பசி தான் நம்மை ஆள்கிறது!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் உண்ண உணவின்றி பசியால் தவிக்கும் மக்களை கலகம் செய்ய அழைக்கிறார் கவிஞர்.

யாரோ பசியால் கொதித்தெழுந்தார்கள்
யாரோ பசியால் கேள்வி கேட்டார்கள்
யாரோ பசியால் ஆயுதமேந்தினார்கள்
யாரோ பசியால் அடித்துப்புசித்தார்கள்
யாரோ பசியால் மடிந்தும் போனார்கள்

அதுவரை
நாம் அவர்களுக்காகக் குரல் கொடுத்தோம்
அவர்களுக்காகக் கண் கலங்கினோம்
அவர்களுக்காகக் கையேந்திப் பிரார்த்தித்தோம்

இதோ
இப்போது
நமக்கும் பசிக்கிறது

யாரோ
எங்கோ பசியால் இறந்ததற்கும்
நாம் இறப்பதற்கும்
வித்தியாசங்கள் இல்லையா
என்ன?

உண்மையில்
பசிதான்
உலகின்
மிகக்கொடிய நோய்
என்பதை அறிய
எவ்வளவு காலம் எடுத்திருக்கிறது
பார்

வேறு யாருமில்லை
பசியே
இப்போது
நம்மை ஆள்கிறது
நம் தேசத்தை ஆள்கிறது

இனி
பசித்த மிருகத்திற்கு
உணவென
அதிகாரத்தை
அடித்துப்புசித்திட
கற்றுக்கொடுக்கலாம்
வா

சரித்திரம்
நம்மைப் பேசித்தீர்க்கட்டும்

  • ரிஸ்கா முக்தார்

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here