ஹிஜாப் பிரச்சனை அல்ல !
இந்தியக் கொடியை_நீக்கிவிட்டு_காவிக்கொடியை_ஏற்றுவதே_நோக்கம்!
அவர்களுக்கு இந்துராஷ்டிரமே_இலக்கு!
கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காவிக் கொடியேந்திய கல்லூரி மாணவர்கள், அங்கிருந்த கம்பத்தில் இந்தியக் கொடியை அகற்றி காவிக் கொடியை ஏற்றினார்கள். இது ஏதோ நடந்துவிட்டது என்று கருதக்கூடாது. திட்டமிட்டே இதை செய்கிறார்கள்.
கர்நாடகாவில் பல பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் தற்போது ஹிஜாப் விவகாரம் பெரும் போராட்டத்துக்கும், வன்முறைக்கும் வித்திட்டுள்ளது. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என கல்லூரி நிர்வாகமும், கர்நாடக பாஜக அரசும் வலியுறுத்தியுள்ளன. ஹிஜாப் அணிந்து மாணவிகள் வரக்கூடாது, அது இந்தியாவின் ஒற்றுமையை பாதிக்கிறது என்று கூறிக்கொண்டு காவிக்கொடி ஏந்தி ஒருதரப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகாவின் ஷிவ்மொக்கா மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுக் கல்லூரியில் ஹிஜாப் பிரச்னையை முன்வைத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் காவித் துண்டுகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொடிமரத்தில் காவி கொடியை ஏற்றி ஆர்ப்பரித்தனர்.
இந்தியா விடுதலை அடைந்து 52 ஆண்டுகள் வரை மூவண்ணக் கொடியை ஏற்காத ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் 2002 ஆம் ஆண்டில் தான் இந்தியக்கொடியை ஏற்றனர். ஆனால் அவர்களுடைய இலக்கு இந்தியா அல்ல. இந்து ராஷ்டிரத்தைப் படைப்பதும், மூவண்ணக் கொடியை தொலைத்துவிட்டு காவிக் கொடியை நிரந்தரமாக ஏற்றுவதும்தான். பழைய தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில், வர்ணாசிரம தர்ம சமூகத்தை மீண்டும் கட்டமைத்து, ஓர் இந்துராஷ்டிரத்தைப் படைத்து விட வேண்டும் என்பதுதான். நூறு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி, முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் இந்துக்களின் எதிரிகளாகக் காட்டி, இந்துக்களைத் திரட்டி, வருணாசிரம அடிப்படையிலான பார்ப்பனராஜ்யத்தைப் படைத்து விடுவது என்று தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.
ஒரு பயங்கரவாத சூழலைப் பராமரிப்பது என்பது அதனுடைய உத்தி. பசு பயங்கரவாதம், லவ் ஜிகாத், மதவெறித் தாக்குதல், பிள்ளையார் ஊர்வலம், ரதயாத்திரை, மசூதி உடைப்பு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை பயன்படுத்தி மதச் சிறுபான்மையினரின் குடியுரிமையை அழிப்பது, திட்டமிட்ட படுகொலைகள் என்று தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு, இப்போது இஸ்லாமியப் பெண்களின் உடையில் பிரச்சனையை உருவாக்குகிறது.
படிக்க:
♦ கர்நாடகாவை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பு! || பு.ஜ.தொ.மு. – ஆர்ப்பாட்டம்
ஆர்எஸ்எஸ் வகையறாக்களில் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத பலர் புர்கா, ஹிஜாப் அணிவது தேவையில்லை என்றும், அது குறித்து சர்ச்சை தேவையில்லை என்றும் கருத்து பதிவிடுகிறார்கள். ஹிஜாப், புர்க்காவோடு தொடர்பில்லாத இவர்களுக்கே சொந்த கருத்து இருக்கும் போது, ஹிஜாப்அணிவதற்கான தேவை இருப்பதாகக் கருதக்கூடிய இஸ்லாமியப் பெண்களின் சுய விருப்பத்திற்கு முடிவை விடுவதுதான் சனநாயகம். தன் உடையைத் தானே தீர்மானிப்பது என்பது அடிப்படை உரிமை; எந்த வகை உடையை உடுத்த வேண்டும் என்று, அதுவும் பெண்கள் விடயத்தில், வேறு எவரும் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. ஆபாசமான உடை அணிந்து வந்தால் அதை கட்டுப்படுத்துவதில் ஒரு நியாயமிருக்கிறது. தன் உடலை மறைக்கக் கூடிய, பாதுகாப்பான உடை அணிய பெண்கள் விரும்பும்போது, அதை கைவிடச் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.
2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், உடுப்பியில் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹிஜாப் அணிந்து வந்த மாணவ மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்காததால் சர்ச்சை தொடங்கியது. இதைத்தொடர்ந்து அந்த மாணவிகள் போராடத் தொடங்கினார்கள். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்கு வருவதில் பெரும் தடை இருக்கிறது. இதுவரை ஹிஜாப் அணிந்து பழகிய அந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் இருக்க நேர்ந்தால், அதில் ஏற்படும் வலி எத்தகையது என்பதைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெளிவாகப் பேசி இருக்கிறார்.
ஹிஜாப் உடையா அல்லது கல்லூரிப் படிப்பா என்று இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலுக்கு இஸ்லாமியப் பெண்குழந்தைகளைத் துரத்துவது நியாயமில்லை. பெற்றோர்கள் மற்றும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப்பைக் கைவிட முடியாது என்ற உள நிலையைப் பெற்றுள்ளனர். அவர்கள் இஸ்லாமியப் பண்பாட்டின் ஒரு கூறாக நீண்ட காலமாக அதை அணிந்து வந்திருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபூரில் உள்ள பந்தர்கர் பி யு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு இஸ்லாமிய பெண்களும் வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்படாத நிலையில், அவர்கள் போராட்டத்தை தொடங்கினர். ஹிஜாப் அணிவது எங்களுக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமை என்று பேசினர்.
ஹிஜாப் அணிவது தங்களுடைய உரிமை என்று, பள்ளி வகுப்பறையில் ஹிஜாப் அணிய உரிமை கோரி பதின்ம வயது பெண்கள் 6 பேரும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். வாயிற்படி களிலும் மாடிப் படிகளிலும் உட்கார்ந்து கிடந்தனர். பிப்ரவரி 17ஆம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்குகிறது; இரண்டு மாதங்களில் தேர்வு நடக்க இருக்கிறது என்ற நிலையில் பதற்றத்தோடு வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.
படிக்க:
♦ பள்ளிகளில் ஹிஜாப் அணிவது குற்றமா?
மாணவிகள் போராடும்போது போட்டியாக காவித் துண்டு அணிந்து ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள், மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கி கலவரம் செய்கிறார்கள்.
தொடர்ந்து, சிக்மகளூர், விஜயபுரா, சிமோகா, பத்ராவதி கல்லூரிகளிலும் கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிய தடை விதித்தது. மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் இந்துமதவெறி அமைப்பினர் மாணவர்களுக்குக் காவித்துண்டு கட்டி விட்டு, கையில் காவிக் கொடியை கொடுத்து, இஸ்லாமியப் பெண்களுக்கு எதிராக “ஜெய் ஸ்ரீராம்” முழக்கம் போடவைத்து, கலவரச் சூழலை உருவாக்கினர்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவி துண்டு அணிந்து மாணவர்களும் மாணவர்கள் அல்லாதவர்களும் கலவரம் செய்தார்கள்.
நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டிய கர்நாடக பா.ஜ.க. அரசு இந்துத்துவ மதவெறியோடு பேசுகிறது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது தவறு என்று கூறுகிறது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவது “மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவித்து, மாணவ சமுதாயத்தின் ஒழுக்கத்தை சீரழிக்கும்” என்று கர்நாடக பாஜக அரசு கூறுகிறது.
பிப்ரவரி 5ஆம் தேதி, கர்நாடக கல்வித்துறை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. கல்லூரி வளர்ச்சிக் குழு வரையறுத்தபடி, உடை விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியது. அப்படி ஒரு விதிமுறை இல்லாவிட்டால், சமத்துவம், ஒருமைப்பாடு, சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றைப் பாதிக்காத உடைகளை மாணவர்கள் அணிய வேண்டும் என்றது. பாஜக.வின் கர்நாடக அரசின் பார்வையில் ஹிஜாப் அணிவது நாட்டின் சமத்துவத்தையும், ஒருமைப்பாட்டையும் பாதித்து, சட்ட- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடும்!
எவருக்கும் பாதிப்பில்லாமல் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு, கல்லூரிக்கு வருவதில் என்ன பிரச்சனை ஏற்படும்? அரசு இதில் தலையிட முடியுமா? நீண்டகாலமாக இஸ்லாமியப் பண்பாட்டின் ஒரு கூறாக இருந்துவருகிறது ஹிஜாப் மற்றும் புர்கா அணிவது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவைதான் என்ன? கூடுதலாகக் கூறினால், இஸ்லாமியப் பெண்களின் தலை மற்றும் கழுத்துப் பகுதியை மறைக்க கூடிய மிகப் பாதுகாப்பான உடையாக அதை இஸ்லாமியப் பெண்கள் உணர்கிறார்கள். அது அவர்களுடைய கல்வியை மற்றும் பணித்திறனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
போராடிய இஸ்லாமிய மாணவிகளை அச்சுறுத்தும் வேலைகள் இப்போது தொடர்கின்றன. போராட்டம் நடத்திய முஸ்லிம் பெண்களின் முகவரி, அவர்களின் பதிவு எண்கள், தொலைபேசி எண்கள் போன்றவை பகிரியில் வெளியிடப்பட்டுள்ளதன் நோக்கம் என்ன? ஆலியா ஆஸாடி என்ற பெண்ணுக்கு வசைபாடும் தொலைபேசிகள் வந்தவண்ணம் இருக்கின்றன. வீட்டு முகவரி வாட்ஸ் ஆப்பில் வெளியிடப்பட்டுள்ளது. உடுப்பி அரசுப் பல்கலைக்கழகப் படிப்புக்கு முந்தைய (Pre University) கல்வி அளிக்கும் கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் அளித்த விண்ணப்பங்களில் இருக்கும் அத்தனை தகவல்களும் இப்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களிலிருந்து தகவல்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அக்கல்லூரி வளர்ச்சி குழுவின் தலைவர் பா.ஜ.க வின் எம்எல்ஏ ரகுபதி பட். டிசம்பர் 2021-லிருந்து முஸ்லிம் மாணவிகளை ஹிஜாபுடன் உள்ளே அனுமதிப்பதில்லை என்று பிரச்சனை செய்து வருகிறவர். கல்லூரி விண்ணப்பத்திலிருந்த தகவல்களை, அந்த ஆவணங்களை பாஜக எம்எல்ஏ பயன்படுத்தியிருக்கிறார். இது ஒரு கிரிமினல் குற்றம். மற்றொரு மாணவி ஹஸ்ரா ஷிபாவுக்கும் இதேபோல நிகழ்ந்துள்ளது. அவரும் அச்சுறுத்தப்படுகிறார். இந்த எம்எல்ஏ காவி துண்டுப் போராட்டத்தை ஆதரிக்கிறார். “இப்போது எங்கள் வீடும் பாதுகாப்பாக இல்லை” என்கிறார் ஷிபா,
100 கோழைகளும் ஒற்றை வீரப் பெண்ணும்!
நூறுபேர் “ஜெய்ஸ்ரீராம்” என்று முழக்கம் போட்டு, ஒற்றைப் பெண்ணாகக் கல்லூரிக்கு வந்த முஸ்கான் என்ற மாணவியை சூழ்ந்த போது, அவர் “அல்லாஹு அக்பர்!” என்று எதிர் முழக்கம் கொடுத்தார். அப்போது ஓர் உண்மையான பெண்ணுரிமைப் போராளியைக் காண முடிந்தது. முஸ்கான் அச்சமின்றி “அல்லாஹு அக்பர்” என்று எதிர் முழக்கம் செய்தபோது, அது “இறைவனே தலைவன்” என்ற பொருளோடு மட்டும் முழங்கப்படவில்லை. உரிமை உணர்வுடன், அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன் என்று அது அறிவித்தது. “இந்துத்துவத்தை எதிர்கொள்ள நாங்கள் தயார்” என்று அறிவித்தது. ஒற்றைப் பெண்ணாக இருந்தாலும், அங்கு வீரப்பெண் முஸ்கான் “ஹிஜாப் என் உரிமை, அல்லாஹு அக்பர்” என்று அறிவித்தார்.
ஹிஜாப் உடை 140 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. நவம்பர் 1 ஹிஜாப் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இஸ்லாமியப் பெண்கள் பல நூற்றாண்டுகளாக அணிந்து வருகிறார்கள். இஸ்லாமிய பண்பாட்டின் ஒரு கூறாக இருக்கும் ஹிஜாப் உடையை அணிந்து வந்தால், அதை எதிர்த்து “ஜெய்ஸ்ரீராம்,’ என்று கூச்சல் போடுவதன் காரணம் என்ன? ஹிஜாபுக்கு எதிராக ஸ்ரீ ராமர் நிறுத்தப்படுவதன் நோக்கம்தான் என்ன? ராமருக்கு ஹிஜாப் உடை என்பதுதான் பிரச்சனையா?
இந்து ராஜ்ஜியத்தை அமைக்க விரும்புகிறவர்கள் “ஜெய்ஸ்ரீராம்” என்றும், “பாரத மாதா கி ஜே!” என்றும் முழக்கங்களை எழுப்புகிறார்கள். இப்போது இவை பக்தியின் வெளிப்பாடு அல்ல; தேசபக்தியின் வெளிப்பாடும் அல்ல, இவை இரண்டுமே வன்முறை முழக்கங்கள், முஸ்கான் “அல்லாஹு அக்பர்” என்று குரல் எழுப்பிய பிறகு, அந்த முழக்கத்தின் பொருளே மாறிவிட்டது. அது சனநாயகத்தின் குரல். இந்துத்துவ பார்ப்பனியத்திற்கு எதிரான குரல். மனித உரிமையின் குரல். நீதிக்காகப் போராடும் ஒரு போராளியின் குரல். மதவெறி அநீதியை ஒரு காலத்திலும் ஏற்க மாட்டேன் என்ற வீர முழக்கம் அது.
படிக்க:
♦ இந்துமதமும்! இந்துத்துவாவும் ஒன்றல்ல!
பழைய வருணாசிரம கட்டமைப்புடன், இந்து சமூகம் என்ற ஏற்றத்தாழ்வு உள்ள, பார்ப்பன -சத்திரிய -வைசிய – சூத்திர- பஞ்சம பிரிவுகளை நிலைப்படுத்தக் கூடிய அமைப்பை மீட்டுருவாக்கிவிட வேண்டுமென்று பார்ப்பன மூளை பயங்கரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. இந்துத்துவத்தை அப்படியெல்லாம் இங்கே நிறுவிவிட முடியாது. இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் ஒழித்து விட்டால், மீதி உள்ளவர்கள் இந்துக்கள்; அவர்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்று இந்துத்துவ வெறியர்கள் கருதுகிறார்கள். ஆனால் “அல்லாஹு அக்பர்” என்ற அந்த முழக்கம் இப்போது இஸ்லாமியர்களின் முழக்கமாக இல்லை; இந்துத்துவத்தை எதிர்க்கக் கூடிய இந்துக்கள், இறை நம்பிக்கை இல்லாதவர்களின் முழக்கமாகவும் மாறி வருகிறது. இந்துத்துவ வெறி பிடித்த பைத்தியக்காரர்கள் தவிர, பலர் “அல்லாஹு அக்பர்” என்று எதிர் குரல் கொடுக்கிறார்கள்.
தொடரும்…
பேராசிரியர் செயராமன்
நெறியாளர்,
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்,
[…] ஹிஜாப் பிரச்சனை அல்ல ! […]