அண்மையில் நான் வாசித்து வியந்த நூல்களுள் ஒன்று செ. தி. ஞானகுரு எழுதிய ‘அறியப்படாத இந்து மதம்’ என்ற நூல். இதை ஒரு நூல் என்று சொல்வதை விடவும் மிகச் சிறந்த ஆவணங்களின் தொகுப்பு என்றும், வழிகாட்டி நூல் என்றும், கையேடு என்றும், ஆதாரங்களின் அடிப்படை என்றும், ஆய்வுகளின் திசைக்காட்டி என்றும் கூறலாம்.
மதம் என்பது அதைப் பின்பற்றுகிறவர்களுக்கு மன அமைதியையும் சுயமரியாதையையும் மகிழ்ச்சியையும் அளித்திட வேண்டும். ஆனால் இந்தியாவின் பெருமதம் அப்படியான தன்மையில் இல்லை. அது குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு அதிகாரத்தையும், சுகபோக வாழ்க்கையையும் தருவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம். சாதி, தீட்டு ஆகியவற்றின் பெயரால் மனிதரை ஒடுக்கி, இழிவுபடுத்தி, வாழ்க்கையையே துன்பத்தில் தள்ளுகின்ற சதித்திட்டம். இதை பாபாசாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார் உள்ளிட்ட பல தலைவர்கள் துணிந்து பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள்.
மதத்தின் பெயரால் இந்த நாட்டில் நடக்கின்ற கொடூரங்களுக்கு காரணமாக அவற்றின் புனித நூல்களே இருக்கின்றன. ஒரு நூல், இரு நூல்கள் என்றால் பரவாயில்லை. பல்வேறு நூல்களில் இக்கருத்துகள் எழுதப்பட்டிருப்பதால் மிகத் தந்திரமாக வெவ்வேறு காரணங்களுக்குள்ளும் நூல்களுக்குள்ளும் ஓடிப்போய் மதவெறியர்கள் ஒளிந்து கொள்கிறார்கள். முதலில் இவர்களிடம் பேசுவதற்கு நமக்கு உறுதியான ஆதாரங்களும் செய்திகளும் தேவைப்படுகின்றன. அப்படியான ஆதாரங்களையும் செய்திகளையும் ஞான குருவின் இந்த நூல் தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நூல் முதல் பாகம் தான். அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தை இந்த நூல் பேரளவில் தூண்டுகிறது. அறிவுத்துறையில் பங்காற்றுகிற, சமூக மாற்றத்தில் ஈடுபடுகிற, பகுத்தறிவு மிக்கவர்களிடத்தில் இந்த நூல் கட்டாயம் இருக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கில் இந்த நூல் பரப்பப்பட வேண்டும்.
இந்த நூலை அழகுற பதிப்பித்திருக்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தை பாராட்டுகிறேன். நூல் ஆசிரியர் செ.தி.ஞானகுரு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மிக விரைவில் இரண்டாம் பாகத்தையும் அவர் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன்.