அரசுப்பள்ளி ஆசிரியர்களே திருந்துங்கள்!

பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசியர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஒரு சிறு பிரிவினர்தான் தங்களிடம் படிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உழைக்கிறார்கள்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக அரசுப்பள்ளிகள் மூடிக் கிடப்பதால் அரசுப்பள்ளி ஆசியர்களுக்கு ஒரு வேலையும் இல்லை. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வசதியும் இல்லை என்பதால் அதுவும் பெரிதாக எடுபடாத நிலையில் அந்த வேலையும் மிச்சம்.

இப்போதுதான் 9,10,11,12-ஆம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறந்து வேலைக்குச் செல்கிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.
இந்நிலையில் விழுப்புரம் கண்டமங்கலம் வள்ளலார் அரசுப்பள்ளி வேதியியல் அறையை சுத்தம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரும், பிற ஆசிரியர்களும் அதை சுத்தம் செய்யாமல் படிக்கும் குழந்தைகளை அமில அறையை சுத்தம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.

13/09/2021 காலை 9 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 1.பாமா 2.நித்தியா 3.ஜனனி 4.ஆதித்யா ஆகிய 4 மாணவிகளை அவசர அவசரமாக பொருட்களை அகற்ற கூறியுள்ளனர். வேதியியல் பொருட்கள் பற்றி சிறிதும் அறியாத மாணவிகளின் மீது பழுதடைந்த வேதியியல் அமிலம் பட்டு அதிகப்படியான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதில் ஒரு பிள்ளையின் முகம் சிதைந்து கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது.

விழுப்புரம்: மாணவிகள் மீது ஆசிட் கொட்டிய சம்பவம்- பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்
ஆசிட் கொட்டியதில் பாதிக்கப்பட்ட மாணவி!

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசுப்பள்ளி ஆசியர்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வேலைக்காரர்கள் போல நடத்தக் கூடாது. காரணம் நிச்சயம் இந்த அமில அறையை சுத்தம் செய்யும் பணிக்கு நீங்கள் பெற்றெடுத்த குழந்தையை பயன்படுத்த மாட்டீர்கள். அதன் ஆபத்து தெரியும். ஆனால், அடுத்தவர் வீட்டுப் பிள்ளைகள் என்பதால் இந்த கொடுஞ் செயலை செய்திருக்கின்றீர்கள்.
இந்த கொடுங்குற்றத்தில் ஈடுபட்ட வள்ளலார் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் உட்பட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் எதிர்கால நலன் கருதி 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அத்தொகை அப்பள்ளியில் வேலை பார்க்கும் தலைமை ஆசிரியர், வகுப்பாசியர்களிடம் இருந்து நட்ட ஈடாக பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அரசுப்பள்ளி ஆசிரியர்களே திருந்துங்கள்.

நன்றி: அருள் எழிலன்.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here