நேர்மை என்பது சொல் அல்ல செயல் !பிரதமர் மோடிக்கு ஒரு மனம் திறந்த கடிதம்!

உண்மையில் குசேலன் கட்சியாக இருந்த பிஜேபி, நீங்கள் பிரதமரான பிறகு குபேரன் கட்சியாக மாறிவிட்டது.

அண்ணாமலைக்கு கடிதம் எழுதியதற்கே கோபப்படுவோர்,அவருக்கு கடிதம் எழுத என்ன தகுதியிருக்கிறது என கேட்கிறார்கள்

கடந்த மார்ச் மாதம் பிரதமருக்கு எழுதிய கடிதம் இது. இதையும் படித்து இன்னும் அதிகமாக கோபப்படவும்.

நேர்மை என்பது சொல் அல்ல செயல் !பிரதமர் மோடிக்கு ஒரு மனம் திறந்த கடிதம்

000

இந்திய திருநாட்டின் பிரதமர், மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு வணக்கம்..
பெரும்பாலான நேரங்களில் உங்களுடைய பேச்சில் நீங்கள் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிவருவதால் நானும் குறள் ஒன்றை குறிப்பிட்டு இந்த கடிதத்தை தொடர விரும்புகிறேன்.

அதிகாரம் – கொடுங்கோன்மை
குறள்: 556

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி

( நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும் )

சரி..கடிதத்திற்குள் போகலாம்..

சமீபத்தில் இயற்கை எய்திய தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவர் திரு.கே.என்.லஷ்மணன் அவர்கள் வீடும் என்னுடைய வீட்டிற்கும் இடையிலான தூரம் அதிகபட்சம் அரை கிலோ மீட்டர் மட்டுமே.

உள்ளூர் தொலைக்காட்சியில் நான் செய்தியாளராக பணியாற்றிவந்த போது பலமுறை அவரை சந்தித்திருக்கிறேன்.

சேலத்தில் ஏதாவதொரு மிகச் சாதாரண ஹோட்டலில் நடக்கும் கட்சிக்கூட்டத்திற்கு வருவார். சில முறை பேசியிருக்கிறேன்.மிகவும் பண்பான மனிதர்.அதிர்ந்து பேசமாட்டார்.வேகமாக நடந்தால் பூமிக்கு வலிக்கும் என நினைப்பாரோ என்னமோ அவ்வளவு சாந்தமாக நடந்து வருவார்.

எல்லா அரசியல்வாதிகளைப்போல அவரும் வேட்டியும்-சட்டையும் தான் அணிந்திருப்பார்.ஆனால் அது வெள்ளையாக இருக்காது.

லேசாக அழுக்கேறி இருக்கும். கொஞ்சம் கவனித்து பார்த்தால் தெரிந்துவிடும் ஒன்றிரண்டு தினங்களாக ஒரே ஆடையை தான் அணிந்திருக்கிறார் என்று.
நான் பல முறை யோசித்திருக்கிறேன். ஒரு தேசியக்கட்சியின் மாநிலத்தலைவராக இருந்தவர் இப்படி அழுக்கான ஆடையை அணிந்து வருகிறாரே என்று.

பொறுக்க முடியாமல் பிஜேபியில் முக்கியப்பொறுப்பில் இருந்த மறைந்த ஆடிட்டர் ரமேஷிடம் வாய் விட்டே கேட்டுவிட்டேன்.

அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா ?

பிஜேபியில் கட்சி பொறுப்பில் இருந்தாலும் சரி,,MLA,MP ஆனாலும் சரி சட்டத்திற்கு புறம்பாக பணம் எல்லாம் யாரும் சம்பாதிக்க முடியாது. கட்சித்தலைமையும் அதை அனுமதிக்காது. பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கான கட்சி இதுவல்ல. தேசத்தின் மீது மிகவும் அக்கறை கொண்ட கட்சி ..

உண்மையைச் சொன்னால் பிஜேபி குபேரன் கட்சி இல்லை -குசேலன் கட்சி என்று கூறினார். அப்போது ..ஆச்சர்யமாக இருந்தது….

ஆனால் 2014-ல் நீங்கள் பிரதமரான பிறகு,டெல்லிக்கு குடியேறினீர்கள்.
குஜராத்தில் இருந்து வெறும் சாதாரண டிரங்க் பெட்டியும்,இரண்டு செட் குர்தாவும் மட்டுமே கொண்டுவந்ததாக பல பத்திரிகைகள் எழுதின. அதை நம்பிய அப்பாவி இந்திய பிரஜைகளில் நானும் ஒருவன்.

ஆனால், நீங்கள் பிரதமரான பிறகு பந்தாவாக ஆடை அணிந்தபடி உலா வரத்தொடங்கினீர்கள். 135 கோடி மக்கள் வாழும் நாட்டின் பிரதமர் எளிமையாக இருக்கவேண்டியது அவசியமில்லை தான். பல லட்ச ருபாய் மதிப்புள்ள ஆடையை அணிந்தீர்கள் என்ற தகவல்கள் வெளிவந்த பிறகே,,நீங்கள் எளிமையானவர் அல்ல என்பதை உணர்ந்து,எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

உங்களுக்கு ஒரு விஷயம் நினைவிருக்கிறதா பிரதமர் மோடி அவர்களே ?

பிரதமரான பிறகு,,பிஜேபியின் அனைத்து எம்.பிக்களும் ஒவ்வொரு ஆண்டும் தங்களது சொத்துக்கணக்கை கொடுக்க வேண்டுமென கூறியிருந்தீர்கள்.
ஆனால்,அது இப்போது வரை நடக்கவில்லை.

உண்மையில் குசேலன் கட்சியாக இருந்த பிஜேபி, நீங்கள் பிரதமரான பிறகு குபேரன் கட்சியாக மாறிவிட்டது.

சாதாரண கூட்டம் நடத்துவதென்றால் கூட தமிழக பிஜேபி 5 நட்சத்திர ஹோட்டல்களில் தான் நடத்துகிறது. கட்சிக்கூட்டம் நடக்கும் மண்டபங்களில் மேடைக்கான மலர் அலங்காரத்திற்கே பல லட்சங்களை செலவழிக்கிறார்கள். 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் திமுக, அதிமுக கூட தமிழக பிஜேபியை போல டாம்பீகம் காட்டுவதில்லை. இதை உள்நோக்கத்தோடு எதுவும் நான் சொல்லவில்லை.
உண்மை அதுதான்.

சமீபத்தில்,,,
MICRO-DONATE FOR A NEW INDIA SUPPORT BJP WITH YOUR MICRO-DONATION
என்ற பிரச்சாரத்தை 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் தேதி மதியம் 1;39 மணிக்கு நீங்கள் தொடங்கி வைத்தீர்கள்.

அதாவது,
“புதிய இந்தியாவிற்காக சிறிய நன்கொடை தாருங்கள் சிறிய நன்கொடை மூலம் பிஜேபியை ஆதரியுங்கள்” வாசகத்துடன் அந்த நிதிவசூலை ஆயிரம் ரூபாய் செலுத்தி நீங்கள் தான் தொடங்கியும் வைத்தீர்கள்..

நானும் உங்களது கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்து,, உங்களுடைய பெயரில் நீங்கள் அறிமுகப்படுத்திய NAMO App மூலமாக swachh bharat, beti bachao beti padhao, kisan seva மற்றும் party fund என நான்கு காரியங்களுக்கு தலா நூறு ரூபாய் செலுத்தினேன்..

நன்கொடையாக கொடுத்த பணம் என்னுடைய உழைப்பில் நேர்மையாக சம்பாதித்த பணம் என்பதை அழுத்தமாக குறிப்பிடுகிறேன்.

பணம் செலுத்திய பிறகு,,உடனடியாக நன்கொடைக்கான ரசீது என்னுடைய ஈமெயிலுக்கும் வந்துவிட்டது.

பிஜேபியின் மத்திய அலுவலகம் பணம் பெற்றுக்கொண்டதற்கான ரசீதை அனுப்பி இருந்தது. ஒரு நிமிடம் எனக்கு தூக்கி வாரி போட்டுவிட்டது.

அரசின் திட்டங்களுக்கு,, நானாக மனம் விரும்பிக் கொடுத்த நன்கொடைக்கு பிஜேபி அலுவலகம் எப்படி ரசீது கொடுக்க முடியும்!?
கொஞ்சம் தவறாக தோன்றியது..

உடனடியாக நாட்டின் பிரதமர் மீது சந்தேகப்படுவதும் சரியான செயல் அல்ல என்பதால் சம்பத்தப்பட்ட ஜல்சக்தி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திற்கு RTI மூலமாக விண்ணப்பம் செய்தேன்.

சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சகங்களும் உங்களது NAMO App மூலமாக swachh bharat, beti bachao beti padhao ஆகிய திட்டங்களுக்கு நன்கொடை வசூலிக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று கூறுகிறது.

இந்த நாட்டின் பிரதமரான உங்களுக்கு இந்த விஷயம் எப்படி தெரியாமல் போனது மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களே !?

NAMO App க்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று பார்த்தால்,,உங்களது அலுவலகமே கூறுகிறது அப்படி எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை என்று.

என்ன நடந்து கொண்டிருக்கிறது திரு.மோடி அவர்களே…

அரசின் திட்டங்களின் பெயரில் யாருமே நிதிவசூலிக்க அனுமதி இல்லை எனக்கூறும் அரசாங்கத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் நீங்களே அதன் பெயரில் உங்களது கட்சிக்காக நிதி வசூலித்துக்கொண்டிருக்கிறீர்களா ?

வேறு ஏதாவது ஒரு அரசியல் கட்சி… இதே போல நிதி வசூலித்தால் இந்த அரசாங்கம் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்குமா ?

KISAN SEVA என்ற பெயரிலும் நிதி வசூல் நடக்கிறது. எந்த நாட்டிலிருக்கும் விவசாயிகளுக்காக நன்கொடையை பிஜேபி வசூலிக்கிறதென தெளிவு படுத்துவீர்களா பிரதமர் அவர்களே !?

அரசு திட்டங்களின் பெயரில் அரசியல் கட்சி நன்கொடை வசூலித்து வருவது அப்பட்டமான மோசடி,ஏமாற்றுவேலை என்று ஏன் நினைக்கக்கூடாது !

இதுவரை அரசு திட்டங்களின் பெயரில் உங்களது மூலமாக வசூலிக்கப்பட்ட நிதியை என்ன செய்தீர்கள் என்று கேட்கும் உரிமை நன்கொடை செலுத்தியவன் என்ற முறையிலும்,இந்த நாட்டின் குடிமகன் அடிப்படையிலும் எனக்கு இருப்பதாக கருதுகிறேன்.

விமர்சங்களுக்கும்,குற்றச்சாட்டுக்களுக்கும் நீங்கள் கடைபிடிக்கும் மௌனத்தை இந்த விவகாரத்திலும் தொடர்ந்து விடாதீர்கள்..

உங்களது தூய்மையான பொதுவாழ்க்கையில் அழிக்க முடியாத கறையாக இந்த விஷயம் மாறிவிடும்…

உங்களை எல்லாரும் பணத்தின் மீது ஆசை அற்றவர்,, இந்த நாட்டை காப்பாற்ற,, வாராது வந்த மாமணி என்றெல்லாம் புகழ்கிறார்கள்.. உண்மையில் அதை நானும் நம்பினேன்.

2019 நாடாளுமன்ற தேர்தல்,, வாரணாசியில் போட்டியிட்டபோது சொத்து விபரங்கள் அடங்கிய பிராமண பத்திரத்தை சமர்ப்பித்துள்ளீர்கள்….

அதில்,,
2013-14 ம் ஆண்டில் இருந்து 2017-18 ம் ஆண்டுவரை நீங்கள் வருமானமாக காட்டியிருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா ?

மொத்தம் 72,03,921 ரூபாய்… அதாவது 72 லட்சத்து 3921 ரூபாய் மட்டுமே..

ஆனால் ….
குஜராத் காந்தி நகரில் இருக்கும் State Bank of India, NSC கிளையில்
01-10-2018 ல் இருந்து 24-12-2018 வரை மட்டும் நீங்கள் செலுத்திய fixed deposit எவ்வளவு தெரியுமா ?

92,51,814 ரூபாய் அதாவது 92 லட்சத்து 51 ஆயிரத்து 814 ரூபாய்…

31-03-2019-ம் தேதி வரை அதன் மதிப்பு (Rs.1,27,81,574)
ஒரு கோடியே 27 லட்சத்து 81 ஆயிரத்து 574 ரூபாய் என்று நீங்கள் தான் குறிப்பிட்டுள்ளீர்கள்.

அதாவது 84 தினங்களில் நீங்கள் உங்கள் பெயரில் இருக்கும்
SBI -A/C No.10354950546 என்ற கணக்கில் செலுத்திய fixed deposit -க்கும் உங்களது
5 ஆண்டுகால வருமானத்திற்கும் இருக்கும் வித்யாசம் எவ்வளவு தெரியுமா ?

20 லட்சத்து 47 ஆயிரத்து 893 ரூபாய்…

இந்த நாட்டையே ஆள்கிறீர்கள்.. உங்களது வருமானத்தை விட எப்படி அதிக தொகையை வைப்பு நிதியாக செலுத்தினீர்கள் ? என்று நான் கேட்க விரும்பவில்லை..

இந்த நாட்டின் சாதாரண குடிமகனுக்கு அந்த உரிமையை உங்கள் தலைமையிலான அரசு கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் பணத்தின் மீது ஆசையற்றவர்கள் பணத்தை ஏன் சேமிக்கப்போகிறார்கள்…! சேமிக்க மாட்டார்கள் அல்லவா ! அதற்காக சொல்கிறேன்.

2021-டிசம்பர் மாதத்தில் நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் ராகேஷ் சின்ஹா என்ற ராஜ்யசபா உறுப்பினர், பிரதமர் அலுவலகத்திற்கு வந்த பரிசு மற்றும் நினைவுப்பொருட்களை ஏலம் விட்டது குறித்த விபரங்களை கேட்டிருந்தார்.

ஆனால்,பிறகு அவரது கேள்வி திரும்பப்பெறப்பட்டுவிட்டது.

என்ன அழுத்தமோ நிர்பந்தமோ எனக்கு தெரியாது. இந்த விஷயம் கூட பிஜேபி ராஜ்யசபா உறுப்பினர் சுப்ரமணியசாமி தான் சோஷியல் மீடியாவில் கூறியிருந்தார்.

நிதி வசூல் குறித்த விஷயங்களில் இந்த நாட்டின் பிரதமராக இருக்கும் நீங்கள் வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டியது.அவசியமில்லையா ?

அன்புள்ள திரு.மோடி அவர்களே..
நீங்கள் பிரதமரான பிறகு இந்த தேசத்தின் கடன் தொகை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தகரம் முதல் தங்கம் வரை உற்பத்தி செய்யும் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் விற்கப்படுகிறது.

ஆனால் உங்கள் கட்சி இந்தியாவிலேயே பணக்கார கட்சியாக மாறிவிட்டது.
டெல்லியில் பிரமாண்டமான கட்சி தலைமை அலுவலகத்தை கட்டிவிட்டீர்கள்.

வேடிக்கையை பாருங்கள் …
அரசாங்க நிறுவனங்களின் சொத்துக்களை எல்லாம்..இந்த நாடு விற்று வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி மட்டும் இந்தியாவில் உள்ள 740 மாவட்டங்களிலும் கட்சிக்கு புதிய கட்டிடங்களை கட்டி வருகிறது..

தமிழகத்திலும் கூட புதிய மாநில தலைமை அலுவலகம் கட்டுவதற்கு பிஜேபி நிர்வாகிகள் நிலத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள்..

எப்படி இருக்கிறது பாருங்கள்..!

அரசாங்கம் சொத்துக்களை விற்கிறது ஆட்சி செய்யும் கட்சி சொத்துக்களை சேர்த்துக்கொண்டிருக்கிறது…

இதைப்பற்றி எல்லாம் யார் கேட்டாலும் எந்த பதிலும் வராது என்று எனக்கு நன்றாக தெரியும்..

அதற்காக…
NAMO App மூலமாக அரசு திட்டங்களின் பெயரில் பிஜேபி என்ற அரசியல் கட்சி நிதி வசூலிப்பதை எப்படி சகித்துக்கொள்ளமுடியும் !?

இந்த நாட்டின் மதிப்புக்குரிய பிரதமர் நீங்கள்… உங்களை யாராலும் எதுவும் செய்யமுடியாது தான்..அதற்காக.. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா என்ன !?

B.R. அரவிந்தாக்ஷன்
ஊடகவியலாளர்

01-03-2022

(மீள்பதிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here