மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே வை.பட்டவர்த்தியில் IOCL நிறுவனம் கொண்டுவந்து இறக்கியிருந்த எரிவாயு குழாய்கள் நேற்று இரவே ஆறு கனரக ஊர்திகளில் அகற்றப்பட்டுள்ளன. கீழே இறக்கி வைக்கப்பட்ட எஞ்சியுள்ள குழாய்களும் ஊர்திகளில் ஏற்றப்பட்டு உடனடியாக அகற்றப்படும்.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று உடனடியாக எரிவாயு குழாய்களை அப்புறப்படுத்திய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உளமார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறோம்.
போராட்டங்களை நடத்துவதில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு நீண்ட அனுபவம் பெற்றுள்ளது. காவிரிப்படுகை முழுவதும் ஏராளமான போராட்டங்களை வெற்றி இலக்கு நோக்கி நடத்தியுள்ளோம். அதேநேரம் ஒவ்வொரு பிரச்சினையையும் ஆய்வுசெய்து அதை எவ்விதம் கையாளுவது, எவ்விதம் நகர்த்துவது என்பதைக் கலந்தாய்வு செய்து திறம்பட செய்து வருகிறோம்.
வை.பட்டவர்த்தியில் IOCL நிறுவனம் எரிவாயுக் குழாய்களைக் கொண்டு வந்து இறங்கிய நிலையில், உடனடியாக 31.03.2022 அன்று முதற்கட்டமாக குழாய்களை இறக்குவதை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிவு செய்து, அவர் இல்லாத நிலையில் முதல் கடிதத்தை மாவட்ட DRO அவர்களிடம் கொடுத்து வலியுறுத்தினோம்.
01.04.2022 அன்று காலை 10.00 மணிக்கு எங்களது வீட்டில் தோழமை அமைப்புகளை அழைத்து ஒரு கலந்தாய்வினை நடத்தினோம். கலந்தாய்வில் மாவட்ட ஆட்சியருக்கு தொலை பேசியில் அவர்களை சந்திக்க நேரம் கேட்டோம். ஆட்சியர் அவர்கள் 04.04, 2022 அன்று மாலை 4.00 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கினார்கள்.
இதற்கிடையில், 04.04.2022 அன்று முதல்வரும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையத் தலைவருமான மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள ஆணையத்தைக் கூட்ட இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து, மாண்புமிகு முதல்வருக்கும், மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அவர்களுக்கும், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களுக்கும் 3.4.2022 அன்று அவசரமாக மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. பின்னர் பதிவு அஞ்சலிலும் ஐந்து பக்க அளவில பிரச்சினை சார்ந்த அறிக்கை, மற்றும் வேண்டுகோள் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
04.04.2022 அன்று மாலை மீத்தேன் திட்ட எதிர்ப்புக கூட்டமைப்பு தோழமை அமைப்புகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து, விரிவான கடிதத்தினை அளித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூறினோம். “எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். மேலிருந்து தகவல் வந்ததும் தெரிவிக்கிறேன்” என்றார்கள். இரண்டு தினங்களில் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் விரிவான போராட்டங்களை நடத்த இருக்கிறோம் என்ற செய்தியையும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துவிட்டு வந்தோம்.
5.04.2022 அன்று மயிலாடுதுறைக்கு வந்திருந்த மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்களிடம் நேரிடையாகக் கடிதம் கொடுத்து, விரிவாக செய்திகளைப் பகிர்ந்து, உடனடியாக குழாய்களை அப்புறப் படுத்த வேண்டினோம். அமைச்சர் அவர்கள் கடித்ததை வரிக்கு வரி ஆழ்ந்து படித்து, கோடிட்டு குறித்துக் கொண்டார்கள். அமைச்சர் அவர்கள் பிரச்சினை குறித்து கவனிப்பதாக உறுதியளித்தார்கள்.
அதன்படியே 5- ஆம்தேதி இரவு எரிவாயு குழாய்கள் ஏற்றப்பட்ட 6 கனரக ஊர்திகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சியவை அப்புறப்படுத்தப்படும். பிரச்சனையை எளிதில் தீர்த்து வைத்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மாண்புமிகு அமைச்சர் திரு.சிவ.வீ. மெய்யநாதன் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு நன்றி தெரிவிக்கிறது.
31.03.2022 முதல் இன்றுவரை இப்பிரச்சனையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தோழர்கள் மற்றும் தோழமை அமைப்புகளுக்கு நன்றி. 01.04.2022 அன்று நடத்தப்பட்ட கலந்தாய்விலும், 03.04.2022 அன்று நடந்த மாவட்ட ஆட்சியர் சந்திப்பிலும் பங்கேற்ற த.மு.மு.க மற்றும் ம.ம.க., SDPI, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் உரிமை இயக்கம், வி.சி.க தோழர்கள், பட்டவர்த்தி, கொற்கை மற்றும் நீடூர் தோழர்கள் அனைவருக்கும் நன்றி! வெற்றி இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.