நூல் அறிமுகம்:

கட்சி நிறுவன கோட்பாடுகள்.


ஏகாதிபத்தியமும், பாட்டாளி வர்க்கமும் கொண்ட லெனினிச சகாப்தத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். முதலாளித்துவத்தின் வளர்ச்சிப்போக்கில் ஏற்பட்ட ஏகபோக உற்பத்தி, நிதி மூலதனம் உருவாதல், அதன் பலனை அனுபவிக்கும் நிதி ஆதிக்கக் கும்பல்கள் உருவாவதும், மூலதன ஏற்றுமதி, நாடுகளை கைப்பற்றுவது, செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவது ஆகியவற்றின் மூலம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவம், மேலும் மேலும் லாப வெறி கொண்டு உலகை ஒரு சில தனிநபர்களின் பிடிக்குள் கொண்டு வருவதற்கு மூர்க்கத்தனமாக இறங்கியுள்ளது. இவற்றை ஒரு முறியடிக்கும் வல்லமை படைத்த பாட்டாளி வர்க்கமோ ஒன்றுபடாமல் பிரிந்து கிடக்கிறது.

மார்க்சியத்தின் வளர்ச்சியும் தொழிலாளி வர்க்கத்தில் அதன் சித்தாந்தங்கள் பரவி வலுவடைந்து வருவதும், அதற்கு விரோதமான தத்துவங்களின் தரப்பிலிருந்து மார்க்சியத்தின் மீதான தாக்குதல்களை தவிர்க்க இயலாதவாறு வலுப்படுத்தும் என்று தோழர் லெனின் எழுதினார்.

மார்க்சியம் இருதரப்புகளிலிருந்து தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது: மார்க்சியத்தை மறுத்து, அழித்தொழிக்க வீணாக முயலும் அதிகாரபூர்வமான முதலாளித்துவ விஞ்ஞானத்தின் நேரடித் தாக்குதல்களோடு கூட திருத்தல்வாதிகளால் பயன்படுத்தப்படும் மறைவான போராட்ட முறைகளும் உள்ளன.

மார்க்சிய போதனைகளை திருத்துதல், அதை திரும்ப ஆராய்தல் என்ற போர்வையின் கீழ் மார்க்சியத்தை உள்ளேயிருந்தே குலைக்க திருத்தல்வாதம் முயலுகிறது என்பதில்தான் அதன் அபாயம் அடங்கியுள்ளது. மார்க்சியத்தின் தனிப்பட்ட சில கருத்துகளுக்கு எதிராக திருத்தல் வாதம் தனது தாக்குதல்களை கொடுக்கவில்லை. மாறாக தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் ஆகிய மார்க்சியத்தின் எல்லா அம்சங்களையும் அது திருத்த முயல்கிறது என்று லெனின் கோடிட்டு காண்பித்தார்.

தத்துவம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றில் துவங்கிய திருத்தல் வாத போக்குகள் இன்று அமைப்பு முறைகளில், அதாவது பாட்டாளி வர்க்க கட்சியை எவ்வாறு கட்டுவது என்ற முறையில் திருத்தல் வாதம் புகுந்துள்ளது. மார்க்சியத்தை வீழ்த்துவதற்கு எதிரிகளால் இனி முடியாது. ஆனால் கம்யூனிச போர்வையில் செங்கொடி ஏந்தியபடியே செங்கொடிக்கு எதிராக பேசுகின்ற தாராளவாத சிந்தனையாளர்கள், தமது குட்டி முதலாளித்துவ வர்க்க நலனை ஒளித்துக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது தாக்குதல்களை, வசவுகளை, அவ நம்பிக்கைகளை தொடுத்துக் கொண்டிருக்கும் காலம் இது.

அப்படிப்பட்ட போக்குகளை முறியடிக்கின்ற வலுவான ஆயுதமாக நமக்கு கிடைத்துள்ளது கட்சி நிறுவன கோட்பாடுகள் எனும் இந்த நூல்.
தோழர் லெனினின் வழிகாட்டுதலின் கீழ் எழுதப்பட்டு தோழர் லெனின் தலைமை தாங்கிய ஒரு தடவை அகிலத்தின் மூன்றாவது பேராயத்தில் 1921இல் நிறைவேற்றப்பட்ட இந்த ஆவணம் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சியை நிறுவுவதற்கான கோட்பாடுகளை வரையறுத்துக் தருகிறது.

ஏகாதிபத்தியத்தை வீழ்த்த வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்படும் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய வழிகாட்டும் நூல் இந்த புத்தகம்.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் – 8925648977

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here