நான் செய்த ”குற்றம்”தான் என்ன? ஃபாதர் ஸ்டான் சாமி!

கடந்த முப்பதாண்டுகளாக நான் ஆதிவாசிகளுடனும், சுய மரியாதையுடன் கூடிய ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்காக அவர்கள் நடத்தும் போராட்டங்களோடும் என்னை அடையாளப் படுத்திக் கொள்ள நான் முயற்சித்து வருகிறேன். ஒரு எழுத்தாளன் எனும் வகையில் நான் அம்மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைப் பகுத்தாய்வு செய்ய முயற்சிக்கிறேன். இந்த நடைமுறையின் ஊடாக அரசு அறிவிக்கும் பல கொள்கைகள் இயற்றிய சட்டங்கள் ஆகியவற்றுடன் நான் பொருந்தாமல் போகும் போது அவற்றுக்கு நான் என் எதிர்ப்பையும் மாற்றுக் கருத்தையும் தெளிவாகத் தெரிவித்துள்ளேன். அரசும் ஆளும் வர்க்கமும் இப்படி மேற்கொண்ட நடவடிக்கைகளின் நியாயங்களையும், இருக்கும் சட்டங்களுக்கும் நீதி நெறிக்கும் அவை எதிராக உள்ளதையும், கேள்விக்குள்ளாக்கி வந்துள்ளேன்.

1.அரசியல் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை மிகத் தெளிவாக ’பழங்குடி ஆலோசனைக் குழு’ (Tribal Advisory Committee – TAC) ஒன்றை அமைக்க வேண்டும் எனக் கூறுகிறது. அது மட்டுமல்ல அந்தக் குழு முழுவதும் ஆதிவாசிகளாலேயே நிரப்பப்பட வேண்டும் எனவும் வரையறுக்கிறது [Indian Constitution Article 244 (1)]. ஆதிவாசிகளின் பாதுகாப்பு, நல வாழ்வு, வளர்ச்சி. நீதி நெறி முதலானவை தொடர்பான எந்த ஒரு பிரச்சினை குறித்தும் அக்குழுவினர் மாநில ஆளுநருக்கு அறிவுரை வழங்குவார்கள். ஆனால் இவை எல்லாம் செயல்படுத்தப் படாதபோது அதை நான் சுட்டிக் காட்டிக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளேன்

2. அட்டவணைப் பகுதிகளில் பஞ்சாயத்துகளை விரிவாக்கம் செய்வது தொடர்பான சட்டம் (Panchayat Extension to Scheduled Aras Act – [PESA], 1996 [No:40 of 1996) முக்கியமான ஒன்று. கிராம சபைகள் மூலமாகத் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ளும் ஒரு வளமான சமூக, மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியம் இந்தியாவில் உள்ள ஆதிவாசிச் சமூகங்கள் மத்தியில் இருந்தது என்கிற உண்மையை முதன் முதலாக ஏற்றுக் கொண்ட சட்டம் அது. ஆனால் ஏன் அது முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு விட்டது என்பதையும் நான் கேள்விக்குள்ளாக்குகிறேன்

3.உச்ச நீதிமன்றத்தின் ‘சமந்தா தீர்ப்பு’ [Samantha Judgement-1997, SC [Civil Appeal Nos: 4601-2 of 1997] மிக முக்கியமான ஒன்று… தங்களின் நிலங்களில் பொதிந்து கிடக்கும் கனிமங்களைத் தோண்டி எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்திப் பொருளாதார ரீதியாகத் தம்மை வளர்த்துக் கொள்ள சில குறிப்பிடத்தக்க பாதுகாப்புகளுக்கு வழி வகுக்கக் கூடிய ஒரு நல்ல தீர்ப்பு அது. ஆனால் அமுல்படுத்தப்படிவதில்லை. இது குறித்த என் ஏமாற்றத்தை நான் வெளிப்படுத்துகிறேன்.

4. பாரம்பரியமாக வனங்களில் வசிக்கும் பழங்குடிகள் மற்றும் இதர மக்களுக்குக் காலம் காலமாகம் இழைக்கப்பட்டு வந்த அநீதிக்கு ஒரு முடிவுகட்டுவதற்கு வழிவகுக்கும் என நம்பிய சட்டம்தான் ”2006 வன உரிமைச் சட்டம்” (Forest Rights Act, 2006: [Act of Parliament]. இது வேண்டா வெறுப்புடன் அரை குறையாக அமுல்படுத்துவதை எதிர்த்து நான் தொண்டை வரளக் கத்துகிறேன்.

5.”நிலத்துக்கு யார் உரிமையாளரோ அவர்கள்தான் அந்த நிலத்தின் கீழே அமிழ்ந்து கிடக்கும் கனிம வளங்களுக்கும் சொந்தக் காரர்கள்” எனும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் [SC: Civil Appeal No : 4549 of 2000] செயல்படுத்த ஏன் அரசு விருப்பம் இல்லாமல் உள்ளது என்கிற கேள்வியை நான் எழுப்புகிறேன். அது மட்டுமல்ல. தொடர்ந்து மண்ணுக்கு அடியில் புதைந்து கிடக்கும் நிலக்கரிப் பாளங்களை, அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு எந்தப் பங்கும் இல்லாதவாறு ஏலம் போடுகிறபோது அதையும் எதிர்க்கிறேன்.

6. “2003 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில்” ஜார்கண்ட் அரசு சமீபத்தில் சட்டத்திருத்தம் ஒன்றை இயற்றியுள்ளது. இதுவரைக்கும் நிலம் இப்படிக் கையகப் படுத்தப் படும்போது அந்த நிலத்தில் வாழும் சமுகங்களின் மீதான பாதிப்பு குறித்த கணிப்பு” (Social Impact Assessment) மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது. அது இந்தத் திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இது குறித்த என் ஐயத்தையும் அச்சத்தையும் நான் வெளிப்படுத்தி உள்ளேன். இது ஆதிவாசி மக்களுக்கு இறுதிச் சங்கு ஊதுவதாகவே ஒலிக்கிறது என்பதைச் சொல்லியுள்ளேன். அது மட்டுமல்ல விவசாய நிலங்கள் மற்றும் இரு போகம், முப்போகம் விளையும் நிலங்கள் எல்லாவற்றையும் விவசாயமல்லாத வேறு உபயோகங்களுக்காக வாரி வழங்கவும் இது வழி வகுக்கிறது.

7. “நில வங்கி” (Land Bank) எனும் கருத்தாக்கத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஆதிவாசிகளை ஒழித்துக் கட்டுவதற்கான சமீபத்திய சதியாகவே நான் அதைப் பார்க்கிறேன். இது எல்லா பொது நிலங்களையும் {“gair – majurwa” (“commons”)-} அரசு நிலங்களாக அறிவிக்கிறது. இதுவும் மிகவும் ஆபத்தானது. பொது நிலங்கள் என்கிறபோது அதை அரசு தம் விருப்பப்படி கார்ப்பரேட்களுக்கோ இல்லை வேறு யாருக்குமோ அள்ளிக் கொடுக்க முடியாது. அரசு நிலம் என அறிவிக்கப்பட்டதால் அவற்றை கார்ப்பரேட்களின் சிறிய, பெரிய தொழில் முயற்சிகளுக்கு விருப்பம்போல வாரி வழங்கும் நிலை ஏற்படுகிறது.

8. இப்படி மக்கள் அநீதியாக வெளியேற்றப்படுவது, அநீதியாக நிலங்களைப் பறிப்பது, ஆதிவாசிகளை அவர்களின் நிலங்களிலிருந்து அநியாயமாக வெளியேற்றுவது ஆகியவற்றைக் கேள்வி கேட்கும் இளம் ஆதிவாசிகளையும் மூலவாசிகளியும் “நக்சல்கள்” என முத்திரை குத்தி கண்டா கண்டபடிக் கைது செய்வதை நான் எதிர்க்கிறேன். அவற்றுக்கு எதிராகப் பொதுநல வழக்குகள் தொடர்கிறேன்… ஜார்கண்ட் அரசுக்கு எதிராக நான் உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள பொது நல வழக்கில் வைக்கும் கோரிக்கைகள் இவைதான் (i). விசாரணை தொடங்காமல் கைதிகளைப் பல காலம் சிறையில் முடக்காமல் அவர்களுக்குப் பிணையில் விடுதலை அளிக்க வேண்டும். இவர்கள் (under trial prisoners- UTP) எல்லோரும் சொந்தப் பத்திரத்தில் (personal bond) விடுதலை செய்யப்பட்ட வேண்டும். (ii). விசாரணை தொடங்கினால் அதை இழுத்தடிக்காமல் விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் உறுதியாகப் பெரும்பான்மையினர் விடுதலை செய்யப்படுவார்கள். (iii) நீதித்துறை ஆணையம் ஒன்றைஅமைத்து (Judicial commission) ஏன் விசாரணை தொடங்கினால் அது விரைவாக முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். (iv) விசாரணைக் கைதிகள் எல்லோர் குறித்தும் மனுதாரர்கள் கேட்கும் தேவையான விவரங்களைக் கால தாமதம் இல்லாமல் கொடுங்கள். நான் வழக்கு தொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் விசாரணைக் கைதிகள் குறித்து நான் கோரிய விவரங்கள் எதுவும் இன்னும் எனக்குக் கொடுக்கப்பட வில்லை. அரசு என்னை ஏன் அதன் வழிக்கு வராமல் (சிறையில்) முடக்க விரும்புகிறது என்பதற்கு இதுவே காரணம் என நான் கருதுகிறேன். இப்படியான (கொடுஞ் சட்டங்களின் ஊடாக) பல வழக்குகளில் என்னைச் சிக்க வைத்து இந்த எளிய அப்பாவி மக்களுக்கு ஆதரவாக நான் மேற்கொண்டுள்ள இந்தச் சட்ட முயற்சிகளை முடக்குவதுதான் அவர்களின் நோக்கம்.

ஸ்டேன் சாமி
ஜார்கண்ட்
அக்டோபர் 2020
நன்றி: அ.மார்க்ஸ் முகநூல் பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here