நீதிமன்றம் உன் ஊர்த்தெரு அல்ல சாதிபதி அவர்களே……

கர்னாடகத்தில் ராய்சூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று (2022.01.26) தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன்பாக அங்கு மேடையில் இருந்த அம்பேத்கர் திருவுருவப்படத்தை அகற்ற சொல்லியிருக்கிறார் செசன்ஸ் நீதிபதி மல்லிகார்ஜுன கௌடா. இது தொடர்பான செய்தி பரவ தலித் மக்கள் கொதிப்படைந்து நீலக்கொடி ஏந்தி களத்தில் குதித்துள்ளனர். இதுப்போலத்தான் திண்டிவனம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக கடந்த 2014 ல் எஸ்.தேவநாதன் பதவி ஏற்றார்.

இவர் பதவி ஏற்றவுடன், தன்னுடைய இருக்கைக்கு மேல் இருந்த அம்பேத்கர் படத்தை அகற்றும்படி அலுவலக உதவியார் ஆர்.ரவிக்கு உத்தரவிட்டார். ஆனால், அந்த படத்தை அகற்ற ரவி மறுத்ததால், அவரை தன்னுடைய சேம்பருக்குள் அழைத்து, ‘அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றவில்லை என்றால், உன்னை பணியில் இருந்து நீக்கம் செய்வேன்’ என்று மிரட்டினார். இதனால், அம்பேத்கர் புகைப்படத்தை ரவி அகற்றினார்.இதை ஒட்டி நீதிபதி மீது வழக்குரைஞர்கள் புகார் கொடுத்தும் அது பதியப்படவில்லை என்பது தமிழகத்தின் அனுபவம்.
களத்தில் அண்ணலின் சிலையை உடைக்கும் சாதிவெறி காட்டுமிராண்டிகளுக்கும் அம்பேத்கர் படத்தை நீதிமன்றங்களிலிருந்து அகற்றத் துடிக்கும் நீதிபதிகளுக்கும் துளியும் வேறுபாடில்லை.

அரசுத்துறையின் அனைத்து அங்கத்திலும் அதன் அனைத்து துறைகளையும் மேல்சாதி அதிகாரிகள் ஊர்த் தெருவிலுள்ள தன்னுடைய வீடு போன்றே கருதுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு தண்டிக்கப்பட்டால் தான் இந்திய அரசின் அங்கங்களில் சாதிவெறி கோர தாண்டவம் ஆடாது. கர்நாடக தலித் அமைப்புகள் மற்றும் மக்களின் போராட்டத்தை வாழ்த்துவோம் !

சாலமன்

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here