல உங்களுடன் வந்துகொண்டிருக்கும்; அது உங்களுடைய கையில் இருக்கும் விளக்கைப்போல உங்களுடன் வந்துகொண்டேயிருக்கும்; எல்லா சந்தர்ப்பத்திலும் அந்த வரி ஞாபகம் வரும்.
நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். நிறைய நண்பர்கள், “அவை எங்களுக்கான வரிகள்” என்று சொல்வார்கள்.

“அழுகை வராமல் இல்லை;
ஒரு வைராக்கியம்
உங்கள் முன்னால் அழக்கூடாது”

ஏன் உங்கள் முன்னால் அழக்கூடாது? அந்த உங்கள் என்பது அந்தக் கவிதைசொல்லி எழுதிய சமயத்தில் யாரைப் பற்றிச் சொன்னார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் எத்தனை சமயங்களில் கண்ணீர் வந்தால்கூட, ‘இவங்க முன்னால் நாம் அழக்கூடாது’ என்று இருந்திருப்பீர்கள்! அத்தனை சந்தர்ப்பங்களும் உங்களுக்கு ஞாபகம் வரும். உடைந்து அழவேண்டிய நேரத்தில்கூட நீங்கள் வைராக்கியத்துடன் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பீர்கள். ‘நான் இவர்கள் முன்னால் அழக்கூடாது’ என்று இருந்திருப்பீர்கள். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். இப்படி உங்கள் அனுபவத்தினுடைய ஒரு கதவைத் தட்டித் திறக்கக்கூடிய வரிகளை நீங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஆயிரக்கணக்கான வரிகள் உங்களைச் சுற்றி எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. நாமும் படித்துக்கொண்டே இருகிறோம். ஆனால் எனக்கான சொல் எது, எனக்கான வாக்கியம் எது… அதைத் தரக்கூடிய எழுத்தாளர் யார், யார் என்னுடைய நினைவுகளின் அடுக்குகளைத் திறக்கிறார்கள், இதுதான் மிகவும் முக்கியம். அப்படி உங்கள் நினைவுகளுடைய அடுக்குகளின் வரிகளை நீங்கள் தொகுத்துக்கொண்டே வருகிறபோது ஒரு பெரிய மேஜிக் உங்களுக்குள் நடக்கும். அது என்னவென்றால் எல்லா சந்தர்ப்பங்களுக்குமான வாக்கியங்களையும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உருவாக்கிக் கொண்டுவிடுவீர்கள். எல்லா சந்தர்ப்பங்களுக்குமான வாக்கியங்களும் உங்களிடம் இருக்கும்.

இதை நான் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஓர் எழுத்தாளருடைய வாக்கியமோ, அல்லது அவர் எழுதிய ஒரு சந்தர்ப்பமோ உங்களுக்கு ஞாபகம் வந்தது என்றால் நீங்கள் ஒரு மிகச் சிறந்த வாசகர் என்று அர்த்தம். ஏனெனில் எல்லாமே சொல்லப்பட்டுவிட்டன; எல்லாமே பேசப்பட்டுவிட்டன; எல்லாமே எழுதப்பட்டுவிட்டன; எழுதப்படாதது ஒன்றுமே கிடையாது.
“கைகளைக் கழுவுங்கள், கைகளைக் கழுவுங்கள்” என்று இந்த பேண்டமிக் சமயத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கை கழுவும் ஒவ்வொரு சமயத்திலும் மாக்பெத்தான் நினைவுக்கு வருகிறது.

தீராத குற்ற உணர்வின் காரணமாகக் கைகளைக் கழுவிக்கொண்டே இருந்த அந்த விஷயம் இன்று உலகளாவிய மிகப் பெரிய ஓர் அனுபவமாக மாறிவிட்டதை நான் உணர்கிறேன். ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு பெரிய குற்ற உணர்வு இருக்கிறது! மேக்பெத் போல நாம் கைகளைக் கழுவாமல் இருந்தோம். இப்போது நாள் முழுக்கக் கைகளைக் கழுவிக்கொண்டே இருக்கிறோம்.

ஓர் இலக்கியத்தில் எப்போதோ சொல்லப்பட்ட ஒன்றை இப்போது மனிதகுலம் முழுவது செய்துகொண்டே இருக்கிறது. இரண்டுக்கும் சம்பந்தம் இல்லையென்று நீங்கள் சொல்லலாம். என்னைப் பொருத்த வரைக்கும் சம்பந்தம் இருக்கிறது. நான் அப்படித்தான் பொருத்திப் பார்க்கிறேன். அதுதான் ஓர் எழுத்தாளனாகவும் வாசகனாகவும் எனக்கிருக்கும் பெரிய வரம்!

இந்த உலகத்தில் இருக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் சொல்லப்பட்ட வாக்கியங்கள் – அவை நம்முடைய புனித நூல்களில் சொல்லப்பட்டனவாக இருக்கலாம் – நம்முடைய பண்டை இலக்கியங்களில் சொல்லப்பட்டனவாக இருக்கலாம் – எல்லாமே இந்த நிமிஷம் – இந்தத் தேதியில் – நாம் வாழுகிற வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்ககூடியனவாக இருக்கின்றன. அது ஒரு திறப்பைக் கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றன.

நான் தனியாக இல்லை. மகத்தான ஆசிரியர்கள் என்னோடு இருக்கிறார்கள். அவர்கள் ஏற்றிவைத்த விளக்கு என் வீட்டில் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கிறது. அந்த மெழுகுவர்த்தி ஒரு நாளும் அணைவதே இல்லை. ஒரு விளக்கு அணைந்தால் இன்னொரு விளக்கு எரிய ஆரம்பித்துவிடுகிறது.

நான் என்னுடைய 13-வது வயதில் இருந்து வாசித்துக்கொண்டேதான் இருக்கிறேன். எனக்கு எவ்வளவு வெளிச்சம் இருந்தாலும் போதவில்லை. அவ்வளவு இருள் என் வாழ்க்கையில் – என் மனதில் – இருக்கிறது.
வாழ்க்கை என்பது சங்கடங்கள் நிரம்பிய ஒன்று. வாழ்வதைப் போல சங்கடமான விஷயம் வேறு எதுவுமே இல்லை. எந்த வயதில் யோசித்தாலும் நாம் ரொம்ப வருஷம் இந்த உலகத்தில் இருந்துவிட்டோமோ என்று சோர்வாக இருக்கிறது. ஆனால்கூட இன்னும் கொஞ்சம் அந்த வெளிச்சத்தை நாம் நம் கைகளில் ஏந்திக் கொள்வதற்காகவே நாம் வாழ்கிறோம்.

யோசித்துப் பாருங்கள் காதலின் ஓர் அற்புதமான தருணத்தில் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும்போது எனக்கு ஒரு கவிதை வரி ஞாபகம் வந்ததென்றால் நான் ஒரு வாசகன் என்பது உறுதியாகிவிட்டது.

எனக்கு அந்தக் கவிதை வரி இல்லையென்றால் அந்த முகத்தைப் பற்றிச் சொல்வதற்கு, அந்தக் கண்களைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமே கிடையாது. எதுவும் இல்லாமலே ஆகிவிடும். நான் வெறும் நிராயுதபாணியாக நின்றுவிடுவேன். இப்போது என்னை முழுமையடையச் செய்வதற்குக் காரணம் இந்த வாசிப்பு, இந்த இலக்கியம், இந்த சொற்கள் எல்லாமே!

வாசிப்பில்லாத மனிதர்கள் ஒரு மிகப் பெரிய அனுபவத்தை இழக்கிறார்கள். உங்களிடம் ஒரு வைரக் கல்லைக் கொடுத்தால்கூட, எது வைரம் என்ற கான்ஸெப்ட் உங்கள் மனதில் இருந்தால்தான் நீங்கள் அந்த வரைத்தை வைரமாக உணரமுடியும். அது கண்ணாடிக் கல்லா, வைரமா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நிறைய பேர் வைரத்தைக் கண்ணாடிக் கல் என்று தூக்கி எறிந்துவிடுகிறார்கள். கண்ணாடிக் கற்களை வைரங்களாக வைத்திருக்கும் மனிதர்களும் இருகிறார்கள். ஏன்? எது கண்ணாடி, எது வைரம் என்பதை எது உங்களுக்குச் சொல்லித்தரும்?

நீங்கள் வைரத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லையே! இப்படி வாழ்க்கையில் நமக்குக் கிடைத்த எத்தனையோ வைரங்களை நாம் தொலைத்திருக்கிறோம். காரணம் அவற்றைக் காண்பதற்கான கண்கள் நம்மிடம் இருந்ததில்லை; பார்வை நம்மிடம் இருந்ததில்லை. எத்தனை உறவுகளை நாம் போகிறபோக்கில் தொலைத்திருக்கிறோம்!

கொஞ்ச காலம் கழித்துத்தான் உங்களுக்குத் தெரியும் எவ்வளவு மகத்தான உறவுகளாக அவை நமக்கு இருந்திருக்கும் என்று! நம்முடைய அகங்காரத்தின் காரணமாக – நம்முடைய ஈகோவின் காரணமாக – சின்னச் சின்னப் பிரச்னைகளுக்காக, அல்லது சின்னச் சின்ன வருத்தங்களுக்காக போகிற போக்கில் தூக்கி எறிந்துவிட்டுப் போயிருப்போம்.

அப்புறம் ஒரு நாள் யோசிக்கும்போதுதான் நாம் யாரை இழந்தோம் என்பது நமக்கு நினைவுக்கு வரும். அந்த வைரக் கற்கள் எங்கே போயின என்பதே நமக்குத் தெரியாது. நம்மைவிட்டு ரொம்ப தூரத்தில் இருக்கும். அப்படியானால் வைரத்தை அடையாளம் காண்பதற்கு இலக்கியம் தேவைப்படுகிறது.

இன்னும் சொல்லப் போனால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் மிகச் சிறந்த நறுமணங்கள், சொற்கள் எல்லாமே நம்மை முழுமையடையச் செய்யக் கூடிய ஒரு பார்வையை நமக்குத் தருகின்றன. அதுதான் எனக்கு வாசிப்பின் மூலமாகக் கிடைத்த ஒரு விஷயமாக நான் நினைக்கிறேன்.

நாம் நேருக்கு நேராக இருந்தல்கூடப் பரவாயில்லை. நான் தொலைவில் இருக்கும் ஒரு நபராகப் பேசிக்கொண்டே இருப்பதும், அதை நீங்கள் கேட்டுக்கொண்டே இருப்பதும் உங்களுக்குச் சோர்வு அளிக்கக்கூடிய விஷயமாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

நீங்கள் ஏதாவது ஒன்றிரண்டு கேள்விகளைக் கேட்டால் – அவை நான் பேசிய விஷயங்களை ஒட்டிக்கூட இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை – அது உங்கள் மனதில் இருக்கக்கூடிய கேள்வியாகக்கூட இருக்கலாம் – அவற்றை நீங்கள் கேட்கிற பட்சத்தில் நாம் அதிலிருந்துகூட இந்த உரையாடலை இன்னும் சற்று நேரம் நீடிக்கலாம் என்று நினைக்கிறேன். எதைப் பற்றி வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம்
நன்றி. வணக்கம்.

  • மனுஷ்ய புத்திரன், கவிஞர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here