
கேள்விக்குறியாகும் செய்தியாளர்களின் சுயமரியாதை. ஊடக நிறுவனங்களுக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லையா?
சீமானின் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் அவரது அராஜகமும் மிரட்டும் உடல் மொழியும் பல ஆண்டுகளாக வெளிப்பட்டபடியே இருக்கிறது. இதனை அவர் மாற்றிக்கொள்ள முயன்றதில்லை என்பதை விட மாற்றிக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஊடகங்களின் தரப்பில் இருந்து வரவில்லை என்பதே பொருத்தமானது.
நாடெங்கிலும் ஏராளமான தலைவர்கள் தினந்தோறும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியபடிதான் இருக்கிறார்கள். யாரும் சீமானை போல செய்தியாளரை பார்த்தே பதில் கேள்வி கேட்பதும் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஆதாரம் கேட்பதையும் செய்வதாக தெரியவில்லை.
அதன் உச்சகட்டத்தைத்தான் இன்று நாம் கோவையில் நடந்த அவரது செய்தியாளர் சந்திப்பில் பார்த்தோம். சமீப காலத்தில் நான் பார்த்ததில் நல்ல தயாரிப்போடும் சரியான கேள்விகளோடும் வந்த செய்தியாளர்கள் நடத்திய நேர்காணல் அது. நேர்காணல் முழுக்கவே அசட்டுத்தனமான பதில்களை அதிகாரத் தொனியில் பேசியபடி இருந்தார் சீமான். எனினும் அதனால் சோர்வடையாமல் உரிய கேள்விகளை எழுப்பியதும் அந்த செய்தியாளரை ஒருமையில் அதட்டத் துவங்குகிறார் சீமான்.
படிக்க: ♦ சீமான் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது
நீ, வா, போ என அழைப்பதும் ஆதாரத்தை கொண்டு வா என பதில் கேள்வி கேட்பதுமாக நேர்காணலை சமாளித்தார் அவர்.
அதன் பிறகு நடந்தது தான் ஊடக வரலாற்றின் பெரும் தலைகுனிவான சம்பவம். அசல் பொறுக்கியும் ரவுடியும்கூட பொதுமக்கள் முன்னிலையில் பேசத் தயங்குகிற வார்த்தையை பெண் செய்தியாளரை நோக்கி சர்வ சாதாரணமாக பேசிவிட்டு போகிறார் சீமான்.
இது அந்த ஒற்றை செய்தியாளருக்கு நேர்ந்த அவமானம் அல்ல. சீமான் ஒட்டுமொத்த ஊடகங்களை மதிக்கும் லட்சணம். ஆகவே இந்த அவமானம் ஊடகத்தின் எல்லா பிரிவினருக்குமானது. இந்த அவமானத்திலிருந்து செய்தியாளர்களை காக்க வேண்டியது குறித்து ஊடகங்கள் இனியாவது பரிசீலிக்க வேண்டியது அவசியம்.
இது உணர்ச்சிவசப்பட்டு அல்லது தவறுதலாக அவரிடம் இருந்து வெளிவந்த வார்த்தையாக இருக்கலாம் எனும் சமாதானத்தை யாரேனும் நம்பத் தயாராக இருந்தால், அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி. இதே மாதிரியான பதிலை அவர் சசிகலா முன்போ கிரானைட் பழனிச்சாமி முன்போ எந்த சூழ்நிலையிலாவது பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
- வில்லவன் ராமதாஸ்
முகநூல் பதிவு
000
பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கண்ணியக் குறைவான வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்திவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது..