நண்பர்களே…
புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞரும் வரலாற்றுப் பேராசிரியருமான புலவர் செ.ராசு அவர்கள் “தமிழகத்தில் அடிமை முறையும் ஆள் விற்பனையும்” என்ற நூலை எழுதியுள்ளார். தமிழகத்தில் பிழைப்புவாத அரசியல்வாதிகள் பலரும் கடந்த கால வரலாற்றைப் பற்றி ஆஹா ஓஹோ என்று பலவிதமான கற்பனை நிறைந்த பொய்க் கதைகளைப் பரப்பி படித்தவர்களைக் கூட ஏமாற வைக்கின்றனர். இத்தகையவர்களின் பொய்யான கூற்றுக்களை மறுக்கும் விதமாக பேராசிரியர் புலவர் ராசு அவர்கள் இந்த நூலில் பல ஆவணங்களைப் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆவணங்களில் உள்ள செய்திகளின் தன்மைகளைப் பற்றி புலவர் ராசு அவர்கள் முன்னுரையில் எழுதியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
“ இலங்கை உட்படத் தென்னகம் முழுவதையும் வென்று அடிப்படுத்து ஆண்டு கங்கைவரை உள்ள நாடுகளையெல்லாம் வென்று, அலை கடல் நடுவுள் பல கலம் செலுத்திக் கடாரத்தில் புலிக் கொடி நாட்டி வானளாவிய விமானம், கோபுரம் உடைய ஆலயங்கள் கட்டிய சோழர் ஆட்சி தமிழ்நாட்டில் பொற்காலம் என்று கருதப்படுகின்றது.
இக்காலத்தில் தான் அடிமை முறை கொடிகட்டிப் பறந்தது. பல கோயில்கள் அடிமைகட்கு “அஞ்சினான் புகலிடம்” ஆக விளங்கியது. கோயில்களில் அடிமைகள் கூட்டம் பெருகியது. மூன்றாம் இராசராசன் காலத்தில் மட்டும் கொறுக்கை வீரட்டானேசுரர் கோயிலில் 100 அடிமைகள் இருந்துள்ளனர்.
ஆனால் நாட்டு வரலாற்று நூல்களில் தமிழக அடிமை முறை உள்ளபடி எழுதப்படவில்லை. அரசர்கள் ஆட்சியில் பாலாறும், தேனாறும் பாய்ந்ததாகக் கூறும் சில வரலாற்று நூல்களில் தமிழக அடிமை முறை மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் உள்ளன.”
அதே முன்னுரையில் மேலும் அவர்,
” முழுவதையும் தொகுத்துப் பார்த்தபோது அதிர்ச்சி தரத்தக்கதாகவும் திடுக்கிட வைப்பதாகவும் நெஞ்சை உலுக்குவதாகவும் பல செய்திகள் கிடைத்தன ” என்று பதற்றதுடன் எழுதுகின்றார்.
இந்த ஆவணங்களில் உள்ள செய்திகளைப் பற்றி தொகுத்துக் கூறுகையில்,
“ பலர் ஊர்ப்பொது இடத்தில், தெருவில், ஊர் மன்றத்தில், ஆவணக் களரியில் பலர் முன்னிலையில் தங்கள் மனைவி, இளம்பெண்கள், மகன், மகள், குழந்தைகளையும் நிறுத்தி குடும்ப உறுப்பினர்களையும் சிலர் தம்மையும் ”விலை கொடுத்து வாங்குவார் உண்டோ” என்று விலை கூறி விற்கும் நிலை பல இடங்களில் நடைபெற்றுள்ளது. இவ்வாறு விற்றுக்கொண்ட ஆவணங்கள் பல இத்தொகுப்பில் உள்ளன.
இன்னொரு கொடுமை இந்த அடிமைகளில் “தீண்டா அடிமை” என ஒரு பிரிவினர் இருப்பது தான். இவர்கள் ஊருக்குள் இல்லாமல் ஊருக்கு அப்பால் “புறஞ்சேரி” என்ற இடத்தில் இருந்தனர். “புறஞ்சேரியில் கிடக்கும் தீண்டா அடிமை” என்று இரு ஆவணம் கூறுகிறது. ”
இறுதியாக தமிழகத்து அடிமைமுறையின் கொடுமையைப் பற்றி புலவர் ராசு அவர்கள் பதற்றத்துடன் கூறுவது,
தீண்டா அடிமைகள்
- ஆபரணம் எதுவும் அணியக் கூடாது
- செருப்பு அணியக் கூடாது
- வீடுகளில் உலோகப் பாத்திரம் இருக்கக் கூடாது
- மண்பாத்திரம் மட்டுமே இருக்க வேண்டும்
- ஆண்கள் இடுப்பிற்கு மேலும் முழங்காலுக்குக் கீழும் ஆடை அணியக் கூடாது
- நன்மை, தீமைக்கு வாத்தியம் வாசிக்கக் கூடாது
- வீட்டுக்குக் காரை பூசக் கூடாது
- பெண்கள் மார்பை மறைக்க தாவணி, ரவிக்கை போடக் கூடாது
- மழை வெயிலுக்குக் குடை பிடிக்கக் கூடாது
செம்மொழியான நம் செந்தமிழ் வழங்கும் நம் தாய்த்திரு நாட்டில் மேற்கண்டவாறு “அடிமைச் சமுதாயம்” என ஒன்று இருந்தது வரலாற்றில் எழுதப்பட வேண்டும். அப்போது தான் நாட்டு வரலாறு முழுமை பெறும்.
அம்முயற்சிக்கு இச்சிறு நூல் உதவக் கூடும். ”
என்று வருத்தத்துடன் கூறி தன் முன்னுரையை முடிக்கின்றார் புலவர் இராசு அவர்கள்.
(முகநூல் பதிவு)
பொ வேல்சாமி