காலை , ஒரு பாடலின் பாதங்களில் விழுந்து கிடந்தேன். அது பாடல் அன்று. நம் பாட்டனும் பாட்டியும் பூட்டனும் பூட்டியும் வாழ்ந்த வாழ்க்கை. நிகழ் காலம் வசதிமிகுந்ததாக இருக்கிறது. ஆனாலும் ஆறுதலும் சமாதானமும் இல்லை.

சகமனிதர்கள் மீது நம்பிக்கையும் அன்பும் வற்றிய காலத்தில் வாழ்கிறோமோ? என்கிற ஏக்கத்திலிருந்து மீள முடியவில்லை. நமது இறந்த காலத்தில் ஒரு தார்ச்சாலை இல்லை. ஆண்டாராய்ட் ஃபோன் இல்லை. மால்கள் இல்லை. மல்ட்டி ஃப்ளெக்ஸ் திரையரங்குகள் இல்லை.

ஆனால், தெரு முழுவதும் அம்மாக்கள் நிரம்பியிருந்த காலமது.
ஒரு வீட்டில் அடுப்பெறிந்தால் மறு வீட்டில் பசியில்லாத காலம். மனிதர்கள் அன்பினால் கரங்கள் வளர்த்த காலம். கனியும் நிழலும் கொண்ட மனிதர்கள் வாழ்ந்த காலம்.

என்னுடைய மருங்கூரும் அப்படிதான். அங்கு நெல்லடித்த தாள்களால் கூரை வேய்த சிறிய பள்ளிக்கூடமிருந்தது. குறைந்த மகிமையுடைய செல்லியம்மனும் மாரியாத்தாளும் அருள்பாலித்தார்கள். சாயம்போன தாவணிகளில் வளைய வந்த அஞ்சலைகளால் வண்ணம் கொண்ட அந்தியிருந்தது.

கடைவீதியோ, ஆட்டோக்களோ, மணல் அள்ளும் லாரிகளோ இல்லாத , எங்கள் ஊரைத் தழுவி மணிமுத்தாறு, வெள்ளாறு என்றிரு நதிகள் ஓடின. நதி நிறைய மீன்கள் நீந்திக் களித்தன. பெட்ர்மாக்ஸ் கொளுத்தி ஊத்தாலெடுத்துபோய் ராத்திரியில்
மீன் பிடித்தோம்.

அந்த ஊரில் அன்னமிடும் வயலிருந்தது. வயல் முழுவதும் கதிரிருந்தது.
கதிர் கொத்திடக் கிளி வந்தது.
கிளிகள் பாடும் பாட்டிருந்தது.
மண்வழியில் மரம் இருந்தது.
மரத்தடியில் பேசிச் சிரித்திட
நண்பர்கள் கூட்டம் இருந்தது.

இப்படி இறந்த காலத்தை எடுத்து வந்து என் உள்ளங்கையில் வைத்த பாடல். ஆங்கிலத்தில் ode என்பார்கள். அவ்வகைப் பாடல். ‘ பண்டங்காண்டொரு நாடுண்டாமே!’ மலையாளப் பாடல்.

முஹத் வேம்பயம் எழுதி செபி நாயரம்பலம் இசையமைத்த பாடல்.
அனு மரியா ரோஸ் எனும் சிறுபெண் பாடிய பாடல். நான் கேட்டதோ சமூக செயல்பாட்டாளர் ரேஷ்மா சத்தீஷ் பாடியதை.

விடியற்காலையிலிருந்து எத்தனை முறை இப்பாடலைக் கேட்டிருப்போனோ, தெரியவில்லை. எங்கோ ஆழத்தில் இருக்கும் என் இளகிய மனசின் தாழைத் திறந்த பாடல்.

என் கையைப் பிடித்து நான் நடந்த மருங்கூர் வயல்களுக்கு அழைத்துச் சென்ற பாடல். சேற்றுக் கவுச்சியோடு செம்பிடுப்பு நிலத்தில் அண்டைவெட்டிய பூறாசாமி, குப்புசாமி, தனபால், ராசலிங்கம் என உழைத்து வாழ்ந்த முது உறவுகளிடம் என்னை அழைத்துச் சென்ற பாடல்.

அந்த ஊரில் , நாலுமணிப் பூவிருந்தது
நல்லோர் சொல்லுக்கு மதிப்பிருந்தது
உன்னை படைச்சோன்
என்னை படைச்சோன்
என்றொரு சண்டையில்லை.

நரகத்தின் சூடில்லாத,
தீவட்டிக் கொள்ளையில்லாத, தின்றதெதுவும் நஞ்சில்லாத
எங்கள் ஊர் எங்கே ?
எங்கள் நதி எங்கே ?
எங்கள் வயல் எங்கே?

பொருளாசையால் மதத்தால் சாதியால் பகை வளர்க்கும் மனிதர் கொன்று
எம் காலம் இறந்து போனதா?
என் ஊர், என் நாடு இறந்து போனதா? எல்லாம் வெறும் கனவுதானா?

பண்டங்காண்டொரு நாடிருந்தார்னே,
ஆ நாட்டில் புழையுண்டார்னே,
புழை நிறைய மீனுண்டார்னே!
ரேஷ்மா பாடுகிறார்.

இறந்தவர்களை ஏசுநாதர் பிழைக்க வைத்தாரா? தெரியாது.
இந்தப் பாட்டு என் இறந்த காலத்தை உயிரெழுப்பியதென்னவோ நிசம்!

பி.கு
பாடலை பின்னூட்டத்தில் கேட்கலாம்!
கரிகாலன்.

https://youtu.be/P4xl8PbS0_s

தமிழில்:

https://youtu.be/o8Vv3lahKVw

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here