‘Live TWICE , Love ONCE ‘ எனும் அபூர்வமாக காண வாய்க்கும் படமொன்றை நெட்பிளிக்சில் கண்டேன். நண்பர் பேரா. ஜெயரஞ்சன் பரிந்துரைத்தார்.
காதல் காவியம்தான். கொஞ்சம் மிகை உணர்ச்சிமயமானதும் கூட. ஆனாலும் உருக வைக்கும் காவியமே. அல்சைமர் நோயின் பிடியில் சிக்கி அமிழ்ந்து போகும் நிலையில் இருக்கும் கணிதப் பேராசிரியர். முற்றாக நினைவு அழிந்து விடுவதற்குள் தனது பால்யக் காதலியை பார்த்து விட எண்ணுகிறார்.
தனது மகள் மற்றும் பேத்தியின் உதவியோடு ‘மார்கரிட்டாவை’ பார்க்கும் முயற்சியில் பல தடைகள் கடந்து பத்து வயது பேத்தியின் சோசியல் மீடியா ( முகநூல்தான் ) தொடர்பில் அது நடந்தேறுகிறது.
ஆனால் அவரது ஆவலான ‘ மார்கரிட்டா ‘ எப்போதாவது தன்னை நினைத்தாளா, இன்னும் நினைவில் வைத்திருக்கிறளா ‘ என்பதற்கான பதிலளிக்கும் நிலையில் அவள் இல்லை. ‘ செனைல் டிமன்சியா ‘ வில் நினைவின் தடம் மறந்தவளாய் இருக்கிறாள்.
மனம் சோர்ந்து திரும்பும் போது , அவள் வரைந்து கொண்டிருக்கும் வடிவத்தைக் காட்டி அவள்‘ எழுத்தும் எண்ணுமான’ இந்தப் படத்தை மட்டுமே வரைந்தபடி இருக்கிறாள் என அவளது கணவர் சொல்கிறார். அது அவர்களின் கடைசி சந்திப்பின் போது அவள் வரைந்த உரு . விடை கிடைத்த மகிழ்வோடு அல்சைமருக்குள் அமிழ்ந்து விடுகிறார் ‘ கணிதமும் ஒருவித மொழியே’ என அடிக்கடி சொல்லும் பேராசிரியர். பின்னமான எழுத்தும் எண்ணுமான அவளது படமே அவர் புரிந்து கொள்ளும் இறுதியான மொழி. அதன் பின் மொழியின் பிடி நழுவி விலகிவிடுகிறது.
மரியா ரிபோல் இயக்கத்தில் நெகிழ வைக்கும் காவியம் இந்தப் படம். அப்பா – மகள்- ஊனமுற்ற பேத்தி உறவின் ஒவ்வொரு நொடியையும் செதுக்கியிருக்கிறார். மார்க்ரிட்டாவை தேடும் காட்சிகள், அதனூடாக மகளின் மணமுறிவு , அம்மா-மகள் bonding எனக் காட்சிகள் . அப்பாவை முதியோர் இல்லத்தில் விடும் காட்சியில் அப்பா- மகள் பிணைப்பு வெளிப்பாடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் அற்புதம். அதைத் தொடரும் கனவா/ நினைவா என்ற தெளிவற்ற காட்சியில் , இளம் பிராயத்துக் கடைசிச் சந்திப்பின் போது அவர் மார்கரிட்டாவோடு போக மறுத்த கடற்கரையில் அவர்கள் இருப்பதாக காட்சிப்படும் ‘ இருப்பு’ ஓவியத்தின் தன்மை கொண்டது.
நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன். நல்ல படம் பாருங்கள்.

நன்றி: சுப குணராஜன்.
முகநூல் பகிர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here