பார்ப்பனக் கும்பலின் முகாமில் இருந்தே பார்ப்பன எதிர்ப்பு கருத்துகள் நிரம்பி வழிகின்றன. ஒரு பொருளுக்குள் இருக்கும் இரண்டு எதிரெதிர் அம்சங்கள் என்ற அடிப்படையில் வரலாற்றை பரிசீலிப்பதன் மூலமே சரியான திசையில் நாம் முன்னேறிச் செல்ல முடியும் என்ற கண்ணோட்டத்தில் இந்த பதிவினை வெளியிடுகிறோம்.

ஸுந்தரேச சாஸ்திரியவர்களின் புராண விமர்சனம்

வால்மீகி வேடரல்ல

புராணங்களைப் பற்றிய கடுமையான விமர்சனங்களை பெரும்பாலும் புராண இதிகாச வைதீக விசயங்களை தர்க்க ரீதியாக நம்ப மறுக்கறவர்கள் வைப்பதுண்டு.

அப்படியல்லாமல்,ஜோதிடம்,ஆருடம்,வால்மீகி ராமயண பிரசங்க ரத்னாகரம்,புராண ரத்னம்,வால்மீகி வாக் விலாஸம்,அபிநவ வால்மீகி பௌராணிக சிரோமணி இன்னும் பல பட்டங்களைப் பெற்ற பிரும்மஶ்ரீ முல்லக்குடி M.R. ஸுந்தரேச சாஸ்திரியவர்கள் எழுதிய “புராண விமர்சனம்” நூல்(1952 ஆம் ஆண்டு பதிப்பு) வால்மீகி ராமாயணத்தைக் ஆதாரமாகக் கொண்டு பல்வேறு புராணங்களை கடுமையாக விமர்சிக்கிறது.

அதில் ஒன்று,இன்றைய தேதியில் இந்துத்துவ வாதிகள் வால்மீகி பற்றி முன் வைக்கும் ஒரு கருத்துவாதம். இராமாயணத்தை எழுதியது வால்மீகி முனிவர் ஒரு வேடுவர் ஆனால் அவர்தான் ராமனின் காவியத்தைப் படைத்தார் என்பது அது.

ஆகையால் வேடர் குலத்தில் பிறந்த வால்மீகி போன்றவர்கள் ரிஷிகளாக மதிக்கப் பட்டார்கள் என இந்துத்துவ வாதிகள் வாதிடுவதை சமூக ஊடகங்களில் அன்றாடம் காணக் கூடிய செய்தியாக உள்ளது.

வால்மீகி_வேடர்_அல்ல என்பதை இந்த நூலாசிரியர் தக்க ஆதாரங்களுடன் விளக்குகிறார். அதன் சில பகுதிகளைச் சுருக்கி கீழே தருகிறேன்.

வால்மீகி வேடர் அல்ல

வால்மீகி முனிவர் வேடர்தான் என்று பல ராமாயணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இது சுத்த அபத்தம். எப்படி மஹரிஷியை வேடர் என்று எந்தக் காரணம் கொண்டு சொல்லுகிறார்கள் என்று விசாரிப்போம்.

அவர் வம்சம் தெரியாமல்,தகப்பனார் பேர் ஊர் தெரியாமல் கண்டபடி ஒரு பெரிய மஹானை கேவலம் வேடன் என்று எப்படிச் சொல்லத் துணிந்தார் கள். இது மிகவும் விந்தையிலும் விந்தை.

ஏதோ ஒரு காலத்தில் பிராமணனா யிருந்து கஷ்ட ஜீவனம் செய்து பிறகு கெட்ட ஸஹவாஸங்கள் மூலம் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வழிப்பறி செய்யுங்கால்,
ஸப்தரிஷிகள் கண்டு, நீ ஏன் இந்தத் தொழிலில் இறங்கினாய் என்றும் வினவ, அவர் பிழைப்புக்கு வழி இல்லை. நான் ஸம்ஸாரியானதால் கொள்ளை செய்துதான், பிழைக்கவேண்டும், என்று சொன்னதாகவும்…

அதற்கு, அவர்கள் நீ செய்யும் தொழிலில் பாபம் உண்டானால் அதில் பங்கு உன் பெண்டாட்டி, பிள்ளைக்கு பாகம் உண்டா என்று கேட்டுவா, என்பதற்கு,
அவன் அப்படியே வீடு சென்று தன் பெண்டாட்டி பிள்ளைகளைக் கேட்டதற்கு பாபத்தில் பங்கு எங்களுக்குக் கிடையாது. நீ எங்களைக் காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கிறாய் என்று சொன்னவுடன், அவ்வேடன் மறுபடியும் திரும்பிவந்து அந்த ஸப்தமுனிவர்களிடம் சரணம் அடைந்து வீட்டில் நடந்த ஸமாசாரங்களைத் திருப்பிச் சொல்ல அவர்கள் ஏ வேடர் ! எப்பொழுது நீ செய்யும் தொழில் பாபம் என்று அறிந்து அதன் மூலம் சாப்பிடும் உன் வீட்டு ஜனங்கள், அதில் அதாவது பாபத்தில் பங்கு எங்களுக்குக் கிடையாது என்றார்களோ அவர்களுக்கு நீ ஸம்பாதித்துப் போட்டு நீ மட்டில் செய்யும் பாபத்தை எப்படிப் போக்கடிப்பாய் என்று கேட்க அதற்கு அவ்வேடன் பதில் சொல்ல முடியாமல், ஹே! முனிவர்காள் இனி எனக்கு குடும்பப்பற்று வேண்டாம். நான் இதுவரையில் செய்த பாபத்திற்கு பரிஹாரம் ஏதாவது சொல்லுங்கள். நான் அதன்படி செய்து நல்ல மார்கம் அடைய வேண்டும் என்றும் அவ்வேடுவன் வேண்ட , உடன் அம்முனிவர்கள் அவன் பக்கத்திலுள்ள, மரத்தைக் காண்பித்து, இதன் பெயர் என்னவென்று கேழ்க்க அவன் இது மரம் (கன்னடத்தில் மரா என்றும், மளையாளத்திலும் அப்படியே) என்று சொல்ல, அதுகேட்ட அம்முனிவர்கள் அதையே திருப்பித்திருப்பிச் சொல்லு: அதனால் உனக்கு நன்மை உண்டாகும் என்று சொல்லி விட்டுப்போனார்கள் என்றும், அதிலிருந்து மரம் என்பதை அடிக்கடி சொல்வதினால் அது ராம் ராம் என்று வந்திருப்பதினால் புத்து உண்டாகி அதிலிருந்து வால்மீகி என்று பேர் உண்டாகி. ராமாயணம் செய்தார் என்று உலகத்தில் முக்காலும் வழங்கிவருகிறது.

இவைகள் எங்கு இருக்கின்றன என்றால். வடமொழியில் உள்ள அத்யாத்ம ராமாயணம் ஆநந்த ராமாயணம் முதலிய நூல்களிலும் துளஸீதாஸ் முதலிய வடஇந்திய முதலிய நூல்களிலும் கம்பர் முதலிய தென்மொழி நூல்களிலும் இருக்கின்றன.

இவைகள் அதனதன் முகவுரைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.என்னவென்றால் ஆதி கவியான வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்தின் அர்த்தத்தை அப்படியே நாங்களும் மொழிபெயர்த்துச் சொல்லுகிறோம் என்றும் அவைகள் பறைசாற்று கின்றன.

இப்படி வால்மீகி முனிவர் கூறியிருந்தால் அவர் செய்த நூலில் இருக்கிறதா என்று ஆராய்ந்தால் அதில் இந்த விஷயம் கூறவேயில்லை.

பின் எப்படி இவைகள் எழுதுகின்றன. அதுதான் நான் முன்பு கூறின காரணம் நாளாவட்டத்தில் கைச்சரக்கு ஏற்றி யிருக்கிறார்கள் என்பது வெளியாகிறது.

காலம் கலியுகமல்லவா, பொய்யானாலும் திருப்பித் திருப்பிச் சொன்னால் நிஜமாகவே வந்துவிடும்.

அதுபோல் தான் இந்த விஷயமும். ஆனால் நிஜம்தான் என்னவென்று கேட்டால் பின்வரும் விஷயங்களை ஊன்றி கவனித்தால் வால்மீகி வேடரில்லையென்பது வெட்டவெளிச்சமாய்த் தெரியும்.

முதல், காரணம் இப்பொழுது வழங்கிவரும் வால்மீகி முனிவர் செய்தருளிய ஸ்ரீமத் ராமாயணத்தில் 2-வது காண்டம் அல்லது அயோத்யா காண்டம் 56-வதுஸர்கம் 16-வதுசுலோகத்தில் ஸ்ரீ ராமர் லக்ஷ்மணர் ஸீதாதேவி இம்மூவர்களும், சித்ரகூட மலையில் ஏறும்போதே வால்மீகி முனிவர், ஆச்ரமம் அடைந்து அவரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றபின்,மலையில் தங்கியிருந்தார்கள் என்று இருப்பதாலும்,(அப்பொழுது வயது ஸ்ரீ ராமருக்கு 28-வது)

2-வது காரணம்-உத்தர காண்டம் 47 -வது ஸர்கம் 16, 17 – வ 9 -வது சுலோகங்களில் லக்ஷ்மணர் ஸீதா தேவியை ராமருடைய உத்திரவால் கங்கா தீரத்தில் கொண்டு விடும் போதும் பின்வருமாறு கூறுகிறார்.

என்னவென்றால், தேவி என் தகப்பனாருக்கு இஷ்டமானவரும், ஸ்நேஹிதருமான பிராமணர், உயர்ந்த மஹரிஷி வால்மீகி என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஆச்ரமத்தில் நீங்கள் இருந்தால் க்ஷேமம் உண்டாகுமென்று சொல்லிவிட்டு, திரும்பிவந்தார் என்று எழுதியிருக்கிறது.

வால்மீகி, ராமர் குழந்தைகளான குசலவர்கள் மூலம் எங்கும் தான் செய்த ராமயணத்தை பிரசாரம் செய்யும்படியும் ஏற்படுத்தினார்.

ஸீதாதேவியை அழைத்துக் கொண்டு ஶ்ரீ பிரம்மாவின் பின்னால் எப்படி வேதங்கள் வருமோ அதுபோல் வால்மீகி முனிவர் பின்னால் காஷாய வஸ்தரம் கட்டிக்கொண்டு ஸீதாதேவி வந்தாள் என்றும், அப்பொழுது முனிவர்( 96 ஸர்கம் 16-வது சுலோகம் முதல் 20-வது சுலோகம் முடிய) பின்வருமாறு சொல்லுகிறார்.

ஹே ராமா நான் ப்ரசேதஸ், என்கிற, பிரம்மபுத்ரர்களில் ஒருவரான அவர் வம்சத்தில் 10-வது தலைமுறை, என் பெயர் வால்மீகி. நான் என்னுடைய பஞ்சபூதங்கள் மனதுடன் 6ம் கூடின சுத்தமான எண்ணத்தோடு அநேக ஆயிர வருஷங்கள் தபஸ் செய்து வருகிறேன்.

மேலும் நான் தபோபலத்தால் தேவலோகம் முதல் பிரம்மலோ கங்களிலும் கூட என் தபஸாகும் பணங்கள் ஏராளமாய் என்னிடம் இருக்கின்றன.

ஆகையால் இந்த ஸீதையை, சுத்தமில்லை என்று நிரூபணம் செய்துவிட்டாலும், இக்குழந்தைகள், ஸீதையின், பிள்ளைகள், இல்லை என்று, சொல்லிவிட்டாலும், நான் செய்த புண்யத்தை அடையமாட்டேன்.

மேலும் நான் இதுவரையில் பொய் சொன்னதும் கிடையாது.உங்கள் புத்ரர்கள் தான் இவர்கள் என்றும் உங்கள் ஸீதை சுத்தைதான் என்றும் ஸத்யமாய் சொல்லுகிறேன் என்று ஸ்ரீ ராமர் ஸன்னதியில் வால்மீகி முனிவர் நேரில் சொல்லி எழுதியிருக்கும்போதும், அந்த வால்மீகி முனிவர் செய்த ராமாயணத்தை இப்பவும் வாசித்தும், கேட்டும், ஐரோப்பா, ரஷியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஏஷியா, அமெரிக்கா, முதலிய, இடங்களில் கூட, பிரஸித்தி அடைந்திருந்தும் இம்மஹானை எப்படி மனம் துணிந்து வேடர் என்று சொல்லியும், எழுதியும் வருகிறார்கள்.

அந்தோ பரிதாபம். பொய்தான் எவ்வளவு பெரிது.

♦♦♦

ஸுப்ரம்ஹண்யரின் உற்பத்தி மற்றும் வள்ளி தேவஸேனா இவர்களிடன் நடந்த கல்யாணத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார் நூலின் ஆசிரியர்.அதற்கான ஆதாரங்களையும் விளக்குகிறார்.

சுமார் 800 வருஷங்களுக்கு முன்பு சைவ வைணவ மதம் தாண்டவமாடும்போது ஸ்ரீபெரும்புதூரில் ராமாநுஜர் பிறந்து வைஷ்ணவ மதத்தை ஸ்தாபித்து பிரசாரம் செய்து பிரபல மாய் இருக்கும் காலத்தில்,

காஞ்சீபுரத்தில் குருக்கள் ஸமூகத்தில் ஒருவர் கச்சியப்ப சிவாசாரியார் என்கிற புலவர் சைவ மதம் வீணாகிவிடுமோ என்று பயந்து தனது கவித் திறமையால் தமிழில் செய்யுள் பாடி அதற்குத் தகுந்தாற்போல் மொழி பெயர்க்கும் சக்தியுடைய வடமொழிப்புலவர் ஒருவரையும் வைத்துக்கொண்டு தான் எழுதின தமிழ்க் கவிக்குச் சரியான சுலோகத்தை எழுதும்படி செய்து ஸ்கந்தபுராணம் உண்டாக்கினார் என்பது உறுதி.

மேலும் அதற்கு உதாரணம் ஸ்ரீ பாகவதம் அப்பொழுதுதான் தெலுங்கு தேசத்தில் பொப்பதேவன் என்ற ஒரு புலவன் மூலம் இயற்றினார்.

அதில் சிவதூஷணைகள் அதிகமிருப்பதைக்கொண்டும் அதே சமயம் தேவீ பாகவதம் என்று மற்றொன்றும் இது மாதிரி கணபதி பக்தர்கள் விநாயகபுராணமும், பிறகு அநேக தேசங்களில் பற்பல புராணங்களும் ஆழ்வார் சரித்திரங்களும், இதுமாதிரி சைவர்கள் 63வர் சரித்திரங்களும் திருவிளையாடர் புராணமும் ஹாலாஸ்ய மாஹாத்மியமும் ஸூத ஸம்ஹிதா ஸேது மாஹாத்மியம இப்படி, புலவர்கள் சிவனை வைஷ்ணவர்களும், விஷ்ணுவை சைவர்களும் கண்டாகண்டபடி வாயில் வந்ததைச் சொல்லி, புராணமூலமாக எழுதி புராணமூலமாக எழுதி எல்லாம் தங்களால் செய்யப்பட்டது என்றால் ஒருவரும் விரும்பமாட்டார்கள் என்று நினைத்து, மொத்தபுராணங்களுக்கெல்லாம் வியாஸர் பேரையும், ராமாமாயண,விஷய மான கதைகள் வந்தால், வால்மீகி பேரையைம் போட்டுபோதாக்குறைக்கு உமாமஹேச்வர ஸம்வாதம் என்று பெயரிட்டு உலகத்தைப் பொய்யாக்கிவிட்டார்கள். அதன் பிறகு பாகவத ஸம்பிரதாயம் என்று, பண்டரா பக்தர்கள், பஜனை முதலிய விஷயங்கள்களாலும், நல்லது கண்ணில் படா மல் ஓர் குழப்பத்தை உண்டுபண்ணிவிட்டார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.

இப்படி M.R.ஸுந்தரேச சாஸ்திரியவர்கள் எழுதி அதற்கான காரணங்களையும் விளக்குகிறார்.

பொதுவாக இந்துத்துவ வாதிகள் வேதங்களைப் புறக்கணிக்கும் நாஸ்திகர்கள்தான் புராணங்களை எதிர்க்கிறவர்கள் எனும் தவறான வாதத்தை முன்வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அத்தகைய இந்துத்துவவாதிகள் மற்றும் புராணங்களை உண்மை என நம்புவோர்கள் இந்த “புராண விமர்சனம்” தவறாது வாசிக்க வேண்டும்.

பதிவு:- வாசிப்பை நேசிப்போம்

நன்றி: பொன்னுசாமி முத்தையா

முகநூல் பகிர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here