DEO “சார், என்னா சார் எந்த தபாலா இருந்தாலும் நீங்க முதல்ல அனுப்பிடுவீங்க, ஆனா இந்த ஸ்காலர்ஷிப் தபால் பெண்டிங்ல வச்சிருக்கீங்க?“

த.ஆ:–“சார் பிள்ளைங்க பேங்க்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி கொடுக்க லேட் பண்றாங்க சார். நானே கூட போன் பண்ணிப் பாத்துட்டேன் இன்னும் ஓப்பன் பண்ணல என்ன சார் செய்வது?”

“என்ன சார் ஒரு இருபது பிள்ளைகளுக்கு அக்கவுண்ட் ஓப்பன் பண்ண இவ்வளவு நாளா?”

போனை கட் பண்ணிட்டு உடனே அதே வேகத்தில் வகுப்பாசிரியருக்கு போன் பண்ணினேன்.

த.ஆ:-“டீச்சர், என்ன டீச்சர் அக்கவுண்ட் நம்பர் என்னாச்சு? டிஇஓ ஆபீஸ்ல இருந்து என்ன தொல்லை பண்றாங்க டீச்சர்”

டீச்சர்:-“சார் நான் என்ன சார் பண்றது? பேரண்ட்ஸ் எல்லாம் ஆளுக்கு ஒரு காரணம் சொல்றாங்க சார். அப்புறம் நான் போன் அடிச்சா எடுக்க கூட மாட்டேங்கிறாங்க சார்.

தயவு பண்ணி அடுத்த வருடம் என்னை ஆறாப்புக்கு கிளாஸ் டீச்சரா போடாதீங்க சார். இவங்க கிட்ட என்னால போராட முடியல”

த.ஆ:-“அக்கவுண்ட் ஓப்பன் பண்ணாத பேரண்ட்ஸ வரச்சொல்லுங்க நான் பேசுறேன்”

டீச்சர்:-“போன எடுக்கிற பேரண்ட்ஸ் கிட்ட சொல்றேன் சார்“

அடுத்த நாள்

பெற்றோர்-1

த.ஆ:-“ஏம்மா புள்ளைக்கு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணல?”

அம்மா:–“சார் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண பேன் நம்பர் (PAN Number) கேக்குறாங்க ”சார். அதுக்கு கம்ப்யுட்டர் சென்டர் போனா முன்னூறு ரூவா கேக்கறாங்க. நான் அக்கவுண்ட் பண்ண நூறு ரூவா தான் வச்சி இருந்தேன். நாளைக்கு வேலைக்கு போய்ட்டு காசு கெடச்சதும் எடுத்துக்கிட்டு போய் ஆரம்பிச்சிடுறேன் சார்”

(பத்து வயது பிள்ளைகளுக்கு இன்கம் டாக்ஸ் பேன் நம்பர் வேணுமாம்!!)

பெற்றோர் – 2

த.ஆ:- “ஏம்மா புள்ளைக்கு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணல?“

அம்மா:- “சார், கை ரேகை விழல சார். திரும்பவும் ஆதார் சென்டருக்கு போய் கை ரேகை பதிவு பண்ணி அப்புறம் தான் அக்கவுண்ட் பண்ணலாம் சார்”

(கைக்குழந்தையா இருந்தபோது எடுத்த ரேகையா இருக்கும்)

பெற்றோர் – 3

த.ஆ:- “ஏம்மா புள்ளைக்கு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணல?”

அம்மா:-“சார், நாங்க எங்கூர்ல இருந்து இங்க வந்து இருக்கோம் சார். அட்ரஸ் வேற மாவட்டத்தில் இருக்கு அங்க போய் ஓப்பன் பண்ணிக்கோங்கன்னு சொல்றாங்க“

(வேலைக்காக வெளியூர் சென்று தங்கும் பெற்றோர் எதிர்கொள்ளும் சிக்கலில் ஒன்று)

பெற்றோர்– 4

த.ஆ:-“ஏம்மா புள்ளைக்கு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணல?“

அம்மா:-“சார் ஆதார்ல பேரு மாறி இருக்குங்க சார். பொறந்தப்ப ஒரு பேரு வச்சோம் சார். ஸ்கூல்ல சேத்தப்ப வேற பேரு மாத்தினோம் சார். அதனால பேரு மாறி இருக்கு ன்னு சொல்றாங்க சார்“

(இத்தோடல்லாமல் முதல் முறை ஆதார் பதிவின் போது விண்ணப்பம் நிரப்பியவர் போட்ட ஸ்பெல்லிங்லாம் கில்லி மாதிரி நம்ம தெறிக்கவிடும். அதையும் அப்டேட் பண்ண அனுப்ப வேண்டும்)

இந்த உதாரணங்கள் கொஞ்சம் தான். இன்னும் ஏராளமான காரணங்களோடு பெற்றோர்கள் வருவார்கள்.

கூலி வேலை செய்யும் பெற்றோர் தங்கள் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வாரக் கணக்கில் அலைந்து கொண்டுள்ளனர்.

ஆறாம் வகுப்பில் பெண்கல்வி ஊக்கத்தொகை பிறகு ஒன்பதாம் வகுப்பில் பிரி மெட்ரிக் உதவித்தொகை அப்புறம் பத்தாம் வகுப்பில் அனைத்து பிரிவினருக்கும் இடைநிற்றலை தவிர்த்தலை ஊக்குவிக்கும் தொடர் உதவித்தொகை என ஏதாவது ஒரு வகையில் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு அரசு பணம் செலுத்த வேண்டி உள்ளது.

அந்த பணப்பரிமாற்றத்தை சிக்கலின்றியும் டிரான்ஸ்பரன்டாகவும் செய்ய சென்ட்ரல் சர்வரில் இருந்தே வங்கிக்கணக்கிற்கு இசிஎஸ் செய்துவிட ஏதுவாக வங்கிக் கணக்கு விவரங்கள் கேட்கின்றனர்.

எனவே அரசு வங்கியோ தனியார் வங்கியோ IFSC & MICR கோடு உள்ள கணக்கு எண் தேவை.

மாணவர்களுக்கு பூஜ்ய அக்கவுண்ட் துவங்கித் தர வேண்டும் என்று அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் வங்கிகள் ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து துவங்க முயலும் குழந்தைகளைக் கூட திருப்பி அனுப்புவதிலேயே குறியாக உள்ளனர்.

அப்புறம் இன்னொரு விஷயம், மாணவர்களின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்தும் உதவித் தொகையன்றி வேறு தொகை வருவதற்கு வாய்ப்பு இல்லை.

ஆகையால் டார்மெண்ட் அக்கவுண்ட் (Dormant Account — செயலற்ற கணக்கு என்று முடக்கி வைத்து விடுகிறார்கள்.

அரசு பணம் செலுத்த முயலும் போது அக்கவுண்ட் செயல்பாட்டில் இல்லை என்று சில குழந்தைகளின் பணம் திரும்பி விடுகிறது.

மீளவும் அக்கவுண்டை விழிப்படையச் செய்து பணத்தை செலுத்துவது என்பது மிகுந்த நடைமுறை சிக்கல் வாய்ந்ததாக உள்ளது.

பள்ளிகள் மூலமாக வழங்கப்படும் EMIS number & ID card என்பது மாணவர்களின் ராசி நட்சத்திரம் தவிர்த்து அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி இருக்கும் ஒரு அடையாள எண் மற்றும் அட்டை.

ஆதாரை விட நம்பகத்தன்மை அதிகம் உள்ளது. (குறைந்தபட்சம் ஆண்டுக்கு இருமுறையாவது போட்டோ உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அப்டேட் செய்கிறோம்)

இந்த அடையாள அட்டையை ஆதாரமாக வைத்து எளிய முறையில் பள்ளிக் குழந்தைகளுக்கு பூஜ்ய அக்கவுண்ட் துவங்கிக் கொடுத்து அதனை டார்மெண்ட் என்று முடக்காமல் வைத்து இருந்தால் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கும் நடைமுறையில் எந்த சிக்கலும் இருக்காது.எங்களுக்கும் கொஞ்சம் பி.பி (B.P)ஏறாமல் இருக்கும்.

வங்கிக்கு வரும் படிப்பறிவில்லாத பெற்றோர் மற்றும் விவரம் அறியாக் குழந்தைகளை அலைக்கழிக்காமல் ஒரு அக்கவுண்ட் நம்பரை ஜெனரேட் செய்து கொடுத்து பிறகு அனைத்து ஃபார்மாலிட்டீஸ் ஐயும் பார்த்துக் கொள்ளுங்களேன் ஆபீஸர்ஸ்.

எல்லாத்தையும் எடுத்துகிட்டா வந்துருக்க! வா! என்று அடுத்ததாக

“சிக்னல் இல்லை”

“சர்வர் பிராப்ளம்“

“அந்த செக்சன் ஆள் லீவு“

என்று கம்பிக் கட்டும் கதைகளை அவிழ்த்து விடவும் செய்கிறார்கள் என குழந்தைகள் கூறுகின்றனர்.

பொன்னுச்சாமி முத்தையா

முகநூல் பதிவிலிருந்து

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here