ஏலம்..
ஒரு தரம்
ரெண்டு தரம்
மூணு தரம்!
~
விற்பது உங்களுக்கொன்றும் புதிதில்லை
நீங்கள் விழிகளை
விற்றிருந்தால்கூட பரவாயில்லை
எங்கள் பார்வையை விற்றீர்கள்

எங்கள் பாதங்களை
விற்றால்கூட பரவாயில்லை
நீங்களோ பாதையை விற்றீர்கள்

சிறகுகளை விற்றால்
பொறுத்துக் கொள்வோம்
எங்கள் வானத்தையல்லவா
விற்கிறீர்கள்

விற்பது உங்களுக்கொன்றும் புதிதில்லை
இந்தியாவின் மானத்தை சுயமரியாதையை கண்ணியத்தை
ஏலம் விட்டவர்கள்தாம் நீங்கள்

எல்லாவற்றையும் பணமாக்கிவிடுவதென
முடிவெடுத்த பிறகு
இன்னும் கங்கையை
யமுனையை பிரம்மபுத்ராவை
ஏன் விட்டு வைத்திருக்கிறீர்களோ?

சரஸ்வதியையே வாங்கியவர்கள்
இந்தியப் பெருங்கடலை
வாங்க மாட்டார்களா!

இருப்புப்பாதைகளை விற்று
விமான வழித்தடங்களை விற்று
விளையாட்டு அரங்கங்களை விற்று
இந்தியாவின் கஜானா நிறையலாம்

அதிலிருந்து கோதுமை வாங்க மண்ணெண்ணெய் டீசல் வாங்க
எங்களுக்கு
நூறு ரூபாய் கிடைக்குமா?

துறைமுகங்களை வாங்குபவர்களுக்கு
தொலைபேசி கோபுரங்கள்
விற்ற காசை கொடுப்பீர்கள்

எரிவாயுக் குழாய்களை வாங்குபவர்களுக்கு
நிலக்கரி சுரங்கங்கள்
விற்ற காசை கொடுப்பீர்கள்

ரேஷன் கியூவில் நின்று
முப்பது ரூபாய் கொடுத்து
நாங்கள் சர்க்கரை வாங்கும்போது
கவுதம் அதானி காலி சூட்கேசை கொண்டுவந்து 6 ஜிகா வாட்ஸ்
மின்சாரம் வாங்குவார்

சந்தையில் 50 ரூபாய் கொடுத்து
நாங்கள் ஒரு சீப்பு
வாழைப்பழம் வாங்கும்போது
செல்லுபடியாகாத செக் கொடுத்து முகேஷ் அம்பானி
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனை வாங்குவார்

ஷிவ் நாடாருக்கு ரயில்வே குடியிருப்புகளை கொடுக்கும்போது
எங்கள் ஸ்டேஷன் மாஸ்டர்
பெட்டி படுக்கை குழந்தை குட்டியோடு
நடு ரோட்டில் நிற்பார்
‘ரோடு என்னுது ஒதுங்கு!’
விரட்டுவார் லஷ்மி மிட்டல்

எல்லாவற்றையும் பணமாக்குவதென முடிவெடுத்துவிட்டீர்கள்
நிதியமைச்சர் நாற்காலியை
சைரஸ் பூனவல்லாவிடம்
நல்ல விலைக்கு விற்கலாமே!

நம் கோடிசுவரர்கள் சீட்டாட கிளப் இல்லாமல் சிரமப் படுகிறார்களாம்
புதிதாக கட்டுகிற பாராளுமன்றத்தை கைமாற்றி விடலாமா?

சீமான் வீட்டு பிள்ளைகள் சரக்கடிக்க அவசரப்பட்டு சுப்ரீம் கோர்ட்டை
ஏலம் விட்டுவிடாதீர்கள்
நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாவீர்கள் !

விஜயமல்லையா நீரவ்மோடிகளால் திவாலான வங்கிகளைக்
காப்பாற்ற யோசனை உண்டு
இந்திய ராணுவத்தில்
தண்டமாய்க் கிடக்கும்
ரபேல் போர் விமானங்களை
சுனில் மிட்டலிடம் விற்கலாம்!

எல்லாவற்றையும் விற்றுவிட்டோம்
இனி என்ன விற்கலாம்? யோசிக்கிறீர்களா?

பாரத மாதாவின்
கிட்னியை பணமாக்குங்கள்

அப்போது இந்தியாவின்
பிரதமர் நாற்காலியில்
மோடி இருக்கமாட்டார்
ராமனுடைய செருப்புபோல
பணம் வீற்றிருக்கும்

கார்ப்ரேட் கழுதைகள்
அதை தங்கள் பசிக்கு தின்னட்டும்

வழக்கம்போல நாங்கள்
பழைய கஞ்சை குடிக்கிறோம்!

எழுத்தாளர்,

கரிகாலன்

1 COMMENT

  1. அருமை. இவர்கள் நமக்கும் ஒருநாள் விலை வைப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here