பெருங்குடி “தீ”….
குப்பைகளின் “தீ” மட்டுமல்ல
திட்டங்கள் மற்றும் தீர்ப்புகளின் தோல்வியின் “தீ”
பெருங்குடி குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்து 26 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்க முடியாமல் சென்னை மாநகராட்சி போராடி வருகிறது. எரியும் குப்பையிலிருந்து அடர்த்தியான நச்சுப் புகை இப்போது 6 கிமீ சுற்றளவில் பரவியுள்ளது, மேலும் பள்ளிக்கரணை மற்றும் பெருங்குடிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியான வேளச்சேரி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் வேளச்சேரி, பெசன்ட் நகர், ஆதம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில், வானத்தில் புகை பரவுவதை குடியிருப்புவாசிகள் கவனித்தனர். இந்த புகையால் நகரில் நாளுக்கு நாள் காற்று மாசு அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தவிர குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதித்துள்ளது.
“ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், இருதய சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள், ஆஸ்துமா நோயாளிகள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் போன்றவர்கள் இப்போது வெளிப்படும் புகையால் குறிப்பாக பாதிக்கப்படலாம்.
125 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் பெருங்குடி குப்பைத் தொட்டியில் 3.63 மில்லியன் கன மீட்டர் கழிவுகள் நிரம்பி வழிவது இது முதல் முறையல்ல. “தீ விபத்துக்கான காரணம் முற்றிலும் சட்டவிரோதமானது. அங்ககக் கழிவுகள் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுவதை இது தெளிவாகக் காட்டுகிறது. நகராட்சியின் திடக்கழிவு வழிகாட்டுதல்களின்படி, அங்ககக் கழிவுகளை குப்பைக் கிடங்கில் கொட்டக் கூடாது. குப்பை கிடங்கில் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் கிடக்கும் கரிமக் கழிவுகள் சிதைந்து, வெப்பநிலையை உயர்த்துகிறது. மேலும் குப்பைகள் அதன் மேல் கொட்டப்படுவதால் இந்த குப்பையும் சுவாசிக்கவில்லை. இது மீத்தேன் பாக்கெட்டுகளை உருவாக்குகிறது, அது தன்னிச்சையாக எரிகிறது,” என்று நித்யானந்த் விளக்குகிறார். தண்ணீர் குப்பையில் எரியும் தன்மையை மட்டுமே அதிகரிக்கும் என்றும், தீயை அணைக்க உதவாது என்றும் அவர் கூறுகிறார். இது கடந்த 24 மணி நேரத்தில் உள்ளூரில் காற்று மாசு அதிகரிப்பைக் காட்டுகிறது.
பெருங்குடியை மையமாக வைத்து சென்னையில் திடக்கழிவு கொட்டப்படுகிறது. தற்போது சுமார் 136 ஹெக்டேர் வரை (340 ஏக்கர்) சென்னையின் சரிபாதி திடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. தினசரி 4500 டன் சென்னை மாநகராட்சியால் கொட்டப்படுகிறது. குப்பைகளைப் பிரித்துக் கையாள்வது, மறுசுழற்சி என்ற எதையும் செய்யாமல் மாநகராட்சி அப்படியே கொட்டுவதால் ஆண்டுக்கு 4 ஹெக்டேர் வீதம் இந்த குப்பைகள் நன்னீர் சதுப்பு நிலத்தை விழுங்கி கொண்டிருக்கின்றன.

1970-ம் ஆண்டுகளில் பெருங்குடி சீவரம் கிராமத்தில் 7 ஹெக்டேர் குப்பை கொட்டுவது என்ற வரையறையை மீறி 80-ம் ஆண்டுகளில் மாநகராட்சி நன்னீர் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்தது. 2002-ல் 56 ஹெக்டேர், 2007-ல் 136 ஹெக்டேர் (340 ஏக்கர்) வரை குப்பை கொட்டுவது அதிகமாகி கொண்டே போகிறது. 2005-ம் ஆண்டு வரை 70 லட்சம் டன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாக தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் (National productivity council) தெரிவித்துள்ளது.
2005-ம் ஆண்டு அப்போதைய தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நன்னீர் சதுப்பு நிலத்தில் மாநகராட்சி திடக்கழிவு கொட்டுவது 74.13 ஹெக்டேரை தாண்டக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முடிவு எடுக்கும்போதே அதை மீறுவது என்று தீர்மானித்து இன்று 136 ஹெக்டேர் வரை திடக்கழிவு கொட்டப்பட்டுள்ளது. கொட்டப்படும் குப்பைகளில் வீடுகளிலிருந்து வரும் குப்பைகள் மிகமிகக் குறைவு. தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவ திடக்கழிவுகள் மிக அதிகமாக கொட்டப்படுவதால் ஆபத்தான நோய்கள் உருவாகிக் கொண்டுள்ளன. இந்த வட்டாரத்தில் உள்ள கிணறுகளில் நீர் மஞ்சள், பச்சை, கருப்பு, சிவப்பு என பல வண்ணத்தில் உள்ளது. நீரும் அதன் குணமும் இந்த கழிவுகளால் சீரழிக்கப்பட்டுவிட்டது.
தொழிற்சாலை, மருத்துவக் கழிவுகளால் மெட்டல், காப்பர், மெர்குரி அளவுகள் மிக அதிகமாகி உள்ளன. 27 வகையான இரசாயனக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதாவது சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் வரையறுத்துள்ள அளவைத் தாண்டி பல மடங்கு இரசாயனக் குப்பை கொட்டப்பட்டுள்ளது. குறிப்பாக புற்றுநோயை உருவாக்கக்கூடிய மூன்று இரசாயனங்களின் அளவு, வரையறுத்த எல்லையை விட 34,000 மடங்கு அதிகமாக இந்த குப்பைகளில் உள்ளது.
சமீபத்தில் ஜப்பான் பல்கலைக்கழகம் சென்னை பெருங்குடி மற்றும் கம்போடியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள இடங்களில் தாய்ப்பால் மாதிரிகளை ஆய்வு செய்தது. அதில் பெருங்குடிதான் மிக ஆபத்தான இரசாயன கழிவுகள் உள்ள இடம் என கண்டறியப்பட்டுள்ளது.
பெருங்குடியில் உள்ள சிலரின் தாய்ப்பாலில் டயாக்சின் என்ற ஆபத்தான இரசாயனம் இருந்துள்ளது. இவை அங்குள்ள மருத்துவக் கழிவுகளில் உள்ள இரசாயனமாகும். இதனால்தான் “நீலக்குழந்தை நோய்” (Blue baby syndrome) இப்பகுதியில் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நோயால் இதய பலவீனம், இதயத்தில் ஓட்டை ஆகிய பாதிப்புகளும், ஆக்சிஜன் பற்றாக்குறையால், `ஹீமோகுளோபின் குறைவால் குழந்தை மரணம் ஏற்படுகிறது. இவை அனைத்தும் குப்பைகளில் உள்ள இரசாயனக் கழிவுகள் நீரில் கலந்துள்ளதால் ஏற்படும் நோய்கள். சென்னை மாநகராட்சி, குப்பையின் அளவை குறைத்துக்காட்ட அவ்வப்போது தீயிட்டு கொளுத்தி விடுகிறது. ஆனால் இந்த பழியை குப்பை சேகரிக்கும் அப்பாவிகள் (Ragpickers) மீது சுமத்துகிறது. முழுமையாக பயன்படுத்தப்படாத இரசாயனக் கழிவுகளால் (PIC-Product of incomplete combustion) மிக பெரிய நோய்கள் காற்றில் பரவுகின்றன. 1000 மைல்கள் வரை இது நோய் தாக்கத்தை ஏற்படுத்தும். சென்னை மாநகராட்சியை சென்னை ‘பெருநகர’ மாநகராட்சி என்று மாற்றினாலும் அது இன்றும் கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டுகளின் நிலை தொடர்கிறது.
2002-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி சதுப்பு நிலப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது கண்துடைப்பு என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. காரணம் இதற்குபிறகும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. குப்பை கொட்டுவது நிறுத்தப்படவில்லை. கழிவுநீர் தடுக்கப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியின் கதையே தொடர்கிறது..
நன்றி: சோமசுந்தரம்.
முகநூல் பகிர்வு.