சனாதனத்தைப் பாதுகாக்கும் காலச்சுவடின் பார்ப்பனியம்!

மார்க்சிஸ்ட்கள் 'முதலாளித்துவத்தையும்' மாவோயிஸ்ட்கள் 'வளர்ச்சி'யையும் தீட்டாகக் கருதுகிறார்களாம். இதுமாதிரியான 'தூய்மை' என்ற கருத்தாக்கம்தான் இந்தியாவில் சாதி உருவாகக் காரணமாம்.

‘சனாதன தர்மம்: ஒரு விசாரணை இந்து மதம்’ குறித்த 40 பார்வைகள் நூல் விமர்சனம்

சென்னை புத்தகக்காட்சியில் காலச்சுவடு ஸ்டாலில் ‘சனதன தர்மம் ஒரு விசாரணை’ என்னும் ஒரு நூலை வாங்கினேன். சனாதன தர்மத்தை விமர்சிக்கும் நூல் என்று நினைத்துத்தான் வாங்கினேன். ஆனால் அது சனாதன தர்மத்தை நியாயப்படுத்தி எழுதப்பட்ட ஒரு புத்தகம். ஒருபுறம் பழ.அதியமான், பெருமாள் முருகன், ஆ.இரா.வேங்கடாசலபதி, ஸ்டாலின் ராஜாங்கம் என்று அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசரை வைத்து கல்லா கட்டும் காலச்சுவடு தன் ‘ஆத்ம திருப்தி’க்காக அவ்வப்போது இப்படி சில புத்தகங்களைப் போட்டுக்கொள்கிறது. இணையத்தில் தேடிப் பார்த்தால் தேவ்தத் பட்நாயக் எழுதிய நூலின் பெயர் Faith: 40 Insights into Hinduism. அதை ‘சனாதன தர்மம் ஒரு விசாரணை’ என்று கொட்டை எழுத்தில் தலைப்பு வைத்து, கீழே ‘இந்து மதம் குறித்த 40 பார்வைகள்’ என்று சின்ன எழுத்தில் போட்டிருப்பது கா.சுவின் வியாபாரத் தந்திரம்.

இருக்கட்டும். நூலை முழுவதுமாகப் படித்தேன். உள்ளடக்கம் ஜெயமோகனின் ‘இந்துமதம் சில விவாதங்கள்’ நூலில் உள்ள அதே விஷயங்கள்தான்.

‘இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற செமிட்டிக் மதங்களைப் போல் ஒரே இறைவன், ஒரே இறைத்தூதர் / தேவகுமாரன், ஒரே புனிதநூல் சனாதனத்துக்குக் கிடையாது. ஒரே கடவுள் நம்பிக்கை, பல கடவுள் வழிபாட்டுடன் நாத்திகத்தையும் கூட இந்துமதம் ஏற்றுக்கொள்கிறது. எனவே சனாதனம்/ இந்துமதம் பன்முகத்தன்மை வாய்ந்த, ஜனநாயகரீதியிலானது’.

இந்த தர்க்கத்தை ஒரு வாதத்துக்கு ஏற்றாலும் இந்தக் கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

சனாதனம் என்பது நெறிமுறைகளா, தத்துவப்புரிதலா?

ஏனெனில் ‘சனாதன எதிர்ப்பு’ முன்வைக்கப்படும்போது ‘சனாதனத்துக்கும் சாதியத்துக்கும் தொடர்பில்லை. சனாதனம் என்பது வாழ்க்கைநெறி’ என்றுதான் பலர் சொல்கின்றனர். இன்னும் சிலர் ‘இந்து என்பது மதம் அல்ல வாழ்க்கைநெறி’ என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மேற்கோள் காட்டுகின்றனர். ‘நெறிமுறைகள்’ என்றாலே அது மையப்படுத்தப்பட்டதாக அல்லது தொகுக்கப்பட்டதாக இருக்கவேண்டும். புனித நூல், இறைத்தூதர் இல்லாதபோது இது சாத்தியமில்லை. எனவே ‘சனாதனம் என்பது நெறிமுறை’ என்பது மோசடிதானே?

சனாதனம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் மனித உயிரின் இருப்பு, படைப்பின் ரகசியம் மற்றும் மகத்துவம், ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலான தொடர்பு, மறுபிறவி குறித்த தத்துவப்புரிதல் என்று எடுத்துக்கொண்டாலும், இப்போது ‘இந்து’ என்று அடையாளப்படுத்தப்படும் சராசரி இந்து ஆண்/பெண்ணுக்கும் இந்தத் தத்துவப்புரிதல்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது, அவர்கள் ஏன் ‘இந்துக்கள்’ என்று அழைக்கப்பட வேண்டும்?

படிக்க:

♦ சனாதனத்தை அமல்படுத்தும் பார்ப்பன பயங்கரவாதமே நாட்டின் எதிரி!
♦ சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டு! தொடர் கட்டுரை                                         

சனாதனத் தத்துவங்களுக்கு மேற்கோளாகக் காட்டப்படும் பெரும்பாலான நூற்கள் வடமொழி நூற்கள். புராண உதாரணங்களும்கூட வடநாட்டில் பயன்படுத்தப்படுபவையே. தென்னிந்தியாவில் அது வேறுமாதிரியாக இருக்கிறது. உதாரணத்துக்கு விதவை மறுமணம் இந்து மதத்திலேயே இருக்கிறது என்று காட்டுவதற்காக ராவணன் இறந்தபிறகு மண்டோதரி விபீஷணனைத் திருமணம் செய்ததாகச் சொல்கிறார். நாம் அறிந்த கம்பராமாயணம் உள்ளிட்ட தமிழ்ப்பிரதிகளில் அப்படியில்லை. எனவே தென்னிந்திய / தமிழ்நிலப்பரப்பைச் சேர்ந்தவர் ஏன் தன்னை ‘இந்து’ என்று உணர வேண்டும்?

‘சாதியத்துக்கும் சனாதனத்துக்கும் தொடர்பில்லை’ என்று சொல்லப்படுகிறது. பொதுவாக ‘இந்து’ என்று அறியப்படுகிற சராசரி ஆண்/ பெண் சாதி மற்றும் சில பொதுவான வழிபடும் கடவுள்களை வைத்துத்தான் தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். சாதியே இல்லாத ‘இந்து’வாக ஒரு தனிநபரோ குழுவோ வாழ்ந்து பரிசோதித்திருக்கிறார்களா?

இந்தப் புத்தகத்தில் உள்ள ஆபத்தான சில விஷயங்கள்

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பவை எல்லாம் எந்தவித வரலாற்றுத்தரவுகளையும் முன்வைக்காத, வெறும் அபிப்பிராயங்களே. உதாரணத்துக்குப் ‘புத்தர் திருமாலின் அவதாரமா’ என்னும் கட்டுரையின் இறுதியில் இப்படி சொல்கிறார் ‘பௌத்தர்களைப் பொறுத்தவரை புத்தர் திருமாலின் அவதாரம் அல்ல. ஆனால் இந்துக்களைப் பொறுத்தவரை புத்தர் திருமாலின் அவதாரமாக இருக்கக்கூடும்’.

இப்படி பொத்தாம்பொதுவான ‘பார்வைகளை’ முன்வைப்பவர், அசுரர்கள் திராவிடர்கள், பழங்குடிகள் என்று சொல்லப்படுபவற்றை ‘எந்தத் தரவும் இன்றி கண்மூடித்தனமாக ஊகிக்கின்றார்கள்’ என்கிறார்.

மனுதர்மத்தின் ‘புருஷசூக்த’த்தில் உள்ள ‘பிரம்மனின் முகத்தில் பிராமணர்’ என்பது வெறுமனே உருவகம் என்கிறார். மனுதர்மத்தில் உள்ளவை ‘சமூகம் இப்படி இருக்கலாம் என்ற சிந்தனை’யே தவிர மனுதர்மத்தில் இருந்தது எந்தக் காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டதில்லை என்கிறார்.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனல்

‘மனுஸ்மிருதி இந்துக்களின் சட்டப்புத்தகமாக எப்போதும் இருந்ததில்லை’ (பக்கம் 198) என்பவர் இரண்டு பக்கங்களுக்கு முன்பு, ‘மனுஸ்மிருதி உருவான காலத்திலிருந்து மற்ற சட்டப்புத்தகங்கள் அனைத்தையும்விட இதுவே முக்கியமானதாக இருந்துள்ளது’ (பக்கம் 196)என்கிறார்.

இந்துக்கள் ஏன் பிறரை மதமாற்றம் செய்வதில்லை என்பதற்கு ‘உண்மைக்கடவுள், பொய்க்கடவுள் என்ற அடிப்படையில் உருவானது அல்ல இந்துமதம்’ என்கிறார். சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையில் எவ்வளவு பூசல்கள், விவாதங்கள் நடந்தன, சைவ-வைணவ- சமண- பௌத்த மதமாற்றங்கள் நடந்தன என்பதும் நமக்குத் தெரியும். ‘பிற மதத்தவரை இந்து மதத்தில் சேர்த்தால் எந்தச் சாதியில் வைப்பது’ என்ற ஆதாரமான கேள்வியைத் தொடாமலே ‘இந்துமதம் ஜனநாயகபூர்வமானது’ என்று கம்பு சுற்றுகிறது இந்தப் புத்தகம்.

இந்தப் படையெடுப்புகளுக்கு மதம் காரணமில்லை என்பதால் இஸ்லாமியப் படையெடுப்பு என்று சொல்வதைத் தவிர்த்தால் சாதியத்தை மட்டும் ஏன் இந்துமதத்துடன் தொடர்புபடுத்துகிறீர்கள்’ என்கிறார். என்ன ஒரு பிரமாதமான வாதம் பார்த்தீர்களா?

சாதி என்பதற்கு சனாதனமோ வர்ணாசிரமோ மனுதர்மமோ காரணமில்லை, ‘தூய்மை’ என்னும் கருத்தாக்கம்தான் இந்தியாவில் சாதியத்தை நிறுவியது என்கிறார். ‘தூய்மை’ என்னும் கருத்தாக்கத்துக்கு இந்தப் புத்தகம் தரக்கூடிய உதாரணங்கள் என்ன தெரியுமா? அரசுகளின் ‘விசா’ முறை, சமண சமூகத்தினர் அசைவம் சாப்பிடுபவர்களிடம் இருந்து விலகியிருப்பது, இஸ்லாமியர்கள் சூபியிசத்தை நிராகரிப்பது. எல்லாவற்றுக்கும் மேலாக மார்க்சிஸ்ட்கள் ‘முதலாளித்துவத்தையும்’ மாவோயிஸ்ட்கள் ‘வளர்ச்சி’யையும் தீட்டாகக் கருதுகிறார்களாம். இதுமாதிரியான ‘தூய்மை’ என்ற கருத்தாக்கம்தான் இந்தியாவில் சாதி உருவாகக் காரணமாம். ‘தூய்மை’, ‘தீட்டு’ என்ற உதாரணங்களில் ‘யார் ‘அல்லது ‘எது’ வரவில்லை என்பது புரிகிறதா?

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்தான் சாதி நிலைபெறுவதற்குக் காரணம். சுதந்திரத்துக்குப் பிறகு இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் சாதிப்படிநிலைகள் தொடர்கின்றன. பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர் என்ற வரையறைகள்தான் சாதிகளுக்கு இடையிலான எல்லைகளை வலுப்படுத்துகின்றன. – இது இந்தப் புத்தகம் வெளிப்படுத்தும் கருத்து.

சாதியத்தையும் வர்ணாசிரமத்தையும் நியாயப்படுத்தும், முஸ்லீம்களின் மீதான வெறுப்பைக் கக்கும், இட ஒதுக்கீட்டை ஒழிக்க நினைக்கும் இந்தப் புத்தகத்தைக் காலச்சுவடு மொழிபெயர்த்து வெளியிடுகிறது என்றால் அதன் நோக்கம் என்னவென்று தெரிகிறதா?

நன்றி: Suguna Diwagar
முகநூல் பக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here