க்ரித்தி சனோன் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘மிமி’ திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதே வேளையில், கடந்த மாதம், அன்னா பென் நடிப்பில் வெளியான ‘சாராஸ்’ திரைப்படமும் கொண்டாடப்பட்டது. இரு திரைப்படங்களிலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டுமே எதிரெதிர் அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டது.

மிமியும் சாராவும் சினிமா கனவுகளோடு வாழ்பவர்கள். வடக்கின் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் மிமி. சாரா தெற்கின் கேரளாவைச் சேர்ந்தவர். சாராவுக்குக் குழந்தை வளர்ப்பின் மீது விருப்பம் இல்லை. எனினும், திருமணத்திற்குப் பின், சாரா கருத்தரிக்கிறாள். இந்தியப் பெண் உடல்களை வாடகைத் தாய்களாக ’ஷாப்பிங்’ செய்ய வந்த அமெரிக்கத் தம்பதியின் குழந்தையைத் தனது கருப்பையில் வளர்க்க சம்மதிக்கிறாள் மிமி. ஆனால், அமெரிக்கத் தம்பதியினர் கர்ப்பிணி மிமியைக் கைவிட்டுச் செல்கின்றனர். சாராவுக்கும், மிமிக்கும் இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. குழந்தையைப் பெற்றுக் கொள்வதும், வளர்ப்பதும் ஒரு வாய்ப்பு; கருவைக் கலைத்துவிட்டு, தனது கனவுகளைத் தேடிச் செல்வது மற்றொரு வாய்ப்பு. இதில் சாரா தன் கனவுகளைத் தேர்ந்தெடுக்கிறாள். மிமி குழந்தை பெற்றுக் கொள்வதைத் தேர்ந்தெடுக்கிறாள். ஆக, இரண்டு ஆண் இயக்குநர்கள் வெவ்வேறு மொழிகளில் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வது அல்லது கருக்கலைப்பு முதலான விவகாரங்களின் வழியாகப் பெண்களின் கதைகளைக் கூறியிருக்கின்றனர்.

சாராவின் கதையில் கருக்கலைப்பு குறித்து கடுமையான எதிர்ப்புகள் குடும்பத்திடம் இருந்து எழுந்த போதும், சாரா அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி, தனது உடல் மீதான தன் உரிமையை நிலைநாட்டுகிறாள். மிமிக்கும் குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை இருக்கிறது. எனினும், மிமி படத்தில் அதிகளவில் ஆண் மையவாதப் பார்வையைப் பார்க்க முடிந்தது. சாராஸ் படத்திலும் அந்தப் பிரச்னை இருக்கிறது என்ற போதும், அது பெண்ணுரிமை என்ற தளத்தில் தன்னை முன்னிறுத்திக் கொள்வதால் தப்பித்துக் கொள்கிறது.

மிமி தொடங்கும் போதே, சுற்றிலும் ஆண்கள் குழுமியிருக்க நடுவில் க்ரித்தி சனோன் ஆடும் ஐட்டம் டான்ஸ் பாடல் காட்டப்படுகிறது. அமெரிக்கத் தம்பதி மிமியைத் தவிக்க விட்டுச் செல்லும் போது, மிமி தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை ஓர் உயிராக உணர்கிறாள். இதில் எந்தத் தவறும் இல்லையென்ற போதும், சாரா போன்ற பெண்களுக்கு இந்தச் சமூகம் விதிக்கும் குற்றவுணர்வை மிமி மீட்டுருவாக்கம் செய்கிறது. கருக்கலைப்பு என்பதைக் கொலைச் செயலாக அங்கீகரிப்பதில், மிமி இயக்குநர் லக்‌ஷ்மண் உடேகர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

சமூக நிர்பந்தங்களைத் தாண்டி, குழந்தை பெற்றுக் கொள்ளும் மிமி தனது கனவுகளைத் துறக்கிறாள். இறுதி வரை, மிமி கதாபாத்திரம் எந்த ஆணாலும் தீண்டப்படாத, தன் கற்புக்கு எந்தக் களங்கமும் ஏற்படாத சராசரி இந்திய ஆண் மையவாதப் பார்வையால் எழுதப்பட்டவளாகவே இருக்கிறாள். பிறக்கும் குழந்தையும் எதேச்சையாக ஆண் குழந்தையாகவே பிறக்கிறது. பெண் குழந்தையைப் பெறுவதும், வளர்ப்பதும் சராசரி இந்திய ஆண் மையவாதப் பார்வையில் இடம்பெறுவதில்லை. ‘தேவகியும் நீ தான், யசோதையும் நீ தான்’ என்று மிமியின் அம்மா பேசும் வசனம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. குழந்தையைப் பெற்றவளும் மிமி, தன் குழந்தை இல்லை என்ற போதும் அதனை வளர்ப்பவளும் மிமி என்ற ரீதியில் மிமி மீது திணிக்கப்பட்ட தாய்மை புனிதப்படுத்தப்பட்டிருக்கிறது.

’சாராஸ்’ வலிந்து திணிக்கப்படும் தாய்மையை எதிர்க்கிறது. சாரா தனது ஒட்டுமொத்த உலகத்தையும் எதிர்க்கிறாள். குழந்தைகள் மீதான அவளின் ஒவ்வாமை குறித்த காட்சிகளில் விமர்சனங்கள் இருந்தாலும், இந்தப் படத்தின் நோக்கம், பெண்களின் உடல் பெண்களுக்கே சொந்தம் என்பதைப் பேசுகிறது. மிமி உருவாக்கும் தாய்மை குறித்த குற்றவுணர்வுகளை சாராஸ் உருவாக்காமல் இருப்பதும், அதனைக் கடந்து வெற்றிப் பாதையைக் காட்டுவதும் அதனைப் பாராட்டச் செய்கிறது.

’மிமி’, ‘சாராஸ்’ இரண்டுமே பெண்களை மையப்படுத்திய கதை என்பதைத் தாண்டி, அதில் இஸ்லாமியர்கள் சித்தரிப்பு குறித்து ஒப்பிட வேண்டியதாக இருக்கிறது. மிமியின் நெருங்கிய தோழி ஷாமா ஓர் முஸ்லிம். அவரது அப்பா குடும்பம் குறித்த சிந்தனையோ, தனது உறவினர் யார் என்றோ தெரியாத அளவுக்கு எப்போதும் மசூதியிலேயே இருப்பவர். ஷாமா முத்தலாக் சொல்லப்பட்டு, கணவனால் கைவிடப்பட்டவர். மிமியின் குழந்தையின் தகப்பன் அமெரிக்கர் என்று தெரியும் போது அமைதியாகக் கடந்து செல்லும் மிமியின் குடும்பம், முஸ்லிம் என்று தெரிந்துகொள்ளும் போது பெரும் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தும்.

’சாராஸ்’ படத்தில் அனைவரும் சாராவுக்கு எதிராக நிற்கும் போது, சாராவின் மகப்பேறு மருத்துவராக வரும் முஸ்லிம் கதாபாத்திரம் மட்டும் அவளுக்கு ஆதரவாக நிற்பார். இப்படியான சித்தரிப்புகளில் இருக்கிறது, வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையிலான வேறுபாடு.

முகநூல் பக்கத்தில் இருந்து,
நன்றி,
llyas Muhammed Raffiudeen
ர. முகமது இல்யாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here