மாஸ்க்

சென்னை முழுக்க கடந்த இரண்டு மூன்று நாட்களாக காவல்துறையின் அராஜகம் சற்று அதிகமாகவே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் தெருவுக்கு தெரு நின்றுகொண்டு மாஸ்க் போடாதவர்களை விரட்டி விரட்டி பிடித்து மிரட்டுவதும், அவர்களுக்கு ஸ்பாட்டிலேயே 200 முதல் 500 வரை அபாரதம் போடுவதுமாக இருக்கிறார்கள். இத்தனை நாள் இல்லாமல் தாக்கம் குறையத்தொடங்கி இருக்கிற காலத்தில், இந்த மூன்று நாள்களாக என்ன நடந்தது என்று தெரியவில்லை இவ்வளவு காத்திரமாக நடக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

மாஸ்க் அணியாத மக்களை என்னவோ கிரிமினல்கள் கணக்காக நடத்துவதும் அவர்களிடம் தகாத முறையில் பேசுவதுமாக இருப்பது காணச்சகிக்கவில்லை. நேற்று அண்ணாநகரில் ஒருவரை பிடித்துவைத்து மிரட்டிக்கொண்டிருந்தார்கள். பழுப்பாகி போன கசங்கிய சட்டையோடும் கலைந்த தலையுமாக இருந்த அவர் கண்கலங்கி கெஞ்சிக்கொண்டிருந்தார். 200 ரூபாய எடுத்துவைச்சிட்டு கெளம்பு என போலீஸ்காரர் மிரட்ட, அந்த நபர் ‘’சார் கொரானால வருமானம் இல்லாம கஷ்டத்துல இருக்கோம், வியாபரம் பண்ணின கடையை மூடிட்டோம்… மாஸ்க் போடலைனு காசெல்லாம் கேக்கறீங்களே’’ என்று சொல்லிக்கொண்டிருந்தது என்னவோ பண்ணியது.

வண்டியில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு போகும்போது அதோடு மாஸ்க்கும் அணிந்தால் மூச்சுத்திணறி சாகவேண்டியதுதான். ஆனால் ஹெல்மெட் அணிந்தும் மாஸ்க் போடவில்லை என்றும் பிடித்து விசாரிக்கிறார்கள். ஸ்பாட் பைன் (spot Fine) போடுகிறார்கள். இன்று காலையில் ஏழு மணிக்கு ஓட்டம் முடித்து வரும் போது சாலையில் யாருமே இல்லை, பால் வாங்க போகிற ஒரு பையனை தெருமுக்கில் நின்றுகொண்டு விரட்டி பிடித்துவைத்து மாஸ்க் எங்கே என மிரட்டிக்கொண்டிருந்தார்கள். அவன் பாவம் வெலவெலத்துப்போய் நிற்கிறான். ஏதோ ஒரு நோட்டு வைத்துக்கொண்டு உடனே பில் போடுவதுபோல பேர் என்ன, நம்பர் சொல்லு, இருநூறு எடு என்று அதட்டல்கள் தாங்கமுடியவில்லை.

இன்றைய தேதியில் உருப்படியாக மாஸ்க் அணிகிற ஆட்கள் பத்து சதவீதம் கூட இருக்கமாட்டார்கள். எல்லோருமே கடமைக்கு தாடைக்குத்தான் அணிகிறார்கள். மாஸ்க் மீதான நம்பிக்கை யாருக்குமே இல்லை.

சென்னையில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே காய்ச்சல்தான். கொரானா பரவலின் உண்மையான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. மூன்றாவது அலையின் தாக்கமும் அதன் பாதிப்புகளும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. காய்ச்சல் வந்தால் டோலோவை போட்டுக்கொண்டு மூன்றுநாளில் சரியாகிவிடுகிறார்கள். இருப்பினும் ஒரு எமெர்ஜென்ஸி காலக்கட்டம் போல இப்போது ஏன் நடந்துகொள்ளவேண்டும். அதன் அவசியம் என்ன என்பது புரியவில்லை.

மக்களெல்லாம் இரண்டு ஆண்டுகளாக மிரண்டுபோயிருக்கிறார்கள். வாழ்க்கையே சூறையாடப்பட்டிருக்கிறது பலருக்கும். வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள். மக்களுக்கு இந்த மாஸ்க் மாதிரியான விஷயங்களில் நம்பிக்கை போய்விட்டது. தடுப்பூசி போட்டபிறகும் கெடுபிடிகளை அவர்களால் ஏற்கமுடியவில்லை. எல்லோரும் ஒரு நார்மல் வாழ்வு வாழ ஆசைப்படுகிறார்கள். இந்த நேரத்தில் மக்களை போட்டு இப்படி மிரட்டுவதற்கு பதிலாக இப்படி ஃபைன் போடுதற்கு பதிலாக இரண்டு ரூபாய்தான் மாஸ்க், அதை ஸ்பாட்டிலேயே கொடுத்து அணிய சொல்லிவிடலாம். மாஸ்க் அணிவதன் முக்கியத்துவத்தை பரப்பலாம். அதில் ஒரு சினேகமும் அக்கறையும் இருக்கும். ஆனால் அப்படி செய்யமாட்டார்கள். மக்களை போட்டு வதைக்கவும் அவர்களிடம் சுரண்டி வசூலிக்கவும் இது ஒரு சாக்கு.. ச்சை

நன்றி:
Athisha Vinod.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here