சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் அவர்கள்  ‘புனித நீராடல்’ எனக் கருதும் பம்பை ஆற்றில் குளித்துவிட்டு தான் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.  அப்படிப்பட்ட பம்பை ஆற்றில் தான் ஈ.கோலி எனும் வைரஸ் இருப்பதை கண்டறிந்துள்ளார்கள்.

பம்பை நதியில் இதுபோன்று ஈகோலி பாக்டீரியா பெருக்கம் ஏற்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2009 , 2017, 2018 ஆம் ஆண்டுகளில் இதேபோன்று ஈகோலி பாக்டீரியா பெருக்கம் உண்டாகி இருக்கிறது. குறிப்பாக இதேபோன்று ஐய்யப்பன் கோவில் சீசன் சமயத்திலேயே அதிகமாகி இருக்கிறது.

இந்த வைரஸ் எப்படி உருவாகியிருக்கும், இதனால் பாதிப்பு என்ன, யாருடைய தவறு என்பது குறித்து எழுத்தாளர் Dr. மயிலன் ஜி சின்னப்பன் அவர்கள் எழுதிய முகநூல் பதிவை வெளியிடுகிறோம்.

000

பரிமலையின் பம்பையாற்றில் ஈ.கோலை எனும் நச்சு பாக்ட்டீரியாவின் அளவு அதிகமாக இருப்பதாகவும் அதைச் சுத்தப்படுத்தும்வரை பொதுப் பயன்பாட்டிற்கு ஆறு உகந்ததல்ல என்றும் கேரள அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்தத் கிருமி வானத்திலிருந்து குதித்ததா என்றா, அதுதான் இல்லை. மனித மலத்தில் மலிந்திருக்கும் பூதம் அது. கரையோரங்களில் மலம் கழிப்பதற்குக் கூச்சப்பட்டுக்கொண்டு மிகவும் மறைவாக ஆற்றுக்குள்ளேயே நேரடியாக கழிக்கும் விசேஷ மனிதர்கள் பெருகியிருக்கிறார்கள். கமுக்கமாகக் காரியத்தை முடித்துவிட்டு சுத்தபத்தமாக கரையேறி, பட்டையையும் கொட்டையையும் போட்டுக்கொண்டு விறுவிறுவென சரணத்தில் ஐக்கியமாகிறார்களாம். மாலை போடும் காலத்தின் கட்டுப்பாடுகளில் புழுங்கும் மனம், இப்படியான மீறல்களை வலிந்து செய்யத் தூண்டும். அவர்கள் வாகனம் ஓட்டும் வேகமும் அச்சமயங்களில் விபரீதமாகவே இருப்பதைக் கவனிக்கலாம்.

அதே சமயம் இதை வெறுமனே மீறலாக மட்டும் சுருக்கவேண்டியதில்லை. இயல்பாகவே மனிதனுக்கு இந்தப் பிறழ்வுகுணம் இருக்கிறது. பொதுச் சொத்தாக இருக்கும் எதன் மீதும் தன்னாலான சிறு சிராய்ப்பையேனும் உண்டாக்கத் துடிக்கும் பிரேமை அது. நீர்நிலைகளில் குளிப்பவர்களுக்கு அந்த நீரோடு தங்கள் புனித சிறுநீரை கலக்கும் மனோபாவம் இயல்பாகவே இருக்கிறது. இதற்கும் கல்வி / பொருளாதார மனநிலைகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஐந்து நட்சத்திர விடுதியின் நீச்சல் குளத்தில் சோதனையிட்டதில் gallon கணக்கில் சிறுநீரைப் பிரித்தெடுத்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய குளத்தை வெறும் நானூறு மில்லி அமிர்தமா கெடுத்துவிடப்போகிறது என்று உள்ளே உச்சா போகும் அத்தனை பேரும் rational’ஆக யோசிப்பதுதான் பிரச்சனை.

அந்த dilution மேலிருக்கும் அதீத நம்பிக்கையில்தான் இன்றும் ஆற்றிலும் குளத்திலும் கடலிலும் நாம் சங்கோஜமின்றி நீராடிக்கொண்டிருக்கிறோம். கூவம் கலக்கும் சில நூறு மீட்டர்களுக்கு இந்தப் பக்கம் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கிறோம். ‘கூவமே கலக்குது, கூடுதலா கொஞ்சம் நாம விட்டா என்னவாம்’ என அறச்சீற்ற சுடுநீரைப் பிஸ்ஸெனக் கலக்கிறோம். மனித மனத்தின் எதார்த்தம் இந்த அளவில்தான் செயல்பட முடியும். பண்பட்டதான தோற்றத்தின் மேற்பூச்சுக்கு கீழேயிருக்கும் இப்படியான ஆதி குணங்கள் மறைவது எளிதில் சாத்தியமில்லை. மனிதக் குலத்தின் இருப்புக்கு அவசியப்படும் கணக்கற்ற பாவ மன்னிப்புகளுள் இதற்கும் ஒன்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: புதுக்கோட்டை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலந்த ஆதிக்க சாதியின் கொடூரம்! தொடரும் மக்கள் அதிகாரத்தின் போராட்டம்

அதே மனத்தில் எதார்த்தத்தை விஞ்சி பித்தேறி சீழ்பிடிக்கும்போது அது மெனக்கெட்டு ஏணியேறிப் போய் தண்ணீரில் மலம் கழிக்கச்சொல்கிறது. வெறுமனே குளிக்கும் தண்ணீர் அல்ல; ஒரு பகுதியின் குழந்தைகள் உட்பட அனைவரும் குடிக்கும் நீர். தனித்தத் தொட்டி என்பதே ஒரு பிரம்மாண்ட இரண்டாம் குவளைதான் என்பதையும் அதில் மலத்தை கலப்பதென்பது நேரடியாக வாயில் நரகலைத் திணிப்பதுதான் என்பதையும் விளங்கிக்கொள்வதற்கு அத்தனை சிரமப்பட வேண்டியதில்லை. ஆதிதிராவிட மக்கள் இப்படியொரு தனித் தண்ணீர்தொட்டியோடு segregate ஆகியிருக்கும் படிநிலையிலிருந்தே இந்தத் துயரத்தை அணுகவேண்டும்.

கற்பனைக்கு எட்டாத இந்த உச்சபட்ச வக்கிரச் சம்பவத்தைத் தொடந்து இறையூர் வேங்கைவயலில் நிகழும் நாடகங்கள் இன்னமுமே அவலமானவை. விசாரிக்க வந்தவர்கள் மலத்தைக் கண்டுபிடித்த சாட்சிகளையே குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்வதும், சாமி சொல்லிடுச்சு உங்கத் தெரு ஆளுதான் வம்புக்காகக் கலந்தது என மிரட்டுவதுமாக மாறி மாறி நடந்த நெருக்கடிகளைத் தாண்டி இப்போது வழக்கு குற்றப்புலனாய்வுத் துறைக்கு போயிருக்கிறது. இன்றோடு இருபது நாட்களாகியும் சென்னையை விட சற்றே பெரிய அந்தக் கிராமத்திலிருக்கும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதுபோன்ற பேரவலத்திலும்கூட சாதியை துருப்புச்சீட்டாக இப்பிரதேசத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியுமெனில், முதல்வரை ஒருவன் மேடையேறி சாதிய நய்யாண்டி செய்வதில் வியப்பதற்கு பெரிதாக ஏதுமில்லை.

நன்றி

Dr. மயிலன் ஜி சின்னப்பன்
எழுத்தாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here