எண்பதுகளில் தமிழ்நாடு தொல்லியல் திணைக்களப் பொறுப்பாளராகக் கடமையாற்றிய நாகசாமி மறைந்து விட்டார். முதலில் அவரின் இழப்பினால் வருந்தும் சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல். மற்ற படி நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி கருணாநிதி( திமுக), இரவிக்குமார் ( விடுதலைச் சிறுத்தைகள்) போன்றோர் கூறுமளவுக்கு அவர் ஒன்றும் பெரிய தமிழ்த் தொண்டு எல்லாம் செய்யவில்லை; தமிழுக்கு மிகப் பெரும் வஞ்சகமே செய்துள்ளார்.
1985 இல் அழகன்குளம் அகழ்வாய்வினை ஒழுங்கான முறையில் செய்திருந்தால், அப்போதே தமிழின் தொன்மை வெளிவந்திருக்கும். அப்போது அவர் செய்தது எல்லாம் வெறும் கண்துடைப்பே. கிடைக்கும் தொல்லியல் கண்டுபிடிப்புகளை அரசுக்குத் தெரியப்படுத்தும் முன், சங்கராச்சாரியாருக்கே தெரிவிப்பார்; பின்பு சங்கராச்சாரியார் வெளியிடச் சொன்னதை மட்டுமே வெளியிடுவார். மேலும் அவர் எழுதிய இரு பொத்தகங்களே ( படங்களைக் காண்க) அவரது நோக்கத்தினை வெளிக் கொண்டுவரும். குறிப்பாக இரண்டாவது படமாகவுள்ள நூல் வெளிவந்த பின், அதன் உள் நோக்கத்தினை வெளிக்கொண்டு வர ‘வினவு’த் தளத்தில் நான் எழுதிய கட்டுரை வருமாறு ( கீழுள்ள இணைப்பினைச் சொடுக்கிக் காணலாம்)


திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை | வி.இ. குகநாதன்
மேலும் கீழடி அகழ்வாய்வு முடிவுகள் வெளிவந்த போது, அவை நம்பத் தகுந்தவையல்ல, கரிமச் சோதனைத் ( Carbon dating) திகதியிடல் முறையினை ஏற்க முடியாது என்று கூறியமை நினைவிலிருக்கலாம். உலகெங்கும் கரிமச் சோதனையே நம்பத்தகுந்த காலக் கணிப்பு முறையாக இருக்க, இவர் இப்படிக் கூறியதனை என்ன சொல்வது! அதுவும் ஒரு முன்னைநாள் தொல்லியல் அதிகாரி அவ்வாறு கூறியமையினை எவ்வாறு எடுத்துக் கொள்வது!
இவர் தமிழுக்காக எதனையும் செய்யவில்லையா? என்றால் செய்துள்ளார். கோவையில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஹெர்மன் டீக்கன் போன்ற வெளிநாட்டு அறிஞர்களுடன் வாதிட்டு, சங்க இலக்கியங்களின் காலத்தினை நிலைநாட்டினார் ( அப்போதைய காலக் கணிப்பான பொது ஆண்டினை ஒட்டி) .
அவரைப் பொறுத்த வரையில் தமிழானது சமற்கிரதத்தின் ஒரு கிளை மொழி/ ஒரு வட்டார வழக்கு. தமிழின் தொன்மை எக்காரணம் கொண்டு சமற்கிரதத்தின் தொன்மைக்கு முன் செல்லக்கூடாது. வட இந்தியாவின் வழி வந்ததே எல்லாம் என்ற வரையறைக்கு உட்பட்டே தமிழ்த் தொண்டு செய்தவர். இதனைப் புரிந்து கொண்டாலே அவரின் பங்களிப்பினையும், அவர் பங்கு கொண்ட தமிழ் அழிப்பினையும் அறிந்து கொள்ள முடியும்.
ஒருவர் இறந்துள்ள நிலையில் அவரின் குறைகளை எழுதுவது அறமல்ல ( இறப்பினைக் கொண்டாடும் மதவாதிகளின் செயல் போல அது); எனினும் அவருக்கு அரச மரியாதை செய்ய வேண்டும் என தமிழ் அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே கூறும் போது, என்னால் இதனை எழுதாமல் இருக்கவும் முடியவில்லை.
மறுபடியும் சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்; ஆனால் அரச மரியாதை எல்லாம் தேவையில்லாத ஆணி.
நன்றி:
வி.இ.குகநாதன்.
முகநூல் பகிர்வு.