அன்பான நடிகர் சித்தார்த்… வணக்கம்.
பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் குறித்த சாய்னா நேவாலின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து, நீங்கள் எழுதிய வார்த்தைகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்..
சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன் என்று ட்விட்டரில் மன்னிப்பு கோரியுள்ளீர்கள். ஒன்றுமில்லாத விஷயத்திற்கு எதற்காக பிரச்சினையை வளர்க்க வேண்டும். சர்ச்சையை முடித்துவிடலாம் என நினைத்தே நீங்கள் மன்னிப்பு கோரியதாக நினைக்கிறேன்.
Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022
உங்களுடைய மன்னிப்பை சாய்னா நேவால் ஏற்றுக்கொண்டதாகவே நினைக்கிறேன்.
ஆனால்… அந்த பதிவு ஏன் இவ்வளவு வைரலானது ? எப்படி என எனக்கு தெரியவில்லை. டுவிட்டரில் நான் டிரெண்டிங் ஆனது எனக்கு ஆச்சரியமாக உள்ளது என சாய்னா கூறியுள்ளார் அல்லவா! அதுவே இந்த கடிதத்தை எழுதக்காரணம்..
இரண்டாயிரத்திற்கு பிறகு திரையுலகிற்கு வந்த எந்த நடிகரும்.. இந்தியா முழுவதும் நடக்கும் பிரச்சனைகள் குறித்தோ.. அரசின் செயல்பாடுகள் பற்றியோ உங்களைப்போல வெளிப்படையாக தொடர்ச்சியாக விமர்சனம் செய்வது இல்லை. அந்த வகையில் நீங்கள் ரொம்பவும் ஸ்பெஷல்…
உங்களது சினிமாத் தொழிலை மட்டும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால் அரசியல், சமூகம், பொதுவாழ்வில் இருப்பவர்கள், என எல்லா துறைகளிலும் நடக்கும் உண்மைக்குப் புறம்பான விஷயங்களை சமரசமின்றி விமர்சிக்கிறீர்கள் அல்லவா!
அதனால் தான் ட்விட்டர் பதிவுகளை வைத்து,உண்மைகளை மடைமாற்றம் செய்யும் திசை திருப்பல் அரசியல் செய்யப்படுகிறது.
பாவம்…ஒலிம்பிக் சாம்பியன் சாய்னா நேவாலுக்கு அரசியல்வாதிகளின் தந்திரமும், ஆதாய அரசியலின் யுக்தியும் தெரியாது போல.. அதனால் தான்.. டுவிட்டரில் நான் டிரெண்டிங் ஆனது எனக்கு ஆச்சரியமாக உள்ளது என சாய்னா கூறியுள்ளார்..
உங்களது சில பழைய பதிவுகளை ஞாபகப்படுத்தி,,உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் இப்போது வரை எழுந்துகொண்டு தான் இருக்கிறது. அது அவ்வளவு சீக்கிரத்தில் ஓயுமென்ற நம்பிக்கை எனக்கில்லை.
2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26- ம் தேதி ஜம்மு காஷ்மீரின், புத்காம் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான Mi-17 ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் விமானப்படையின் 6 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
அது, நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதால் அந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்ற எந்த தகவலையும் ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தவில்லை. அவ்வளவு ரகசியமாக அந்த விஷயத்தை மறைத்து வைத்திருந்தனர்.
2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ம் தேதி இந்திய விமானப்படையின் Air Chief Marshal R.K.S. Bhadauria இந்திய வான் எல்லைக்குள் பறந்த Mi-17 ஹெலிகாப்டரை,விமானப்படையே ஏவுகணை மூலம் சுட்டு தாக்குதல் நடத்தியது. அதனால் தான் 6 பேர் கொல்லப்பட்டனர் என்று உண்மையை ஒப்புக்கொண்டார். அதுவொரு மாபெரும் தவறு என்று கூட கூறினார். ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை .
உலகில் எந்த நாட்டிலும் இப்படியொரு அசம்பாவிதம் இதுவரை நடந்ததில்லை. தேர்தலுக்காக ஆறு மாத காலம் அந்த உண்மையை மறைத்து வைத்திருந்த ஆட்சியாளர்கள் இப்போது வரை அதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை.
ஒரு ஆண்டுக்கும் மேலாக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து,டெல்லியின் எல்லைகளில் போராடிய விவசாயிகள் 700 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். அந்த போராட்ட காலத்தின் போது, விவசாயிகள் வாங்கிய “வாட்டர் பாட்டில்கள்” எத்தனை, எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்ற விபரங்கள் எல்லாம் மத்திய உளவுத்துறையால் சேகரிக்கப்பட்டது. ஆனால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை குறித்த எந்த விபரங்களும் அரசிடம் இல்லையென உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
700 பேர் இறந்தபிறகு… மூன்று வேளாண் சட்டங்களை எங்களால் புரியவைக்க முடியவில்லை எனக்கூறி சட்டங்களை திரும்பப்பெற்றுவிட்டது மத்திய அரசு..
ஆனால் 700 க்கும் அதிகமானோர் செத்துப்போனார்கள் அல்லவா ! யார் அதற்கு காரணம் ! அதற்காக மன்னிப்பு கேட்கவேண்டாம்.. குறைந்தபட்சம் இரங்கல் தெரிவிக்கலாம் அல்லவா! ஆனால் அதைக்கூட ஆட்சியாளர்கள் செய்யவில்லை.
2021 டிசம்பர் மாதம் 5-ம் தேதி நாகாலாந்து மாநிலத்தில் காக்காய் குருவியை சுடுவதைப்போல சிறப்பு ஆயுதப்படை வீரர்களால் 14 பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டனர். ஏதாவது வருத்தம் தெரிவித்ததா மத்திய அரசு ! கிடையவே கிடையாது..
புல்வாமா தாக்குதலின் போது என்ன நடந்ததென்று யோசித்துப்பாருங்கள் !ஒட்டுமொத்த தேசமும் இறந்த வீரர்களுக்காக கண்ணீர் வடித்தது.. நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை அதைத்தவிர வேறு எதையும் யாரும் பேசவில்லை. ஆட்சியாளர்கள் வேறு எதையும் பேச விடவும் இல்லை.
ஆனால் ஆட்சியாளர்களால் அப்பாவிகள் கொல்லப்படும் போது, ஒரு மெழுகுவர்த்தி ஏந்தி இருக்கிறார்களா அதிகாரத்தில் இருப்போர் ? ஒரு நாளும் நடந்தது இல்லை. ஏதாவது வருத்தம், மன்னிப்பு கேட்டிருக்கிறார்களா வாய்ப்பே இல்லை.
தமிழகத்தில், தூத்துக்குடியில் 13 பேரை துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்தார்கள். தமிழகத்தின் காவல்துறையில் பணியாற்றும் திறமை வாய்ந்த ஷூட்டர்கள் ஸ்நோலின் என்ற சிறுமியை வாயிலேயே சுட்டுக்கொலை செய்தனர்.
இப்போது வரை யாருடைய உத்தரவில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது என்ற விபரம் கூட தெரியவில்லை. இதுவரை அதற்கு குறைந்த பட்சம் அரசும் பொறுப்பேற்கவில்லை. காவல்துறையும் பொறுப்பேற்கவில்லை.
உலகில் எங்காவது ஒரு மூலையில் வெடிகுண்டு தாக்குதலோ,அல்லது தூப்பாக்கிச்சூடோ,மனிதக்கடத்தல்களோ நடந்தால் அடுத்த 24 மணிநேரத்தில் ஏதோவொரு பயங்கரவாத அமைப்பு அதற்கு பொறுப்பேற்றுக்கொள்கிறது..
இந்த நாட்டில் எத்தனையோ மக்களுக்கு எதிரான சம்பவங்களும், அரசு இயந்திரத்தால் நிகழ்த்தப்பட்ட படுகொலை சம்பவங்களும் நடந்துள்ளது.
யோசித்துப்பாருங்கள்… எப்போதாவது யாராவது பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்களா ?
பயங்கரவாத அமைப்புக்களிடம் இருக்கும் குறைந்த பட்ச நேர்மை கூட, மக்களுக்காக ஆட்சி செய்கிறோம் எனக்கூறும் ஆட்சியாளர்களிடமும் இல்லை. பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறோம் எனக்கூறும் காவல்துறையிடமும் இல்லை. இது தான் எதார்த்தம். நாட்டில் நிலவும் உண்மையும் கூட..
“நிஜ வாழ்க்கையில் உங்கள் மனதின் குரல்படி நடந்துகொண்டால் நீங்கள் அதற்கான விளைவுகளுக்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று ஒரு முறை ட்விட்டரில் நீங்கள் பதிவிட்டிருந்ததாக ஞாபகம் சித்தார்த்..
அதனால் உங்களைச்சுற்றி நடக்கும் எதைப் பார்த்தும் நீங்கள் பயப்படமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
சாய்னா நேவால் குறித்த உங்களுடைய ட்விட்டர் பதிவால்.. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. யாரும் உயிரிழக்கவில்லை. உங்கள் வார்த்தைகளால் ஏற்பட்ட துயரத்தின் வலியை தாங்க முடியாமல், யாரும் கண்ணீர்விட்டு கதறி அழவில்லை..
இருந்த போதும் சிலர் வருத்தப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்டிருக்கிறீர்கள்..தவறில்லை..
மனிதர்கள் தானே மன்னிப்பு கேட்பார்கள்..
இல்லையா சித்தார்த் ?
நன்றி,
B.R.அரவிந்தாக்ஷன்
ஊடகவியலாளர்
முகநூல் பதிவு
அற்புதம்