இந்தியாவின் முன்னணி இதயநோய் நிபுணரும், பெங்களூரு நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி கேட்கிறார்:

டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி

“சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்சில் 55 மருத்துவக் கல்லூரிகள், அமெரிக்காவில் வேலை செய்யப் போகும் டாக்டர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணியில் இயங்குகின்றன. ஒரு ஷாப்பிங் மாலின் ஐம்பதாயிரம் சதுர அடி வாடகை இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அக்கல்லூரிகளில் மிக அற்புதமான மருத்துவர்கள் அமெரிக்காவுக்காக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க, நீங்கள் ஏன் மருத்துவக் கல்லூரிகளுக்காக 400 கோடி ரூபாய் செலவு செய்து மாபெரும் கட்டடங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? இது மிகவும் அபத்தமானது. உலகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கு இப்படியான கடினமானத் தேவைகளோ விதிகளோ இல்லை. அவற்றில் 100 மாணவர்களைப் பயிற்றுவிக்க 140 ஆசிரியர்கள் தேவையில்லை. 140 ஆசிரியர்கள் ஆயிரம் மாணவர்களை பயிற்றுவிக்கலாம். இவ்விஷயங்களில் உலகமே மாறி விட்டது, ஆனால் நாம் மாறவில்லை. மருத்துவக் கல்லூரிகளை ஓர் உயரடுக்கு விவகாரமாக மாற்றிவிட்டோம்.

பிலிப்பைன்ஸில் உள்ள மருத்துவக் கல்லூரி

நான் ஓர் இளம் மருத்துவ மாணவனாக இருந்தபோது என் சக மாணவர்களில் பெரும்பான்மையானோர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இன்று ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மருத்துவராக வேண்டும் என்ற கனவு கூட காண்பதில்லை. இது மிகப்பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

தங்கள் விரல்களில் பெரும் மாயவித்தையை வைத்திருக்கும் மருத்துவத் துறையின் முதன்மையான பல மருத்துவர்களை கணக்கிலெடுத்துப் பார்த்தால் அவர்கள் அனைவரும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்தப் பிள்ளைகள் தான் மிகுந்த உறுதியுடனும் மாபெரும் லட்சியத்துடனும் 24 மணி நேரமும் உழைக்கக் கூடியவர்களாவும், இந்த ஆட்டத்தின் விதிகளையே மாற்றக்கூடியவர்களாவும் இருப்பார்கள்.

வசதியான குடும்பத்திலிருந்து மருத்துவம் படிக்க வரும் பிள்ளைகள் பெரும்பாலும் கதிரியக்கவியல் (ரேடியாலஜி), தோல் மருத்துவம் (டெர்மட்டாலஜி) போன்ற துறைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள், ஏனெனில் மாலை 5 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பிவிடலாம்.

மருத்துவ மேற்படிப்புகள் படிக்க ஏன் இத்தனை கோடிகள் விலை வைக்கப்படுகிறது? ஏன் ஒரு மருத்துவ நிபுணர் (ஸ்பெஷலிஸ்ட்) ஆக ஒருவர் இரண்டிலிருந்து ஐந்து கோடி ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது? பத்து லட்ச ரூபாய்கூட ஏன் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கிறது? உலகம் முழுவதும் உயர்கல்வி என்பது கட்டணமில்லாமல் இலவசமாகவே வழங்கப்படுகிறது.

அடிப்படையில், பிரச்சினை என்னவென்றால் மருத்துவத் துறையில் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் அரசாங்கம் மட்டுமல்ல, வாய்ப்புகள் மறுக்கப்படாத உயரடுக்கு சமூகத்தினர் சரியான கேள்விகளை எழுப்புவதில்லை என்பதுவே…

ஒவ்வொரு 12 நிமிடமும் ஒரு கர்ப்பிணி தன் பிரசவத்தின்போது ஏன் இறக்க வேண்டியிருக்கிறது?

ஒவ்வொரு நாளும் 3 லட்சம் குழந்தைகள் தாங்கள் பிறந்த அன்றே ஏன் இறக்கிறார்கள்?

12 லட்சம் குழந்தைகள் தங்கள் முதல் பிறந்தநாளைக் காணும் முன்பே ஏன் இறக்கிறார்கள்?

இது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. ஏன்? ஏன்?

ஏனெனில், நாம் சரியான கேள்விகளை எழுப்புவதில்லை.

புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், பிரசவத்திற்கு முன்பு இந்தக் கர்ப்பிணிகள் அனைவருக்கும் ஒரு நல்ல முறையான கர்ப்பகால பரிசோதனை செய்யப்பட்டிருந்தால், இவை நிகழ்ந்திருக்காது. இந்த கர்ப்பிணிப் பெண்களில் 15% பேருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அதாவது 52 லட்சம் சிசேரியன்கள் செய்ய வேண்டியிருக்கும். அவற்றை செய்ய 2 லட்சம் மகப்பேறு மருத்துவர்கள் (கைனக்காலஜிஸ்ட்) நமக்குத் தேவை. நம்மிடம் 50 ஆயிரத்துக்கும் குறைவான மகப்பேறு மருத்துவர்களே இருக்கிறார்கள். அதிலும் பலர் பின்பேறுகால மருத்துவத் (ஆப்ஸ்டெட்ரிக்ஸ்) தொழிலைச் செய்வதில்லை. ஏனெனில் பிரசவத்துக்காக நள்ளிரவுகளில் தாங்கள் தட்டியெழுப்பப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. மேலும் அவர்களெல்லாம் நகரங்களில் வசிக்கிறார்கள், ஆனால் 60% சதவிகிதக் குழந்தைகள் ஊரக/கிராமப்புற இந்தியாவில் தான் பிறக்கின்றன.

நமக்கு 2 லட்சம் மயக்க மருந்து நிபுணர்கள் தேவைப்படுகிறது, ஆனால் 50 ஆயிரத்துக்கும் குறைவான மயக்க மருந்து நிபுணர்களே இருக்கிறார்கள்.

நமக்கு 2 லட்சம் குழந்தை மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள், வெளிவரும் குழந்தைகளையெல்லாம் பார்த்துக் கொள்ள, ஆனால் 50 ஆயிரத்துக்கும் குறைவான குழந்தை மருத்துவர்களே இருக்கிறார்கள்.

நமக்கு 1.5 லட்சம் கதிரியக்கவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள், ஆனால் நம்மிடம் பத்தாயிரத்துக்கும் குறைவான கதிரியக்கவியலாளர்களே இருக்கிறார்கள்.

பின் எப்படி தாய்-சேய் இறப்பு விகிதம் குறையும் என எதிர்பார்க்கிறீர்கள்?

இது பணம் தொடர்பான பிரச்சினையே அல்ல. இதற்கு எந்த விதமானக் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளும் அவசியமில்லை. இதற்குத் தேவையானதெல்லாம்: இந்த நாடு மருத்துவ, செவிலிய, துணை மருத்துவக் கல்வியை விடுவிக்க வேண்டும்.

♦♦♦

ஆப்ஸ்டெட்ரிசியன்களுக்கும் கைனகாலஜிஸ்ட்களுக்கும் உள்ள வேறுபாடு: கர்ப்பமான நாள் முதல் பிரசவத்திற்கு முன்பு வரை கர்ப்பிணி, கைனகாலஜிஸ்டகளின் பொறுப்பில் இருப்பார். பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு முதல் மற்றும் பிரசவம், பிரசவத்திற்குப் பின்பான தாய்-சேய் நலம் அனைத்தும் ஆப்ஸ்டெட்ரிசயன்கள் பொறுப்பு. கைனகாலஜிஸ்ட்கள் பிரசவம் பார்ப்பதில்லை. ஆப்ஸ்டெட்ரிசியன்களே பிரசவம் பார்ப்பார்கள்.

பி.கு: 1
இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்திய மருத்துவக் கல்வி கட்டமைப்பு குறித்து ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியது இது. தற்போதைய ரஷ்ய–உக்ரைன் போரில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கும் சூழலில் மிக முக்கியமான ஒன்றாகக் கருத வேண்டியிருக்கிறது.

தற்போதைய சூழலில் இத்தகைய கேள்விகளை நாம் அனைவருமே சேர்ந்து எழுப்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்து, நேரம் செலவழித்து காணொளியை மொழி பெயர்த்திருக்கிறேன். தேவி ஷெட்டி பிரிவிலஜ்ட் சமூகம் கேள்வியெழுப்ப வேண்டும் என்கிறார். நீட்டை ஆதரிக்கும் அவர்களிடம் நாம் தான் இக்கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. நீங்கள் சந்திக்கும், எதிர்கொள்ளும் உயரடுக்கு மக்களிடம் கேள்விகளை எழுப்புங்கள். அரசுப் பிரதிநிதிகளிடமும் நாம் இந்தக் கேள்விகளை கேட்கலாம்.

பி.கு.2: மருத்துவர் தேவி ஷெட்டி பேசிய காணொளி கீழே லிங்க்…

நன்றி:
Anitha N Jayaraman
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here