கோகுல்ராஜின் ஆணவக் கொலை வழக்கு – சில குறிப்புகள்.


“எல்லாச் சமூகத் தீமைகளும் கேடுகளும் சமயத்தை ஆதாரமாகக் கொண்டவை.”

                                           – டாக்டர் அம்பேத்கர்

கோகுல்ராஜின் தலை துண்டிக்கப்பட்டு உடல் தண்டவாளத்தில் வீசப்பட்டது. அவனது தலை மிகக் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டது. அவன் ஒரு பொறியியல் பட்டதாரி. 21 வயது இளைஞன்.

1) ஜூன் 23, 2015 திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரிஸ்வரர் கோயிலில் கோகுல்ராஜ் அவனது பெண் தோழியுடன் இருந்தபோது கடத்தி சென்றார்கள். அடுத்த நாள் கொலை செய்யப்படுகிறான்.

2) கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொண்டதாகக் சமூக வலைதளத்தில் பரவியது. கோகுல்ராஜ் தாயார் சித்ரா புகார் ஜூன் 23 ஆம் தேதியே அளித்தார்.

3) பிறகு சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்தார்.

4) கோகுல்ராஜின் உடல் கூறாய்வில் தனியார் மருத்துவரும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. முடிவில் கோகுல்ராஜ் மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது.

5) பிறகு சிறப்பு வழக்கறிஞராக நியிமிக்கப்பட்ட ப.ப. மோகன் இந்த வழக்கை ஏற்று நடத்துகிறார்.

6) குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என்று
நீதிபதி T.சம்பத்குமார் இன்று அறிவித்தார்.

7) தண்டனை விவரங்கள் 8.3.2022 வெளியிடப்படும் மதுரை சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழ் நாட்டில் சாதி கலவரங்கள், சாதி ஆணவக்கொலைகள் “சாதி தூய்மை” என்கிற பெயரில் மிக சாதாரணமாக நடைபெறுகின்றன. சாதி ஆணவக்கொலைகள் என்கிற மிகக் கொடிய செயலைத் தடுக்க ஆணவக்கொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இங்கு இரண்டு விஷயங்கள் வரலாற்று ரீதியாகக் குறிப்பிட வேண்டியுள்ளது. ஒன்று ஆணவக்கொலை மற்றொன்று சமூக அநீதி ஒழிப்புச் சட்டங்கள்.

மனுதர்மம் ஆணவக்கொலையும்

சவர்ண இந்துகளின் பெண்களை ஒரு சூத்திரன் திருமணம் செய்து கொண்டால் அவனது உறுப்பை இழத்தல் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்தல் வேண்டும் என்று மனு சட்டம் குறிப்பிடுகிறது ( மனு VIII.374)

மனுதர்மத்தின் படி சாதி ஆணவக்கொலை என்பது இங்குதான் பிறக்கிறது. ஒரு சூத்திரன் சவர்ண இந்துகளின் பெண்ணை திருமணம் செய்யும் அந்தச் சூத்திரனின் உறுப்பு இரயில்வே தண்டவாளத்தில் நடுவை வீசப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடப்பதே தலைகீழானது. விசித்திரமானது.

ஒரு சூத்திரனுக்கு இந்து சமுகத்தில் மிக மோசமான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் அந்த தண்டனைகள் அனைத்தையும் சூத்திரர்கள் தலித்துகளின் மீது செயல்படுத்தி பார்க்கிறான்.

ஒரு அமைப்பில் பாதிக்கப்பட்ட ஒருவரை, அதே அமைப்பில் பாதிக்கப்பட்ட மற்றொருவர் மிகக்கொடூரமாக தண்டிப்பது என்பது எந்த வகையான அறம்? இந்த விசித்திரமான கேள்விக்கு அம்பேத்கர் முன்வைக்கும் வாதத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

“சூத்திரர்களும், குற்றப் பரம்பரை பழங்குடிகளும், பூர்வ பழங்குடிகளும் பிராமணர்களிடம் காட்டும் பகைமையை விட அதிகமாக தீண்டப்படாதவர்களிடம் பகைமை காட்டுகிறார்கள். உண்மையில் இந்து சமூக முறைமையின் மீது தீண்டப்படாதவர்கள் தொடுக்கும் தாக்குதலை முறியடிக்கும் போலிஸ் படையாக செயல்படுபவர்கள் சூத்திரர்களே.இது ஒரு விசித்திரமான நிலைமை.ஆனால் உண்மை. நிறுவப்பட்ட முறைமையின் விதிகளையும் கட்டுபாடுகளையும் தீண்டப்படாதவர்கள் மீறினால், அவர்கள் மீது பல கொடுமைகள் இழைப்பது சூத்திரர்கள்” என்கிறார் அம்பேத்கர். (தொ-9, 175)

படிநிலைப்படுத்தப்பட்ட அசமத்துவம் கொண்ட இந்து சமயம் தான் இதற்கான மூல காரணம் ஆகும்.

இரண்டாவது விஷயம் மிக முக்கியமானது
அதாவது சமூக தீங்கினை ஒழித்தல் தொடர்பானது. அம்பேத்கர் காலனிய அரசை நோக்கி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். அதாவது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் 150 ஆண்டுகால ஆட்சிகாலத்தில் சமுக மேம்பாட்டிற்கான சட்டம் அதாவது சமூக தீங்கினை ஒழிப்பதற்கான சட்டங்கள் வெறும் ஆறு மட்டுமே இயற்றப்பட்டன. சதி, குழந்தைகள் உயிர்ப்பலி,சாதி தகுதியின்மைச் சட்டம், விதவை திருமணம் சட்டம் , பாலுறவுக்கான வயது சட்டம் போன்ற ஆறு சட்டங்களே அவை.
பெரும்பான்மை இந்து- சாதிய சமூகத்திற்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் பிரிட்டிஷ் காலனி அரசாங்கம் மிக மோசமாக நடந்து கொண்டதை அம்பேத்கர் கண்டித்தார்.

“சமூதி நீதி” என்று பெருமை பேசிக்கொள்ளும் தமிழகத்தில் எத்தனை சமூக தீங்கினை ஒழிப்பதற்கான சட்டங்கள் 55 ஆண்டுகால திராவிட அரசுகள் இயற்றின? அம்பேத்கர் எழுப்பிய அதே கேள்வியை இங்கு எழுப்ப வேண்டியுள்ளது.

உண்மையில் வெட்கி கூனி குறுக வேண்டியது விஷயம் இது. ஆவணக் கொலைக்கு எதிரான மிக கடுமையான சட்டத்தை இயற்றுவது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும்.

நன்றி:
சிவா சத்யா.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here