தாமதமாக கிடைக்கும் நீதி அநீதி!

அநீதி தரும் அமைப்பின் மீது சின்ன கல்லை குறிப்பார்த்து எறிந்திருக்கிறார்கள்”

டியூசன் படிக்க வந்த சின்ன பையன்கள் மாடியில் தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அடித்த பந்து கீழே நடந்து சென்ற பக்கத்து வீட்டு வயதான அம்மா தலையில் விழுகிறது.  அந்த அம்மா மேலே வந்து அந்த பையனை தென்னை மட்டையில் லேசாக தட்ட… அவனுக்கு ஆடிக்கொண்டிருந்த பல் கீழே விழுகிறது.

அந்த அம்மா, ஆட்டோ ஓட்டும் மகன், மருமகளுடன் வாழ்ந்து வருகிறார். டியூசன் ஆசிரியரின் அப்பாவிற்கும் அந்த அம்மாவின் குடும்பத்திற்கும் அக்கம் பக்கத்து வீடு என்பதால் சின்ன சின்ன சண்டைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. அந்த கடுப்பில் பையனின் அப்பாவிடம் அவர் தூண்டிவிட, பையனின் அப்பா போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கிறார். அந்த அம்மாவை கைது செய்கிறார்கள்.  அவரின் பையன் கொஞ்சம் சிரமப்பட்டு மாஜிஸ்திரேட் முன்னிலையிலேயே ஜாமீனில் வீட்டுக்கு கூட்டிவந்துவிடுகிறார். அப்போதைக்கு அந்த வழக்கு அமுக்கி வைக்கப்பட்ட பூதம் போல அடங்கிவிடுகிறது.

சில வருடங்களுக்கு பிறகு அந்த வழக்கு பூதம் வெளியே வருகிறது.  அந்த பையன் இளைஞனாகி பெங்களூரில் வேலை செய்து வருகிறான். அவனின் அப்பா எட்டு வருடங்களுக்கு முன்பே இறந்துவிடுகிறார்.  அந்த பையனுக்கு வேலையில் ஒருநாள் விடுப்பு கிடைப்பதே சிக்கலாக இருக்கிறது.  அந்த அம்மாவின் பையனோ வழக்கை எதிர்கொள்ளும் அளவிற்கு வசதியும் இல்லை.  தெம்பும் இல்லை. வழக்கு நடத்த வேண்டாம் என சொல்லும் தன் துணைவியாரை சமாதானப்படுத்தவும் முடியவில்லை. மகனின் சிக்கலான நிலையை புரிந்துகொண்டு வந்து தனியாக வாழ்கிறார். பணியாரம் விற்று வாழ்கிறார்.  மகன் நொந்து போய் கண் காணாத இடத்திற்கு போய்விடுகிறார்.

வழக்கு நடக்கிறது.  சாட்சி வரவில்லை. வாய்தா.  நீதிபதி வரவில்லை. வாய்தா. ஆவணம் கிடைக்கவில்லை. வாய்தா. வாய்தாவிற்கு மேல் வாய்தாவாகி இழுத்துக்கொண்டே செல்கிறது. இறுதியில் அந்த அம்மா தண்டனை பெற்று சிறைக்கு சென்றாரா இல்லையா என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நாட்டில் இப்படி 47 மில்லியன் வழக்குகள் தேங்கியிருக்கின்றன. அதில் ஒரு கதையை சொன்னதாக படத்தில் தெரிவிக்கிறார்கள்.   உண்மைதான். மிகையில்லை.  படத்தில் சர்க்கரையும், ரத்த கொதிப்பும் கொண்ட அந்த வயதான அம்மா போல பல லட்சம் பேர் வாய்தா வாய்தா என தொடர்நது அலைக்கழிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.  அந்த அம்மாவின் நிலை மோசம் என்றால்… சிறையில் மாட்டிக்கொண்டு, ஜாமீன் எடுக்க முடியாமல் அவர்கள் செய்த தவறுக்கு கிடைக்கும் தண்டனையை விட அதிக ஆண்டுகள் சிறையிலேயே பல வருடங்களை தொலைத்துக்கொண்டு இருப்பவர்கள் இந்த நாட்டில் அதிகம்.

வழக்குகள் தேங்குவதை, சிறையில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தவிப்பதை எல்லாம்  உயர்நீதிமன்ற நீதிபதியில் இருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் வரை வெளிப்படையாக பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். சமீபத்தில் ”ஜாமீன் பெற முடியாமல் ஒரு நாள் சிறையில் இருந்தாலும் அதிகப்பட்ச தண்டனைதான்” என்கிறார் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி.

ரமணா ஸ்டைலில் சொன்னால்… உச்ச நீதிமன்றத்தின் கீழ் 25 உயர்நீதிமன்றங்கள். 672 மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை நிர்வகிக்கும் 16 ஆயிரம் நீதித்துறை நடுவர்கள் இருக்கிறார்கள்.  இந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 136 கோடி மக்களுக்கு போதுமானதில்லை என்பது மலை போல் தேங்கியுள்ள வழக்குகளே சொல்கின்றன.


இதையும் படியுங்கள்: ஜெய ஜெய ஜெய ஜெய ஹே (2022) மலையாளம்


நீதியை தாமதப்படுத்தக் கூடாது என்ற அக்கறையே ஒன்றிய அரசுக்கு இல்லை.  நீதிபதிகளை நியமிப்பதில் ஒன்றிய அரசு நிறைய அலட்சியம் காட்டுகிறது.  நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்து கொள்ளும் கொலீஜிய முறை ஒன்றிய அரசுக்கு எரிச்சலாக இருக்கிறது.  காவி சிந்தனை கொண்டவர்களை அதி வேகமாக நீதித்துறையில் உள்ளே தள்ள இந்த முறையை ஒரு தடையாக உணர்கிறார்கள். இரண்டுமே தவறு. நீதிபதிகளை தேர்ந்தெடுப்பில்…மக்கள் பெருந்திரளாக அங்கம் வகிக்கும் ஒரு ஜனநாயகபூர்வமான நடைமுறை வேண்டும் என்பதே சரி.

இவ்வளவு பரந்து விரிந்த இந்தியாவில் இன்றைக்கும் உச்ச நீதி மன்றம் தில்லியில் மட்டுமே!  இந்தியாவின் நான்கு பகுதிகளிலும் கிளைகள் திறப்பது பற்றி சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்கள். பல வருட போராட்டங்களுக்கு பிறகுதான் மதுரையில் உயர்நீதி மன்ற கிளையே திறந்தார்கள்.

உலகம் இரண்டாக இயங்குகிறது. நீதிமன்றங்களும் கூட விதிவிலக்கில்லை.  அரசியல், அதிகாரம், பண பலம் படைத்தவர்கள்தான் நீதிமன்றத்தின் நேரத்தை பெரும்பாலும் ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். இதையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் வருத்தப்பட்டுச் சொன்னார்.

எங்கும் நீதி கிடைக்காமல் கடைசிப் புகலிடமாக நீதிமன்றத்தைத்தான் மக்கள் நினைக்கிறார்கள் என நீதிபதிகளே உருக்கமாகச் சொல்கிறார்கள்.  ஆனால் நீதிமன்றங்கள் தங்களது அலட்சியமான, தாமதமான நடவடிக்கைகளால் அந்த மதிப்பை பல காலமாகவே இழந்துகொண்டே வருகின்றன என்பது தான் யதார்த்தமாக இருக்கிறது.  அதைத் தான் இந்த படமும் அழுத்தமாக முன்வைக்கிறது.

நீதி பரிபாலனையின் நிலைமை அவல நிலைமையில் இருக்க… படத்தின் வரும் எளிய மனிதர்கள்  மனிதர்களுக்கு பெரும் நம்பிக்கை அளிக்கிறார்கள். இரவு முழுவதும் கைது, ஜாமீன் என அலைந்து விட்டு, காசு வாங்காமல் நகரும் சக ஆட்டோகாரர்,  நண்பனின் அம்மாவை தன் அம்மாபோல் பதறும் நண்பன்,   நியாயத்தை உணர்ந்தோ, நடைமுறையில் தன்னால் விடுப்பு எடுக்க முடியாத நிலையிலோ, இந்த வழக்கு தோற்றுபோகவேண்டும் என வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த இளைஞன் அத்தனை மெனக்கெடுவான்.  எல்லா சாட்சிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசி, கெஞ்சி பிறழ் சாட்சிகளாக மாற்றுவான்.

சில ஆண்டுகளின் ஜவ்வான இழுத்தடிப்புக்கு பிறகு, வழக்கு பலவீனமடைந்து…அந்த அம்மா விடுதலை ஆகப் போகிற நேரத்தில்… தன் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு “கோபப்பட்டு அடிச்சது உண்மை.  அதற்காக எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன். அந்த பையனிடம் நான் மன்னிப்பு கேட்கவேண்டும். அனுமதி கொடுங்கள்”” என்பார். அதே போல…”நீ பத்தாவதில் தேர்ச்சியடைந்த  பொழுது உன்னைப் பார்க்க வந்தேன்.  உன் வீட்டில் விசேசம் நடந்த பொழுது உன்னைப் பார்க்க வந்தேன். அப்பொழுது நீ நீலக்கலர் சட்டை அணிந்திருந்தாய்” என சொல்லும் பொழுது.. அந்த பையன் நெகிழ்ந்துவிடுவான். நாமும்தான்.

படம் நியாயம் கேட்டு குரல் உயர்த்தவில்லை.  தாமதமாய் வழங்கும் நீதி அநீதி.  அநீதி தரும் அமைப்பின் மீது ஒரு சின்ன கல்லை குறிப்பார்த்து வீசியிருக்கிறார்கள்.

வயதான பாத்திரத்தில் நடித்த தேவி வர்மாவும், இளைஞனாக வரும் லுக்மன்னும் இன்னும் பல நாட்கள் நம் மனதில் நிற்பார்கள். படத்தில் வரும் சின்னச் சின்ன கதைப்பாத்திரங்கள் கூட நினைவில் நிற்கும்படி பங்காற்றியிருக்கிறார்கள்.  இயக்குநர் தருண் மூர்த்திக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம். ஒளிப்பதிவாளர் ஷரத் வேலாயுதனின் கேமரா கொச்சின் மற்றும் அதன் அருகில் இருக்கும் இடங்களையும், மனிதர்களின் உணர்வுகளையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு. இசையமைப்பாளர் பால் பிரான்சிஸின் பின்னணி இசையும், பாடலும் அருமை.

திரையரங்குகளிலும், திரைப்பட விழாக்களிலும் வெளியிடப்பட்டு… இப்பொழுது Sony Livல் வெளிவந்திருக்கிறது. அவசியம் பார்க்கவேண்டிய படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here